முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 31 - Agnipuratchi

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 31

Share This

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 31

(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)

30. தொடர் சாலைமறியல்
போராட்ட அறிவிப்பு

அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பார்கள். குத்தக் குத்த கும்பகர்ணனும் எழுவான் என்பார்கள். ஆனால், வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு தொடர்பாக வன்னியர் சங்கத்தின் பிரதிநிதிகளை  அரசு பேச்சுக்கு அழைக்கும் விஷயத்தில் இரண்டுமே நடக்கவில்லை. அதற்கு காரணம் இந்த விஷயத்தில் தமிழக அரசு தூங்கிக் கொண்டு இருக்கவில்லை. மாறாக தூங்குவதைப் போல நடித்துக் கொண்டிருந்தது. தூங்குபவனை எழுப்பலாம்... தூங்குவதைப் போல நடித்துக் கொண்டிருப்பவனை எழுப்ப முடியாது அல்லவா? அதைப் போலத் தான் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்; மற்ற சமுதாயத்தினருக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநாடு, பேரணி, பட்டினிப் போராட்டம், ஒரு நாள் சாலைமறியல், ஒரு நாள் தொடர்வண்டி மறியல் போராட்டம் என ஏராளமான போராட்டங்களை வன்னியர் சங்கம் நடத்தியும்,  அவற்றை மதித்து பேச்சு நடத்த எங்களை தமிழக அரசு அழைக்கவில்லை.

போராட்ட விளக்க மாநாடு

அதன்பிறகு தான் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தி ஒரு வாரத்திற்கு தொடர் சாலைமறியல் போராட்டம் நடத்த வன்னியர் சங்கம் முடிவு செய்தது. அதற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், தொடர் சாலைமறியல் விளக்கப் பேரணி மற்றும் மாநாட்டை 14.06.1987&இல் தருமபுரியில் நடத்தினோம்.  அத்துடன் வன்னியர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தை ஆதரித்து எழுதிய தராசு, அடியாரின் தங்க கருடன், கடலூர் தினத்தந்தி, புதுச்சேரி  மாலைமலர் ஆகிய இதழ்களுக்கான பாராட்டுக் கூட்டமாகவும் அந்த மாநாடு அமைந்திருந்தது.

போராட்ட விளக்க மாநாட்டையொட்டி மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டடது. பழைய தருமபுரியிலிருந்து மாநாட்டுத் திடலை நோக்கி நடத்தப்பட்ட பேரணிக்கு டி.என்.வி. வினோபா தலைமையேற்றார். இந்தப் பேரணியை இப்போது  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருப்பவரும், அப்போது கொளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக இருந்தவருமான ஜி.கே.மணி தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான வாகனங்களும், லட்சக் கணக்கான தொண்டர்களும் அணிவகுத்து வந்தனர். வன்னியர் சங்கம் நடத்திய பேரணியால் தருமபுரி நகரமே குலுங்கியது என்றால் அது மிகையல்ல.

பேரணியைத் தொடர்ந்து மாநாடு தொடங்கியது.  ஆ.அருணாசலப் படையாட்சி தலைமையில் நடந்த  மாநாட்டை, தோழர் இனமுரசு தொடங்கி வைத்தார். வன்னியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.இராமசாமி கவுண்டர், டி.பொன்னுசாமி கவுண்டர், கே.பெருமாள், டி.கோபாலன், டி.கே. ஆறுமுகம்,  பெரியசாமி ஆகியோர் மாநாட்டுக்கு முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் இராமலிங்கம் வரவேற்றார்.

வன்னியர் சங்கத் தலைவர் சா.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் பு.தா. இளங்கோவன், மூத்த நிர்வாகிகள் வேங்கைப் புலியன், சீ.கோ.மணியன், விருத்தாசலம் டாக்டர். ஆர்.கோவிந்தசாமி ஆகியோர் உரையாற்றி முடித்த பிறகு நிறைவாக நான் பேசத் தொடங்கினேன். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு கூட தமிழக அரசு முன்வராதது குறித்தும்,  ஒட்டுமொத்த தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் போராட்டம் நடத்துவதன் மூலம் தான் நமது கோரிக்கைகள் குறித்து அரசைத் திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்றும் முழங்கினேன். எனது உரையைக் கேட்டு கூட்டம் ஆர்ப்பரித்தது. நான் பேசி முடித்த போது நேரம் அதிகாலை 2.00 மணி.

பெரியார் பிறந்தநாளில் போராட்டம்

போராட்ட விளக்க மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்ட நிலையில், போராட்டத்திற்கான தேதிகளை முடிவு செய்வதற்காக வன்னியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 26.06.1987&இல் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. எனது முன்னிலையில் நடைபெற்ற பொதுக்குழுவுக்கு வன்னியர் சங்கத் தலைவர் சா.சுப்பிரமணியன் தலைமையேற்றார். அந்தக் கூட்டத்தில் தான் செப்டம்பர் 17&ஆம் தேதி முதல் 23&ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு தொடர் சாலைமறியல் போராட்டம் நடத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

போராட்டத் தேதிகளின் பின்னணியில் ஒரு காரணம் உள்ளது. தமிழ்நாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமைக்காக குரல் கொடுத்து போராடியவர் தந்தை பெரியார். அவரது பிறந்தநாளில் போராட்டத்தைத் தொடங்குவது தான் சரியானதாக இருக்கும் என்பதால் தான் அந்த தேதி முடிவு செய்யப்பட்டது.

பேச்சு நடத்த அழைக்கவில்லை

இந்தப் போராட்டம் குறித்த முறையான அறிவிப்பு 04.07.1987-இல் தமிழக அரசிடம் கொடுக்கப்பட்டது. காவல்துறைத் தலைவர் ஸ்ரீபாலிடம் 13.08.1987-இல் இதுகுறித்துக் கடிதம் தரப்பட்டது. அப்போதைய பிரதமர் இராஜிவ் காந்திக்கு 18.08.1987, 04.09.1987 ஆகிய நாட்களில் இருமுறை கடிதங்கள் எழுதப்பட்டன. இந்தக் கடிதத்தின் நகல்கள் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு முறைப்படி அனுப்பிவைக்கப்பட்டன. இந்தப் பணிகள் அனைத்தையும் வன்னியர் சங்கத் தலைவராக இருந்த சா.சுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ் அவர்கள் சிறப்பாக செய்தார்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் மற்ற அனைத்து சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வன்னியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட போதெல்லாம், அந்தப் போராட்டங்களின் நியாயம் குறித்து தமிழக அரசு சிந்திக்கவே இல்லை. மாறாக துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட ஒடுக்குமுறைகளை  கட்டவிழ்த்து விட்டு, போராட்டங்களை முறியடிக்கவே முயன்றது எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு. ஒருமுறை கூட போராட்டத்தின் வலிமையை உணர்ந்து கூட பேச்சு நடத்துவதற்கு அழைக்கவில்லை.

அதேபோல், இப்போதும் இட ஒதுக்கீடு கோரி ஒரு வாரத்திற்கு தொடர் சாலைமறியல் போராட்டம் நடத்தப் போவதாக வன்னியர் சங்கம் அறிவித்தும் கூட, அது குறித்து எங்களை அழைத்துப் பேச வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கோ, காவல்துறையினருக்கோ ஏற்படவில்லை. மாறாக, போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதில் தான் அவர்களின் கவனம் முழுவதும் இருந்தது.  இதற்காக வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டங்களை உளவுத்துறை காவலர்கள் முற்றுகையிட்டனர்.

தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்!

போராட்டத்தின் தேவையையும், நோக்கத்தையும் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்குவதற்காக மாநிலம் முழுவதும் தொடர் சாலைமறியல் விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதுமட்டுமின்றி, வன்னிய மக்களின் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத்தரப்பு  மக்களின் ஆதரவைக் கோரியும், அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும்,‘‘ அரசுக்கும், அனைத்து சாதி மக்களுக்கும்  வேண்டுகோள்’’ என்ற தலைப்பில் கனல் இதழில் தலையங்கம் எழுதினேன். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

‘‘ பிற சாதி மக்களையும் இந்த நேரத்தில் நாங்கள் ஒன்று வேண்டி கேட்டுக் கொள்கிறோம். எல்லா சாதி மக்களுக்காகவும் நாங்கள் பொதுவான கோரிக்கை வைத்துப் போராட்டத்தில் குதித்து விட்டோம். முதற்களப் பலியாக நாங்கள் எங்களை இந்த தியாகப் போராட்டத்தில் தீர்மானித்து இறங்கி விட்டோம்.

எங்களை நெஞ்சார வாழ்த்தி வழி அனுப்பி வையுங்கள். பாதிப்புகள் எங்களுக்கானாலும், பலன்கள்  எல்லோருக்கும் ஆகட்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு செல்லும் வன்னிய போராளிகளை  உளமார  வாழ்த்துங்கள்!
ஒடுக்கப்பட்ட சாதியினர் அனைவரும் ஒன்று திரண்டு போராடும் காலம் வரும் போது அனைவரும்  திரண்டு எழுந்து  ஆதிக்கச் சக்திகளை வீழ்த்திக் காட்டுவோம்’‘ என்று அந்த தலையங்கத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

போராட்ட ஏற்பாடுகள்

தொடர் சாலைமறியல் போராட்டத்திற்கு வன்னிய மக்களைத் தயார்படுத்தும் வகையில் ஊர்க்கூட்டம், ஒன்றியக் கூட்டம், மாவட்டக் கூட்டம் ஆகியவை இரு மாத இடைவெளியில் இரு முறை நடத்தப்பட்டன.  சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், சினிமா சிலைடுகள் ஆகியவற்றின் மூலம் போராட்டம் தொடர்பான தகவல்கள் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் பெரும் எழுச்சி ஏற்பட்டது.

சாலை மறியல் போராட்டத்திற்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் குடும்பத்திற்கு ஒரு ரூபாய் வீதம் நிதி திரட்டப்பட்டது. இந்தப் பணிகளை செய்வதற்காக போராட்டக்குழு, பிரச்சாரக் குழு, விளம்பரக்குழு,  தொண்டர் படைக்குழு, நிதிக்குழு என 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின்  பணிகள் தீவிரப் படுத்தப்பட்டன. இவற்றில் போராட்டக் குழுவுக்கு நான் தலைமையேற்றுக் கொண்டேன்.

போராட்டத்தை எப்படியாவது முறியடித்து விட வேண்டும் என்பதில் தமிழக அரசும், காவல்துறையும்  உறுதியாக இருப்பதை நான் அறிந்திருந்தேன். போராட்டத்தை முறியடிக்க வேண்டுமானால், போராட்டம் குறித்த எங்கள் உத்திகள் என்ன? என்பதை அவர்கள் அறிந்து கொள்வது அவசியம். அதனால், எங்கள் ஆலோசனைக் கூட்டங்களை உளவு பார்க்க ஒற்றர்கள் வருவார்கள் என்று நினைத்தேன். தமிழக அரசு மற்றும் காவல்துறையினரின் இந்தத் திட்டத்தை முறியடிக்கும் நோக்கத்துடன் வன்னியர் சங்கத்தின் தொடர் சாலைமறியல் போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டங்களை தமிழ்நாட்டில் நடத்தாமல் புதுச்சேரியில் நடத்தினோம். அதனால் எங்களின் திட்டங்கள் தமிழக அரசுக்கு தெரியவில்லை.

மற்றொருபுறம், போராட்டத்திற்கான ஏற்பாடுகளை வன்னியர் சங்க நிர்வாகிகள் முழு வீச்சில் மேற்கொண்டு வந்தனர். வயல்வெளிகளின் மறைவான பகுதிகளிலும், கரும்புத் தோட்டங்களுக்கு நடுவிலும் போராட்டம் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே பாசறைகள் அமைக்கப்பட்டன.

அப்பாவிகளை கைது செய்த காவல்துறை

வன்னியர் சங்கத்திலும், அதன் போராட்டக் குழுவிலும் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களை முன்கூட்டியே கைது செய்து விட்டால் போராட்டத்தை முறியடித்து விடலாம் என்று காவல்துறையினர் திட்டமிட்டனர்.  காவல்துறையின் இந்தத் திட்டத்தை நாங்கள் நன்கு அறிந்திருந்தோம். காவல்துறையின் கைது நடவடிக்கையை தவிர்க்க முன்கூட்டியே திட்டம் வகுத்து செயல்பட்டோம்.

வழக்கமாக ஒரு போராட்டம் நடக்கிறது என்றால், அதற்கு ஓரிரு நாட்கள் முன்பாகத் தான் போராட்டம் நடத்தும் அமைப்பைச் சேர்ந்தவர்களை காவல்துறை கைது செய்வது வழக்கம். எங்களையும் அப்படித் தான் கைது செய்ய தமிழக காவல்துறை முடிவு செய்திருந்தது. அதையறிந்த வன்னியர் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் போராட்டத்திற்கு 5 நாட்கள் முன்பாக செப்டம்பர் 12-ஆம் தேதியே தலைமறைவாகி விட்டனர். அதன்பிறகே காவல்துறை முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகளைத் தொடங்கியது. ஆனால், கிளை நிர்வாகிகளில் தொடங்கி மாவட்ட நிர்வாகிகள் வரை அனைவரும் தலைமறைவாகி விட்ட நிலையில், யாரை கைது செய்வது? என்பது தெரியாமல் காவல்துறை திணறியது.

யாரையும் கைது செய்யாமல் போனால் மேலிடம் வசை பாடும் என்பதால், பெயரளவில் யாரையாவது கைது செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் தேநீர் கடைக்கு தேநீர் குடிக்கச் சென்றவர்கள், வயலுக்கு நீர் இறைக்கச் சென்றவர்கள், கடைகளுக்கு பொருட்களை வாங்கச் சென்றவர்கள் என அனைவரையும் தேடித் தேடி கைது செய்தார்கள். 14-ஆம் தேதிக்குப் பிறகு இந்த கைது நடவடிக்கையும் நின்று போனது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வன்னியர் சங்க நிர்வாகிகள் அனைவரும் அவரவர் கிராமங்களுக்கு சென்று தொடர் சாலைமறியல் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

மாறுவேடத்தில் நான்...

வன்னியர் சங்க நிர்வாகிகளை கைது செய்ய முடியாத நிலையில், என்னை கைது செய்து விட்டால்,  எல்லாம் தடைபட்டு விடும் என்று காவல்துறையினர் நினைத்தனர். என்னைக் கைது செய்வதற்காக  தனிப்படைகள் அமைத்து தேடினார்கள்.

திண்டிவனம் நகரில் உள்ள எனது இல்லம் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளின் வீடுகளில் தீவிர தேடுதல் வேட்டையை காவல்துறை நடத்தியது. இதை முன்கூட்டியே கணித்த நான் புதுச்சேரிக்கு சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் வேறு பெயரில் தங்கியிருந்தேன்.

ஒருகட்டத்தில் நான் தங்கியிருந்த இடத்தை காவல்துறை கண்டுபிடித்து சோதனை நடத்தியது. ஆனால், நான் இஸ்லாமியர்கள் அணியும் குல்லா ஒன்றை அணிந்து கொண்டு அங்கிருந்து மாறுவேடத்தில் தப்பி விட்டேன். அங்கிருந்து திண்டிவனம் சென்றால் கைது செய்து விடுவார்கள் என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நல்லவன்பாளையம் என்ற கிராமத்திற்கு சென்றேன்.

தொடர்சாலைமறியல் போராட்டம் தொடங்குவதற்கு முதல் நாள் இரவு அந்த ஊரில் உள்ள ஏரிக்கரையில் பாபு கவுண்டர் என்பவருடன் உறங்கினேன். அதிகாலையில் எழுந்து அங்குள்ள ஏரியில் குளித்து விட்டு, தொடர் சாலைமறியல் போராட்டத்தை தலைமையேற்று நடத்துவதற்காக திண்டிவனத்தை நோக்கி விரைந்தேன்!

நாளை....
தொடங்கியது தொடர் சாலைமறியல்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages