தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணியின் அனுபவங்கள் பகுதி-29 (16.06.2020)
சட்டமன்றத்தில் மது ஒழிப்பு பா.ம.க...
ஜி.கே.மணி:பேரவைத் தலைவர் அவர்களே,தமிழ்நாட்டில் மது குடிப்பழக்கத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை, இலட்சக்கணக்கான குடும்பங்களின் அவல நிலையை இதே அவையில் நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன்.எங்கள் உறுப்பினர்களும் வாதாடி வருகின்றார்கள்.அரசு செவி சாய்க்காமல் உள்ளது மிகுந்த கவலையளிக்கிறது.பெண்களின் கண்ணீர் கதையையும் எடுத்துரைக்கின்றோம்.நான் அரசை வலியுறுத்துவது தமிழ்நாடு முழுவதும் இதற்காக "வாக்கெடுப்பு" நடத்துங்கள்.ஒட்டுமொத்த பெண்களும் மது வேண்டாம் என்று வாக்களிப்பார்கள்.ஆண்களிலும் ஏன் குடிப்பவர்கள் கூட மதுக்கடை வேண்டாம் என்று வாக்களிப்பார்கள்.
குடிப்பவர்களைப் பார்த்து நான் பல பேரை கேட்டிருக்கின்றேன். அவர்களும் சொல்கிறார்கள். ஒருமுறை நான் காரில் போய்க்கொண்டிருக்கும்போது மது குடித்த ஒருவர் சாலையின் நடுவில் தல்லாடி,தல்லாடி நடக்கிறார். திடீரென கீழே விழுந்தார்.உடனே வண்டியை நிறுத்தி,கீழே இறங்கியவுடன் என் உதவியாளர்கள், ஓட்டுநர் அவரை தூக்கினார்கள். நானும் ஏம்பா? (கையைப்பிடித்து) குடித்து இப்படி வீணா போறியே ஏதாவது வண்டி வேகமாக வந்து அடிச்சுட்டு போயிட்டா என்ன ஆவது என்றேன்.உடனே குடிகாரர் என்னை குடிக்க வேண்டான்னு சொல்றியே,நீ கடையை மூடச்சொல்லு.நான் ஏன் குடிக்கிறேன் கடையிருந்தா குடிப்பேன்,இல்லன்னா குடிக்க மாட்டேன் என்றார்.
ஆக குடிகாரன் சொல்வதுகூட மதுக்கடை மூட வேண்டும் என்பதுதான்.கடையை மூடுவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.ஒன்று கள்ளச்சாராயம் பெருகிவிடும். இரண்டு அரசுக்கு வருவாய் போய்விடும்.
பா.ம.க நாங்கள் சொல்கிறோம், ஒரு சொட்டு கள்ளச்சாராயம் இல்லாமல் செய்ய முடியும்.அரசு வருவாய்க்கு வழிகளை இதே அவையில் பட்டியலிட்டு பலமுறை கூறி வருகின்றேன்.
கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த காவல் நிலைய உதவி ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்(VAO), ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர்தான் முழு பொறுப்பு என்று ஒப்படைக்கலாம். ஒரு கிராமத்திற்கு 5,6 பெண்கள் கொண்ட குழு அமைத்து,ஒரு தொலைபேசி எண் கொடுத்து,போன் செய்து தகவல் சொல்லுங்கள்,யார் பெயரும் சொல்லப்பட மாட்டாது என்று நியமித்தாலே போதுமானது. கிராமங்களில் எல்லோரிடத்திலும் கைபேசி உள்ளதே.உடனே தகவல் கொடுத்து விடுவார்கள்.அரசு நினைத்தால் செய்யலாம்.ஒன்றே ஒன்று,அரசுக்கு அக்கறை வேண்டும்.
முதலமைச்சர் அவர்களே, கள்ளச் சாராயம் விற்றால் அந்தப்பகுதி சப்-இன்ஸ்பெக்டர்,கிராம நிர்வாக அலுவலர் பதவி பறிபோகும் என்று சொல்லப்பட்டதே,அதை நடைமுறைப்படுத்தலாம்.ஒரு சொட்டு கள்ளச்சாராயம் இல்லாமல் செய்ய முடியும்.பெண் முதலமைச்சர் காலத்தில் மதுவை ஒழித்து பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அரசு பெண்கள் தாலிக்கு தங்கம் கொடுக்கிறது. இன்னொரு பக்கம் குடித்து,குடித்து இறந்தவனின் மனைவி இளம்வயதிலேயே விதவையாகி, இளம்பெண்கள் தாலி பறிபோவதே ஏராளம்.
முதலமைச்சர் அம்மையார் அவர்கள்:மிஸ்டர் மணி அவர்களே, தாலிக்கு தங்கம் கொடுப்பது எனது மகத்தான திட்டம்.அதை கொச்சைப் படுத்த கூடாது. கணவனால் கைவிடப்பட்ட ஏழை கைம்பெண்ணின் மகள் திருமணத்துக்கு,ஏழை விதவைப் பெண்களின் மகள் திருமணத்துக்கு, நலிவுற்ற குடும்பங்களின் பெண் திருமணம் என்று தாலி வாங்க முடியாத குடும்பங்கள் எவ்வளவு உள்ளன ? அவர்களுக்கான உதவிதான் இது.
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,கொச்சைப்படுத்தும் நோக்கத்துடன் சொல்லவில்லை.மது குடித்து இறப்பதனால் இளம் விதவைகள் ஆண்டுதோறும் இந்தியாவில் தமிழ்நாடு தான் முதலிடம் என்று சொல்லப்படுகிறது. இளம் வயதிலேயே பெண்கள் தாலி பறிபோகிறது என்பதைத்தான் சுட்டிக்காட்டி,அதை தடுக்க,மகளிரைக் காக்க மதுக்கடைகளை மூடலாமே என்றுதான் வற்புறுத்துகின்றேன்.
மீண்டும்... ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு,தீபாவளி,பொங்கல் போன்ற முக்கிய நாட்களில் ஒரு நாளில் ரூபாய் 100 கோடிக்கு மது விற்பனை என்று செய்தி வருகிறது. அதிக விற்பனை என்பது மதிப்பிற்குரியது அல்ல.
அதிகமானவர்களை குடிக்க வைக்கிறோம் என்பது மெல்லச் சாகடிக்கும் விஷம்(SLOW POISON). சென்னையில்,மகாபலிபுரம் சாலைகளில்,நட்சத்திர விடுதிகளில் எவ்வளவு அறுவறுப்பு நிகழ்ச்சிகள், சாலைகளில் ஒரே இரவில் எத்தனை விபத்து?இளைஞர்கள்_ இளம்பெண்கள் மரணம் என்ற செய்தி இது நல்ல அறிகுறியா ?
மதுவை ஒழிப்போம்... மக்களைக் காப்போம் என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் "பா.ம.க மகளிரணி மது ஒழிப்பு மாநாடு" மாவட்டந்தோறும் நடத்தினோம்.அந்த மாநாட்டில் விதவைப்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்கள்,மகளிர் அமைப்பினர்,சுதந்திரப் போராட்ட தியாகிகள்,மதுஒழிப்பு ஆர்வலர்கள் பேசுவார்கள்.இறுதியில் எங்கள் மருத்துவர் அய்யா,நான்,எங்கள் நிர்வாகிகள் பேசுவோம்.அதிக குடியினால் பாதிக்கப்பட்ட விதவைப்பெண்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல்,குடும்பம் நடத்த கஷ்டப்படுவதை கண்ணீர் விட்டு புலம்பிக்கொண்டே,தங்களது சோகக் கதையை சொல்லும்போது கூட்டத்திலிருந்த பல்லாயிரக் கணக்கான பெண்களும், ஆண்களும் கண்ணீர் விடுவார்கள். பெண்கள் தேம்பித்தேம்பி அழுவார்கள்.எங்களை கண்கலங்க செய்யும்.நாங்களும் கண்கலங்குவோம்.அவ்வளவு சோகக் கதையால் புலம்புவார்கள்.நெஞ்சில் ஈட்டியால் தாக்குவதுபோல் இருக்கும்.
காஞ்சிபுரம் மாநாட்டில் 25,000 பெண்கள் பங்கேற்றார்கள். ஒவ்வோரு மாநாடும் ஒன்றையொன்று விஞ்சுகிற அளவுக்கு சென்னை,திருவள்ளூர், வேலூர்,திருவண்ணாமலை,சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி,விழுப்புரம், கடலூர்,அரியலூர்_பெரம்பலூர், தஞ்சை,நாகை,திருவாரூர்,திருச்சி, கரூர்,நாமக்கல்,ஈரோடு,கோவை, நீலகிரி,திண்டுக்கல்,மதுரை,தேனி, சிவகங்கை,விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி,திருநெல்வேலி (முன்னாள்), கன்னியாகுமரி என எல்லா மாவட்டங்களிலும் மாநாடு நடத்தினோம்.ஒவ்வொரு மாவட்டத்தை விஞ்சுகிற அளவுக்கு பெண்கள் கூட்டம்.கோவில்பட்டி (தூத்துக்குடி)யில் 17,000 பெண்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாவட்ட மாநாட்டிலும் அந்தந்தப் பகுதியின் பெண்கள் மதுவின் சோகக்கதைகளை சொல்லியது எல்லோரையும் நிலைகுலைய வைத்தது.இந்த பெண்கள் கூட்டம் மது ஒழிக்கப்பட வேண்டும் என்பதையே காட்டுகிறது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஒரு மாவட்டத்திற்கு 2, 3 இடங்கள் என்று மது ஒழிப்பு பரப்புரை, (பிரச்சார) நிகழ்ச்சிகள், பேரணிகள்,பொதுக்கூட்டங்கள், மகளிரணி சார்பில் "டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்" நடத்தினோம்.இதில் மருத்துவர் அய்யா,நான்,எங்கள் நிர்வாகிகள், மகளிர் அணியினர் ஆங்காங்கே கைது செய்யப்பட்டோம்.இதுபோல் பலமுறை பூட்டு போடும் போராட்டம் நடத்தினோம்.சென்னையிலும், பல்வேறு இடங்களிலும் கருத்தரங்க கூட்டம் நடத்தினோம்.
இதையெல்லாம் இங்கே குறிப்பிட காரணம் பெண்கள் மத்தியில் அவ்வளவு பாதிப்பு இருக்கின்றது என்பதை அரசின் கவனத்திற்கு செல்லவும்,மக்கள் நலனில் அக்கறை கொண்டு மருத்துவர் அய்யா அவர்களும்,பா.ம.க நாங்கள் மதுவை ஒழிக்க வேண்டும் என்று இதற்கு தனியே இயக்கமே நடத்தி வருகின்றோம்.
மீண்டும்...
ஜி.கே.மணி:முதலமைச்சர் கலைஞர் அவர்களே,காந்தி பிறந்த மண் குஜராத்தில் மதுவிலக்கு தொடர்ந்து உள்ளதே! தமிழ்நாட்டில் ஏன் உங்களால் முடியாதா? நீங்கள் தான் மதுவிலக்கை ரத்து செய்தீர்கள். மீண்டும் நீங்களே மதுவிலக்கு சட்டம் கொண்டு வாருங்கள்,மதுவை ஒழியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
முதலமைச்சர் அவர்கள்:மணி அவர்களே,(சற்று ஆவேசமாக) தொடர்ந்து குற்றச்சாட்டு சொல்லக்கூடாது.நானும் மதுவிலக்கை எங்கள் ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தியிருக்கின்றேன். நீங்கள் சொல்லுகின்ற குஜராத் மாநிலத்தில்,காந்தி பிறந்த இடம் போர்பந்தரில் காந்தியின் பூர்வீக வீட்டுக்கு பக்கத்திலேயே அடிபம்பு மூலம் சட்டவிரோதமாக மது விற்கப்படுகிறது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்.
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,இதே அவையில் இதற்கு முன்பும் நீங்கள் சொல்லியிருக் கிறீர்கள்.இது திட்டமிட்டு காந்தியின் ஊரை,காந்தியின் மது ஒழிப்பை கொச்சைப்படுத்துவதற்காக சொல்வதாகவே கருதுகின்றேன். இதேபோல் மணிப்பூர்,மிசோரம், நாகாலாந்து,லட்சத்தீவுகள் என அங்கே எல்லாம் மதுவுக்கு தடை விதித்துள்ளதே.
முதலமைச்சர் கலைஞர் அவர்களே, பெரியார் வழியில்,அறிஞர் அண்ணா வழியில் ஆட்சி நடத்தும் நீங்கள் அவர்கள் வழியை பின்பற்ற வேண்டாமா?அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது அதிகாரிகள் சிலர் அரசின் வருவாய்க்காக மதுக்கடைகளை திறக்கலாம் என்று சொன்னதற்கு உடனே அறிஞர் அண்ணா_"அரசின் வருமானத்திற்கு மதுவிலக்கை ரத்து செய்வது மூட்டைப்பூச்சிக்காக வீட்டை கொழுத்துவதற்கு ஒப்பானது" என்றும்,அண்ணா இன்னொரு உதாரணமும் சொன்னது "மது விற்பதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் என்பது புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என்று"(கூறினார்).தந்தை பெரியார் கள்ளுக்கடை மறியல் செய்தார்.அவரது மனைவி மற்றும் தங்கை_நாகம்மாவும், கண்ணம்மாவும் அவர்கள் தோட்டத்தில் 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினர்.அந்த தலைவர்கள் வழியில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தலாமே! மதுக்கடைகளை மூடலாமே!
முதலமைச்சர் அவர்களே, திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பறையில் 4 மாணவர்கள் மது குடித்து மயங்கிய நிலையில் பார்த்து ஆசிரியர் விசாரித்தபோது உலறினார்கள்.மது குடித்தது கண்டுபிடிக்கப்பட்டது நாடு முழுவதும் அது செய்தியாக வந்தது.
இரண்டு மாணவர்கள் மாலை நேரத்தில் வகுப்பறையில் மேஜை, நாற்காலிகளை திருடிச்சென்று விற்று பிராந்தி குடித்த செய்தி, ஈரோட்டில் பெண்கள் டாஸ்மாக் கடையில் பிராந்தி வாங்கி நின்று குடித்துவிட்டு தள்ளாடுவது, ஒரு கல்லூரி மாணவி குடித்துவிட்டு ஆட்டோவில் உட்கார்ந்து ஓட்டுனரிடம் தாறுமாறாய் பேசி கீழே விழுந்து கிடந்தது, இதுபோல் ஏராளமாக நாடு முழுவதும் நாளேடு களில் செய்திகள் வருகின்றதே இது வளர்ச்சியா? ஒருநாள் சட்டமன்றத்தில் நான் கஞ்சா பொட்டலம் கொண்டு சென்று எடுத்துக்காட்டி முதலமைச்சர் அவர்களே,சென்னை மகளிர் கல்லூரி விடுதி நுழைவுவாயில் முன்பு கஞ்சா பொட்டலம் மாணவிகளுக்கு விற்பனை செய்து கொண்டிருந்தபோது எனக்கு தகவல் கிடைத்து,ஒரு ஆள் அனுப்பி வாங்கி வரச்சொல்லியதுதான் இது.மகளிர் விடுதியில் கஞ்சா பழக்கம் அதிகம். கல்லூரி மாணவ மாணவிகள் விடுதியில் போதை ஊசி போடும் பழக்கம் அதிகம். சாதாரண பள்ளிகளுக்கு முன்பு பெட்டிக்கடையில் பான்பராக்,குட்கா போன்ற போதை லாகிரி வஸ்துக்களை சாதாரண பள்ளிக்கூட மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வாங்குகிறார்கள்.இந்த பழக்கம் நாளை என்ன ஆகும்? இதை அனுமதிக்கலாமா? நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
கல்லூரி மாணவ மாணவிகளின் பிறந்தநாள் விருந்து மதுதான். வெளியில் இளைஞர்கள், பெரியவர்கள்,சில பெண்களும் சேர்ந்து திருமணம்,திருவிழாக்கள், துக்க நிகழ்ச்சி(சாவு) என எல்லாவற்றிலும் மது வினியோகம் தான் பழக்கமாகிவிட்டது.
காந்தி பிறந்த அக்டோபர் 2ம் நாள் சென்னை,நினைவரங்கம் 2008 ல் (மெமோரியல் ஹால்)எதிரில் பா.ம.க சார்பில் காந்தி உருவ(செய்யப்பட்ட) சிலை முன் குடியினால் கணவனை இழந்த விதவைகள் காந்தியிடம் முறையிடும் ஒப்பாரிப் போராட்டம் நடத்தினோம்.அதில் விதவைகள் மட்டுமே 1,500 பெண்கள் கலந்து கொண்டனர்.வேலூர் மாவட்டம் (அப்போது),திருப்பத்தூர் அடுத்துள்ள மாடப்பள்ளி என்ற ஒரு கிராமத்தில் மட்டும் 200 விதவைப்பெண்கள் நான்கு பேருந்தில் T.K.ராஜாMLA உடன் வந்து கலந்துகொண்டனர். மருத்துவர் அய்யா அவர்களும், நானும்,A.K.மூர்த்தி மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டோம். வந்திருந்த விதவைப் பெண்கள் ஒவ்வொருவரும் மது குடித்த கணவன் இழந்த கதையையும்,அதன் பின்னர் குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் உணவுக்கே கஷ்டத்துடன் கூலிவேலை செய்து குடும்பம் நடத்தும் சோகக் கதைகளை சொல்லி ஒப்பாரி வைத்தார்கள். அதில் ஒரு அம்மா சொன்னது.நான் பணக்கார வீட்டுப்பெண்.B.A படிக்க வைத்து வசதியான குடும்பத்தில் படித்தவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து இரண்டு ஆண்கள்,ஒரு பெண் குழந்தை பெற்று வளர்த்தோம்.இடையில் என் கணவர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி கொஞ்சம் கொஞ்சமா நிலம்,வீடு என எல்லா சொத்தும் விற்று அழிச்சிட்டாறு. உடல் நலம் கெட்டு கடன் வாங்கி ஆஸ்பத்திரி போய் இறந்துட்டாரு.நான் விதவையானேன்.என் மூத்த மகன் கல்யாணம் செய்து அவனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் அவனும் குடிச்சு குடிச்சு இறந்துட்டான்.என் மகளை கட்டிக் கொடுத்தேன். மருமகன் சின்ன வயசிலே குடிகாரன் ஆனான். குடிக்காதே என்று மனைவி சொன்னா. உங்கப்பன் குடிக்கலையா போடின்னு அடி உதை.கடைசியில மருமகனும் செத்துட்டான்.நானும், முதல் மருமகள்,மகள் மூன்று பேரும் விதவைகள்.சின்ன மகன் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறான்.அவனும் குடிச்சிட்டு ரோட்டில கிடப்பான். இராத்திரியிலே யாராவது ஆட்டோவில் தூக்கி வந்து போட்டுட்டு போவாங்க.அவனும் சாகுற மாதிரி இருக்கான்.இப்படியான எங்க குடும்பமே விதவைக்கோலம்.என் கதையை கேளுங்கன்னு அந்த அம்மா சொல்லி அழ,அதைப்பார்த்து வந்த பெண்கள் எல்லாம் தேம்பித் தேம்பி அழ,போராட்ட செய்தி எடுக்க வந்த பெண் நிருபர் அழ,ஆண் நிருபர்கள் கண்கலங்க,மருத்துவர் அய்யாவும், நானும்,மற்ற எல்லோரும் கண் கலங்கினோம்.
நெஞ்சை உருக்குகிற காட்சியாக, அவ்வளவு விதவைப் பெண்களின் சோகக்கதை எல்லோர் மனதையும் வாட்டி வதைத்தது.அவ்வளவு சோகம் இது எதனால் ?மதுவினால். மதுவிலக்கை தேசிய கொள்கையாக கொண்டு வரப்பட வேண்டுமென வலியுறுத்தினேன்.
மருத்துவர் அய்யா அவர்களும், நானும் இந்து மத துறவிகள், கிறித்துவ மத ஆயர்_பாதிரியார்கள், இஸ்லாம் மத அலீம் உலமா_முத்தவள்ளிகள்,ஜெயின் மத அமைப்பின் தலைவர்கள் என எல்லா மத பெரியவர்களும் மற்றும் எல்லா சமுதாய (சாதி_சங்கம்), அமைப்புகளின் தலைவர்கள் என மொத்தம் 42 பேர் வந்து தங்களைச் சந்தித்து எல்லோரின் சார்பில் மருத்துவர் அய்யா அவர்கள் உங்களிடம் மதுக்கடைகளை ஒழிக்க, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி 40 நிமிடங்கள் பேசினார்.
அப்போது நீங்களும் பா.ம.க மது ஒழிப்பு கொள்கைதான் என்னுடைய கொள்கையும்.நான் படிப்படியாக கடைகளை மூடி விடுகிறேன் என்று வாக்குறுதியளித்தீர்கள். இன்னும் நடக்கவில்லை என்று கேட்டேன்.
முதலமைச்சர் அவர்கள்: நண்பர் மணி அவர்களே,இப்பொழுது விற்பனை நேரத்தை குறைக்கின் றேன்.பின்னர் படிப்படியாக கடைகளை மூடி விடுகிறேன் என்று சொல்லி விற்பனை நேரத்தை குறைத்தார். சட்டமன்றத்தில் பா.ம.க மது ஒழிப்பு நடவடிக்கை இன்னும் நிறைய உள்ளது.
சட்டமன்ற நிகழ்வுக்கு பின்பும் தொடர்ந்து போராடிவருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் சோலாங்குப்பம் கிராமத்தில் 4 வயது சிறுவன் மது குடித்துவிட்டு போதையில் பேசிய செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை உருவாக்கியதே. மாநாட்டில் மருத்துவர் அன்புமணி அவர்களின் "முதல்நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு" என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது.'மது பாட்டிலில் மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு' என்ற வாசகம்.'குடிக்காதே படி படி' என்பவர் மருத்துவர் அய்யா அவர்கள்.
நாளை மீண்டும் தொடரும்... பகுதி -30
No comments:
Post a Comment