திருமணத்துக்கு சென்றுவருவதாக பொய் கூறி சென்னையிலிருந்து வந்த 7 பேருக்கு கொரோனா: 9 பேர் மீது வழக்குப் பதிவு
சீர்காழி அருகே கோதண்டபுரம் வெட்டாத்தங்கரை கிராமத்திற்கு கடந்த 12-ம் தேதி சென்னை தி.நகரில் தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்த 9 பேர் ஒரே வாகனத்தில் புறப்பட்டு வந்தனர்.
அவர்களை நாகை மாவட்ட எல்லையான கொள்ளிடம் சோதனை சாவடியில் போலீசார் மடக்கி சோதனை செய்தபோது தாங்கள் அனைவரும் விருத்தாசலம் திருமண நிகழ்வில் பங்கேற்று திரும்புவதாக பொய்யாக கூறியதையடுத்து, அவர்களை வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தி கையில் சீல் வைத்து போலீசார் அனுப்பினர்.
அதனையடுத்து கிராமத்துக்கு சென்ற அவர்களை கிராம மக்கள் சென்னையிலிருந்து வந்தவர்கள் என சுகாதாரத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சுகாதாரத்துறையினர் வந்து 9 பேருக்கும் கொரோனா பரிசோதனை எடுத்து விட்டு, முடிவு வரும் வரை வீட்டில் தனிமையாக இருக்க சொல்லி சென்றனர்.
பரிசோதனை முடிவில் 9 பேரில் 7 பேருக்கு கொரோனா தொற்று 14ம் தேதி உறுதி செய்யப்பட்டு, மயிலாடுதுறை கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் பொய்யான தகவல் கூறி நோய் தொற்று பரவ காரணமாக இருந்ததாக கூறி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 7 பேர் உட்பட 9 பேர் மீது புதுப் பட்டினம் காவல் நிலையத்தில் நேற்று இரவு வழக்கு பதிவு செய்யப்பட்டது..
No comments:
Post a Comment