"OBC இடஒதுக்கீட்டுக்கு பாமக எதிரியா? பாஜக பினாமி கும்பலின் பித்தலாட்ட பிரச்சாரம்!" - Agnipuratchi

"OBC இடஒதுக்கீட்டுக்கு பாமக எதிரியா? பாஜக பினாமி கும்பலின் பித்தலாட்ட பிரச்சாரம்!"

Share This

"OBC இடஒதுக்கீட்டுக்கு பாமக எதிரியா? பாஜக பினாமி கும்பலின் பித்தலாட்ட பிரச்சாரம்!"

(நயவஞ்சகர்களின் கட்டுக்கதைகளை தகர்க்கும், கட்டாயம் படிக்க வேண்டிய விரிவான கட்டுரை)

பாமகவுக்கு எதிரான அபாண்டமான கட்டுக்கதை:

"பாட்டாளி மக்கள் கட்சி 30 ஆண்டுகளாக வன்னியர்களை ஏமாற்றி வந்துள்ளது என்பதற்கான ஆதாரம் உயர் நீதிமன்றத்தின் மூலமாக கிடைத்துள்ளது...

மத்திய சுகாதார அமைச்சராக இருந்தும் OBC பிரிவினருக்கு 1% கூட இடஒதுக்கீடு அளிக்காமல் பட்டை நாமம் சாத்தி உள்ளது. ஆனால், அதே காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 22.5% இடஒதுக்கீடு கொடுத்தது பாமக!"

"சுதந்திரம் அடைந்தது முதல் OBC பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லை என்று மத்திய அரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்திருப்பதன் மூலம் பாமக வன்னியர்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது...

OBC வகுப்பினருக்கு பாமக இடஒதுக்கீடு கொடுத்திருந்தால் இன்று OBC பிரிவினர் 30,000 பேர் முதுநிலை மருத்துவர் ஆகியிருப்பார்கள். அவர்கள் உங்கள் குடும்ப உறுப்பினராக் கூட இருந்திருக்கலாம்.." - இப்படி 'நெஞ்சை நக்குவது போன்று' ஒரு அபாண்டமான கட்டுக்கதையை பாஜக/ஆர்.எஸ்.எஸ் ஆதரவு கும்பல் வன்னியர்களிடம் வாட்ஸ்ஆப் மூலம் பரப்பி வருகிறது.

கட்டுக்கதைக்கு எதிரான உண்மை என்ன?:

"1.  கல்வியில் OBC இடஒதுக்கீட்டை சாதித்த கட்சி பாமக தான்?"

பாஜக பினாமிகள் பரப்பும் கட்டுக்கதையில் "சுதந்திரம் அடைந்தது முதலே OBC பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லை" என்பது மட்டும் தான் உண்மை. ஆனால், அவ்வாறு OBC இடஒதுக்கீடு இல்லாமல் போனதற்கு பாமக தான் காரணம் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான வாதம். வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைக்கும் கொடூரமான வன்மம்.

ஏனெனில், இந்தியாவில் சுதந்திரம் அடைந்தது முதலே இல்லாதிருந்த OBC கல்வி இடஒதுக்கீட்டை போராடி பெற்றுதந்து, அதனை 2006 ஆம் ஆண்டில்  சாத்தியமாக்கிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான்!   

"2. OBC இடஒதுக்கீடு வந்த வரலாறு என்ன?"

இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் 'இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்' 6.12.1946 அன்று அமைக்கப்பட்டது. மக்கள் தொகையில் 10 லட்சம் பேருக்கு ஒரு பிரதிநிதியை உறுப்பினராக நியமிப்போம் என்று கூறினர். வன்னியர் மக்கள் தொகைக்கு ஏற்ப குறைந்தது 4 உறுப்பினர்களாவது வேண்டும் என வன்னியர் சமூகத்தவர்கள் தில்லிக்கு தூது போனார்கள். ஆனால், ஒருவரை கூட நியமிக்கவில்லை. வன்னியர்கள் மட்டுமல்ல... இந்திய மக்கள் தொகையில் 52% அளவுக்கு கூடுதலாக இருக்கும் OBC வகுப்பினரில் இருந்து ஒருவர் கூட அந்தக் குழுவில் இடம்பெறவில்லை! அக்குழுவில் இருந்தவர்களில் மிகப்பெரும் பாலானோர் மக்கள் தொகையில் 5% கூட இல்லாத முன்னேறிய சாதியினர் ஆகும்.

அதாவது, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தலையெழுத்தை எழுதியவர்கள் - இந்திய மக்களில் சுமார் 60% மக்களை பிரதிநிதித்துவ படுத்தவே இல்லை. இதனால் OBC வகுப்பினரை முற்றிலும் புறக்கணித்து இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டது. எனினும், அரசியல் அமைப்பு சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை (Backward Class) - SC/ST/OBC என்று மூன்றாக பிரித்து, ஏற்கனவே உறுதியான தகவல்கள் இருப்பதால் SC/ST வகுப்பினருக்கு மட்டும் மக்கள் தொகைக்கு ஈடாக இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

அதே நேரத்தில், OBC பிரிவினருக்கான உரிமையை அளிக்கும் வகையில், அவர்களுக்கான ஒரு குழுவை அமைத்து  அதன் மூலம் பரிந்துரைகளை பெற்று செயல்படுத்தும் வகையில் அரசியல் அமைப்பின் 340 ஆம் பிரிவை உருவாக்கி, OBC வகுப்பினருக்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி வைத்தார் அண்ணல் அம்பேத்கர்.
ஆனாலும், அரசியல் சட்டம் 1950-ல் அமலுக்கு வந்து ஒரு ஆண்டு கடந்தும்  340 ஆம் பிரிவின் கீழ் OBC பிரிவினரின் உரிமையை இந்திய அரசு காப்பற்றவில்லை என்பதையும் ஒரு குற்றச்சாட்டாக கூறி 1951 ல் தனது சட்ட அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் அண்ணல் அம்பேத்கர்.

அதற்கு பின்னர் இந்திய அரசு நியமித்த காகா கலேல்கர் குழு OBC பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் 25%, 33.5%, 40% என பிரிவு வாரியாகவும், கல்வியில் 70% இடஒதுக்கீடும் அளிக்க 1953-ல் பரிந்துரை செய்தது. கூடவே, 1961 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்தி உரிமை அளிக்க வேண்டும் என்றது. அந்த அறிக்கையை குப்பைக்கு அனுப்பினார் ஜவகர்லால் நேரு.

பின்னர்  1979-ல் மொராஜி தேசாய் அமைத்த மண்டல் குழு, மக்கள் தொகையில் 52% உள்ள OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அளிக்க பரிந்துரை செய்தது (உச்சநீதிமன்றம் 1962 ஆம் ஆண்டு, எம்.ஆர். பாலாஜி வழக்கில் இடஒதுக்கீட்டிற்கு 50% உச்சவரம்பு விதித்ததால் இந்த நிலை). மண்டல் குழு அறிக்கையை கிடப்பில் போட்டார் ராஜீவ் காந்தி.

கடைசியில் 1990-ல் மண்டல் குழு அறிக்கையை செயல்படுத்த முடிவெடுத்து வேலைவாய்ப்பில் மட்டும் 27% இடஒதுக்கீடு அளித்தார் வி.பி. சிங். ஆனாலும், கல்வியில் OBC இ

டஒதுக்கீடு இல்லாத நிலையை மாற்ற, அதனை ஒரு கோரிக்கையாக வைத்து 2004 ஆம் ஆண்டு மத்திய கூட்டணி அரசில் இணைந்தது பாட்டாளி மக்கள் கட்சி.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாசு அவர்கள் 2006 ஆம் ஆண்டில் முன்னெடுத்த கடின முயற்சிகள் காரணமாக, அதே ஆண்டில் OBC இடஒதுக்கீட்டை சாத்தியமாக்க இந்திய அரசில் அமைப்பு சட்டத்தின் 93 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசில் 27% OBC இடஒதுக்கீடு அளிக்கும் சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து இடஒதுக்கீட்டின் எதிரிகள் நீதிமன்றத்துக்கு சென்றபோது, அங்கும் சென்று போராடி - OBC இடஒதுக்கீட்டு சட்டம் செல்லும் என்கிற தீர்ப்பை 2008 ஆம் ஆண்டில் பெற்றது பாட்டாளி மக்கள் கட்சி.

இந்த நீண்ட வரலாற்று மூடி மறைத்துவிட்டு, OBC பிரிவினருக்கு மருத்துவ கல்வி அகில இந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு இல்லாததற்கு பாமக தான் காரணம் என அபாண்டமாக அள்ளி வீசுகிறது பாஜக/ஆர்.எஸ்.எஸ் பினாமி கும்பல்!

"3.  மத்திய பாஜக அரசு நீதிமன்றத்தில் கூறியது என்ன?"

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் 17.6.2020 அன்று பதில் மனு தாக்கல் செய்துள்ள இந்திய அரசு பின்வரும் கருத்துக்களை நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

1) "நடப்பு 2020 - 21 கல்வி ஆண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டில் OBC இடஒதுக்கீட்டை அளிக்க முடியாது.

2) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால், மாநில அரசின் இடஒதுக்கீட்டு முறையின் கீழ் இடஒதுக்கீட்டை எதிர்காலத்தில் அனுமதிக்கலாம். ஆனால், அதுவும் கூட, 'SC/ST பிரிவினருக்கு அளித்தது போக மீதி இருப்பதில், மொத்த இடஒதுக்கீடு 50% மிகாத வகையில் அளிக்கலாம்" என்கிறது மத்திய அரசு! அதாவது, தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டை செயல்படுத்த முடியாது. BC/MBC பிரிவினரின் 50% இடஒதுக்கீட்டை 31% ஆக குறைக்க வேண்டுமாம்!

3) இப்போது இடஒதுக்கீடு இல்லாத பொது பிரிவில் அளிக்கப்படும் 77.5% இடஒதுக்கீட்டில், OBC ஒதுக்கீட்டால் குறைக்கப்படுவதற்கு ஈடான இடங்களை மாநில அரசுகள் புதிதாக உருவாக்கி அகில இந்திய தொகுப்புக்கு கொடுக்க வேண்டுமாம். இது நடப்பதற்கான வாய்ப்பே இல்லை..

4) இந்த களேபரத்துக்கு நடுவே, "இடஒதுக்கீடு அளிக்கப்படாத பிரிவினர் (UR)" என்று ஒரு புதிய வார்த்தையை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இது ஒரு அநீதியான பெயர் ஆகும். பொது இடஒதுக்கீடு (general category seats) எனும் எல்லா சாதிகளுக்குமான இடம்தான் இருக்கிறதே தவிர, இடஒதுக்கீடு இல்லாத சாதிகளுக்கான பிரிவு  (unreserved category seats) என்பது இல்லவே இல்லை."
இப்படி OBC பிரிவினரின் உரிமைகளை காலில் போட்டு மிதித்து, அநீதியான ஒரு பதிலை நீதிமன்றத்திடம் கூறியுள்ள பாஜகவுக்கு காவடி தூக்கும் நயவஞ்சக கும்பல் தான், பாமக மீது குற்றம் சாட்டி கட்டுக்கதைகளை பிரச்சாரம் செய்கிறது!

"4.  OBC பிரிவினருக்கு எதிரான வரலாற்று துரோகத்தை வீழ்த்திய கட்சி பாமக!"

மிக நீண்ட 56 ஆண்டுகால தாமதத்திற்கு பின்னர், மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் கடும் போராட்டத்தின் மூலம் இந்திய அரசியல் அமைப்பு திருத்தப்பட்டு (93 ஆவது திருத்தம்), மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

ஆனால், இதனை எதிர்த்து முன்னேறிய சாதியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கை நடத்துவதிலும் பாமக இணைந்தது. கர்நாடக மாநிலத்தின் அட்வகேட் ஜெனரலாக இருந்த ரவிவர்மகுமார் அவர்களை வைத்து வாதாடி, கல்வியில் OBC இடஒதுக்கீடு செல்லும் என்கிற தீர்ப்பினை 2008 ஆம் ஆண்டில் பாமக பெற்றது.

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து OBC இடஒதுக்கீட்டை செயலாக்கும் மத்திய  அரசு உத்தரவு 20.4.2008 அன்று வெளியிடப்பட்டது. அதன் படி 27% OBC இடஒதுக்கீடு ஆண்டுக்கு 9% ஆக 2008-09 கல்வியாண்டில் தொடங்கி மூன்று தவணைகளாக நிறைவேற்றப்பட்டது. 2010 - 11 ஆம் ஆண்டில் தான் முழுமை அடைந்தது. (ஆனால், 2009 ஆம் ஆண்டிலேயே பாமக மத்திய அரசில் இருந்து வெளியேறி விட்டது.)

ஆக மொத்தத்தில், விடுதலை இந்தியாவில், அகில இந்திய அளவில் 61 ஆண்டுகளாக இல்லவே இல்லாத, OBC கல்வி இடஒதுக்கீட்டை போராடி சாதித்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. 2004 ஆம் ஆண்டில் மத்திய அரசில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இதனை சாதித்தது பாமக. இந்த இடஒதுக்கீட்டு முறை 2011 ஆம் ஆண்டில் தான் முழுமை அடைந்தது.

இவ்வாறு, இந்தியாவின் OBC மக்களுக்கு எதிரான வரலாற்று துரோகத்தை வீழ்த்திய பாமக மீதுதான் பாஜக பினாமிகள் - OBC வகுப்பினருக்கு எதிரான கட்சி என வெட்கம் கெட்டு பிரச்சாரம் செய்கின்றனர்.

"5.  SC/ST-க்கு கொடுத்தது ஏன்? OBC பிரிவினருக்கு கொடுக்க முடியாதது ஏன்?"

பட்டியலின வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 1935 இந்திய அரசு சட்டத்தில் (Government of India Act 1935)

உறுதி செய்யப்பட்டது. பின்னர் சுதந்திர இந்தியாவில் 1950 இந்திய அரசியல் சாசனம் 341, 342 பிரிவுகளின் கீழ் மீண்டும் SC/ST இடஒதுக்கீடு உறுதி ஆனது. இதற்கான இந்திய அரசு உத்தரவுகள் 1950 ஆண்டில் வெளியானது.

ஆனால், OBC பிரிவினருக்கான வெலைவாய்ப்பு இடஒதுக்கீடு 1992 ஆம் ஆண்டிலும், கல்வி இடஒதுக்கீடு 2008 ஆம் ஆண்டும் வெளியானது. (2008 உத்தரவுக்கு மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களே முதன்மை காரணம்).

அதாவது, SC/ST பிரிவினருக்கு முழு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு 41 ஆண்டுகளுக்கு பின்னர் தான்  OBC பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது; 58 ஆண்டுகளுக்கு பின்னர் தான் கல்வியில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதுவும் கூட மக்கள் தொகை விகிதத்திற்கு மிக மிக குறைவாக அளிக்கப்பட்டது. இந்த மாபெரும் துரோகத்துக்கு  இந்திய அரசாங்கத்திலும் நீதித்துறையிலும் நீடிக்கும் முன்னேறிய சாதிகளின் அதிக்கம் தான் காரணம் ஆகும்.

“மருத்துவக் கல்வி 'அகில இந்திய ஒதுக்கீடு'”

இதனிடையே, 1986 ஆம் ஆண்டு முதல் - மாநிலங்களிடமிருந்து மத்திய அரசு பெற்றுக்கொள்ளும் 'அகில இந்திய ஒதுக்கீட்டு' (All India Quota - AIQ) மருத்துவக் கல்வி இடங்களில் எந்த இடஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. இதனை எதிர்த்து 2006 ஆம் ஆண்டில் Abhay Nath என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு குறித்த கேள்வி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களிடம் வந்த போது, 'SC/ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கலாம்' என்று நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதனால் SC/ST பிரிவினருக்கு  'அகில இந்திய ஒதுக்கீட்டில்' இடஒதுக்கீடு சாத்தியம் ஆனது.

இந்த வழக்கு நடைப்பெற்ற 2006 ஆம் ஆண்டில் OBC பிரிவினருக்கு மத்திய அரசு கல்வி இடங்களில் இடஒதுக்கீடே இல்லை. அந்த இடஒதுக்கீட்டை உருவாக்க அப்போது பாட்டாளி மக்கள் கட்சி தான் கடுமையான முயற்சியினை மேற்கொண்டிருந்தது.

மேலும், மத்திய அரசின் OBC கல்வி இடஒதுக்கீடு சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் 2006 ஆம் ஆண்டில் இடைக்கால தடை விதித்ததால் 2008 ஆம் ஆண்டு வரை அந்த விவகாரம் இழுத்தடிக்கப்பட்டது. நீதிமன்றத்திலும் பாமக போராடியது. கடைசியாக 2011 ஆம் ஆண்டில் OBC இடஒதுக்கீடு முழு செயல்பாட்டுக்கு வந்த காலத்தில் (2009 ஆம் ஆண்டிற்கு பின்னர்) பாமக மத்திய அரசில் இடம்பெறவே இல்லை!

இப்படியாக - மத்திய சட்டம் இருந்தும் அகில இந்திய ஒதுக்கீட்டில் 21 ஆண்டுகள் இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட SC/ST பிரிவினரின் உரிமைகளை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் உறுதிசெய்தார். ஆனால், OBC பிரிவுக்கான அத்தகைய சட்டம் இல்லாத நிலையில் அப்பிரிவுக்கு இடஒதுக்கீடு வழங்க வழியே இல்லை. OBC பிரிவுக்கான சட்டம் நடைமுறைக்கு வந்த காலத்தில்  பாமக மத்திய அரசிலேயே இல்லை.

இவ்வளவு பெரிய இமாலய சவாலை - அதுவும் 1935 ஆம் ஆண்டிலேயே சட்டப்படி உரிமையை கொண்டிருந்த SC/ST பிரிவினரையும், அதன் பின்னர் 73 ஆண்டுகள், அதாவது 2008 வரை, அதே உரிமைக்காக போராடிக்கொண்டிருந்த OBC பிரிவினரையும் ஒரே தட்டில் வைத்து - பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு அளித்த பாமக மத்திய அமைச்சர், OBC பிரிவு மக்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு அளிக்காமல் ஏமாற்றிவிட்டார் -  என மிக எளிதாக வெட்கம் கெட்டத்தனமாக குற்றம் சாட்டுகிறது பாஜக பினாமி கும்பல்.

"எச்சரிக்கை"

அப்பாவி வன்னியர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சி குறித்து இப்படி அபாண்டமான கட்டுக்கதைகளை பரப்பும் 'நவீன கோயபல்ஸ் கும்பலின்' நயவஞ்சக பிரச்சாரத்தை அனைவரும் அடையாளம் காண வேண்டும்.

வன்னியர்களை எப்படியாவது குழப்பி, மதக்கலவரத்துக்கான அடியாட்களாக மாற்றி, அவர்களை பலிகொடுத்து அதிகாரத்தை பிடிக்க முயலும் பினாமி கும்பலின் சதிகளை ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.

“If they (OBCs) do not wish to be under the thumb of others (Brahmins) they should concentrate two things, one is politics and the other is education.”

- Dr. B R Ambedkar

(குறிப்பு: அபாண்டமான பொய்க் கட்டுக்கதைகளை பரப்பி சமூகத்தில் வெறுப்பை உருவாக்குவது இனப்படுகொலையாளன் ஹிட்லர் உருவாக்கிய 'கோயபல்ஸ் பிரச்சார யுக்தி' ஆகும். இதே வழிமுறையை இதுவரை மதச்சிறுபான்மையினருக்கு எதிராக கட்டுக்கதையை உருவாக்க பயன்படுத்தினர். இப்போது OBC இடஒதுக்கீட்டுக்கு எதிரான பாஜக அரசின் துரோகத்தை மறைப்பதற்காகவும் பயன்படுத்துகின்றனர். அதில் ஒரு அங்கம் தான் பாமக OBC இடஒதுக்கீட்டின் எதிரி எனும் பித்தலாட்ட பிரச்சாரம் ஆகும்!)

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages