"சாமி நாகப்பன் படையாட்சி: உலகின் முதல் சத்தியாகிரக தியாகியின் நினைவுநாள் (06.07.2020) இன்று! - பாமக தலைவர் ஜி.கே.மணி
மகாத்மா காந்தியின் வரலாற்றை இன்று எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், அவரை ஒரு போராளியாக உருவாக்கியவர்கள் தமிழர்கள் என்பதும், அவருக்காக முதன் முதலில் உயிர்கொடுத்தவர் சாமி நாகப்பன் படையாட்சி என்பதும் மறைக்கப்படுகிறது.
அந்த வரலாற்றை விரிவாக காண்போம்:
"மகாத்மாவை உருவாக்கிய தென் ஆப்பிரிக்கா!"
மகாத்மா காந்தி இந்தியாவிற்காக போராடியது உண்மை. ஆனால், அவர் ஒரு போராளியாக உருவானது இந்தியாவில் இல்லை. இந்தியாவுக்காகவும் இல்லை! அவரது முதல் போராட்டமும் முதல் வெற்றியும் கிடைத்த இடம் தென் ஆப்பிரிக்கா.
தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டமே இந்திய விடுதலைப் போரின் வழிகாட்டி என்பதை காந்தியும் தெளிவாக கூறியிருக்கிறார். "காந்தி இந்தியாவில் பிறந்திருக்கலாம் - ஆனால் தென் ஆப்பிரிக்கா தான் காந்தியை 'உருவாக்கியது'" என்றார் அவர். 1925 ஆம் ஆண்டு கான்பூர் காங்கிரசு மாநாட்டில் பேசிய காந்தி "இப்போது என்னால் இந்தியாவுக்காக என்னென்ன பணிகளை எல்லாம் செய்ய முடிகின்றதோ, அவை எல்லாம் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவை" என்று கூறினார்.
"உலகின் முதல் சத்தியாக்கிரக போராட்டம்"
மகாத்மா காந்தியின் வடிவமைப்பில் உருவான உலகின் முதல் சத்தியாக்கிரகப் போராட்டம் தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. ஆங்கிலேய அரசின ஏசியாடிக் பதிவு சட்டத்தை எதிர்த்து 1906 ஆம் ஆண்டு தொடங்கி 1914 ஆம் ஆண்டுவரை எட்டு ஆண்டுகள் இப்போராட்டம் நீடித்து கடைசியில் வெற்றி பெற்றது. காந்தி முன்னெடுத்த இந்திய விடுதலைப் போரின் வழிகாட்டி இதுதான்.
தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் வழிநடந்து சிறைசென்று உயிர் துறந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் சாமி நாகப்பன் படையாட்சி, மற்றொருவர் வள்ளியம்மா முனுசாமி முதலியார்.
"சாமி நாகப்பன் படையாட்சி"
தென் ஆப்பிரிக்க சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றதால் 1909 ஜூன் 21 அன்று கைது செய்யப்பட்டார் சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு மூன்று பவுண்ட் தண்டம் அல்லது 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், தண்டத் தொகையைக் கட்டாமல் சிறைத் தண்டனையை ஏற்பதே சத்தியாக்கிரகப் போராட்டம் என்பதால் சிறைக்குச் சென்றார். சிறையில் கொடுமைப் படுத்தப்பட்டு, ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக ஜூன் 30 ஆம் நாள் வெளியில் வந்து, ஜூலை 6 ஆம் நாள் மரணத்தை தழுவினார். அப்போது சாமி நாகப்பன் படையாட்சியின் வயது 18. அவர் தமிழ்நாட்டில் யாராலும் அறியப்படவில்லை.
தென் ஆப்பிரிக்க சத்தியாகிரக போராட்டத்தில் முதன் முதலில் பலியானவர் சாமி நாகப்பன் படையாட்சி. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வழிகாட்டியாக அமைந்த, காந்தீய போராட்ட முறையான சத்தியாகிரகத்தில் உயிர்நீத்த முதல் தியாகி இவர் தான்.
------------------
சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் வீரமரணம் அடைந்த போது காந்தி இங்கிலாந்தில் இருந்தார். இச்செய்தி அவருக்கு சூலை 12 ஆம் நாள் தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் பிரச்சாரம் செய்துவந்த எச்.எசு.போலக் என்பவருக்கு 6.10.1909 அன்று லண்டனிலிருந்து காந்தி எழுதிய கடிதத்தில்:
"நீங்கள் நாகப்பன் நிழற்படம் கிடைக்கப் பெற்றிருப்பீர்கள். அதனை பத்திரிகைகளில் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள். சென்னையிலிருந்து வெளியாகும் இந்தியன் ரிவியூ மற்றும் இதர சென்னை பத்திரிகைகளில் தயவுசெய்து நாகப்பன் புகைப்படத்தை வெளியிட முயலுங்கள்" என்று கேட்டிருந்தார்.
கூடவே, "நாகப்பன் பெயரில் ஒரு கல்வி உதவித்தொகை வழங்கும் நினைவு நிதியைத் ஜொகனஸ்பர்க் நகரில் தொடங்க வேண்டும். அதுபோல பம்பாயிலும் சென்னையிலும் கூட நாகப்பன் நினைவு நிதி தொடங்க முடிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். இதன் மூலம் அப்பழுக்கில்லாத இருபது வயது இளைஞன் இந்த நாட்டுக்காக உயிர்நீத்தான் என்பதை மக்கள் உணரச்செய்ய வேண்டும்" என்று லண்டனிலிருந்து காந்தி குறிப்பிட்டார்.
------------------
தென் ஆப்பிரிக்க இந்தியர் போராட்டம் குறித்து இங்கிலாந்திலும் இந்தியாவிலும் பிரச்சாரம் செய்ய அனுப்பபட்டிருந்த குழுக்களின் செயல்பாடுகள் குறித்து நவம்பர் 6 ஆம் தேதிக்கு முன்னர் எழுதினார் காந்தி. அச்சமயத்தில் காந்தியின் மகன் அரிலால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
"பல இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் போது நானும் எனது மகனும் சுதந்திரமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இல்லை. இப்போது எனது மகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனை எனக்கு தெரிவித்த திருமதி. போலக், என் மனமறிந்து இதற்காக பாராட்டும்கூறி தந்தி அனுப்பியுள்ளார். சிறையில் என் மகன் துன்பப்படுவான் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், அவன் கைதானதை நான் வரவேற்கிறேன். அவன் துன்பப்படுவது நல்லதுதான்.
நாகப்பா, நீயும் ஒரு குழந்தைதான், தாய் நாட்டுக்காக நீ உன் உயிரையே தியாகம் செய்தாய். உனது தியாகம் உன் குடும்பத்திற்கு ஆசீர்வாதமாகும். நீ இறந்தாலும் என்றென்றும் வாழ்கிறாய் என நான் நம்புகிறேன். அப்படி இருக்கும்போது, நான் என்னுடைய மகனின் சிறைவாசத்திற்காக ஏன் வருத்தப்படப் போகிறேன்?" என்று எழுதினார் காந்தி. கூடவே, நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால் தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்பதாக எழுதினார் காந்தி. இக்கடிதம் 4.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் வெளியானது.
------------------
25.11.1909 அன்று தூதுக்குழுவினரின் நடவடிக்கைகள் குறித்து லண்டனில் இருந்து கட்டுரை எழுதிய காந்தி, தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கட்டுரையில் கூறும்போது, "போராட்டத்தை கைவிடுவதற்கு பதிலாக மரணத்தை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக்கொண்டிராமல் போராட வேண்டும். ஒவ்வொருவரும் தானும் ஒரு நாகப்பனாக ஆகவேண்டும் என விரும்ப வேண்டும்" என்று கூறினார் காந்தி. இக்கட்டுரை 18.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் வெளியானது.
------------------
1914 ஆம் ஆண்டு காந்தியின் சகோதரர் இந்தியாவில் மரணமடைந்தார். இச்செய்தி கேள்விப்பட்டு தென் ஆப்பிரிக்கா முழுவதுமிருந்து பலர் காந்திக்கு இரங்கல் செய்தி அனுப்பினர். இதற்கு நன்றி தெரிவித்து இந்தியன் ஒப்பீனியனில் 18.3.1914 இல் எழுதினார் காந்தி. அதில் "நாகப்பனின் மரணத்தை விட எனது சகோதரனின் மரணம் எனக்கு அதிக வலிமிகுந்ததாக இல்லை" என்று குறிப்பிட்டார் காந்தி.
------------------
15.7.1914: தென் ஆப்பிரிக்காவில் காந்தி பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி 15.7.1914 அன்று காலை 11.30 மணிக்கு ஜொகனஸ்பர்க் நகரின் பிராம்ஃபோன்டெய்ன் கல்லரைத்தோட்டத்தில் நடந்தது. அங்கு அவர் சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் ஆகிய இருவரது கல்லறைகளில் நினைவுப் பலகைகளைத் திறந்து வைத்தார்.
அங்கு பேசிய காந்தி, "நாகப்பன் முகத்தை என்னால் சரிவர நினைவு கூற முடியாமல் போகலாம். ஆனால், அவர் பட்ட துன்பத்தை என்னால் உணர முடிகிறது. கொடுமையான சிறைக்கொட்டடியில் கடும் குளிரில் அவர் தேவையில்லாமல் அலைகழிக்கப்பட்டார். நாகப்பன் இதயம் இரும்பினால் ஆனது. அவர் சிறையிலிருது உருக்குலைந்து இறக்கும் தருவாயில் வெளியேறினார். ஆனால், அந்த நிலையிலும் - எனக்கு இத்துன்பம் ஒரு பொருட்டே அல்ல, ஒரு முறைதான் சாகப்போகிறேன். இப்போதும் மறுபடியும் சிறைசெல்ல தயாராக இருக்கிறேன் - என்று துணிந்து சொன்னார். அப்படிப்பட்ட கலங்காத மனம் படைத்த நாகப்பன் இறந்துவிட்டார். ஆனாலும், அவர் ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் என்றென்றும் நீங்காது வாழ்வார்" என்றார் காந்தி. இச்செய்தி 27.7.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் வெளியானது.
------------------
இந்தியாவின் எரவாடா சிறையில் இருந்த காலத்தில் 'தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகிப் போராட்டம்' எனும் விரிவான நூலை எழுதினார். இந்த நூல் 1928 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அந்த நூலில் நாகப்பன் குறித்து விரிவாகக் கூறியுள்ளார் மகாத்மா காந்தி.
"நாகப்பன் ஒரு இளம் சத்தியாகிரகி. பதினெட்டு வயதில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறையில் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்தார். அதிகாலையில் சாலை அமைக்கும் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இரட்டை நிமோனியாவால் தாக்கப்பட்டு சிறையிலிருந்து வெளியானவுடன் 6.7.1909 அன்று வீர மரணம் அடைந்தார்.
நாகப்பன் கடைசி நிமிடம் வரை உயிரோடிருந்த ஒவ்வொரு நிமிடமும் சத்தியாகிரகப் போராட்டத்தை மட்டுமே பேசியதாக அவரோடு இருந்தவர்கள் கூறினார்கள். அவர் ஒருபோதும் சிறைக்கு சென்றதை நினைத்து வருந்தவில்லை. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்வதை அவர் பெருமிதமாகக் கருதினார்.
நம்முடைய தராதரத்தில் பார்த்தால் நாகப்பன் எழுத்தறிவற்றவர். அவர் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலமும் சூலு (தென் ஆப்பிரிக்க) மொழியும் பேசினார். அரைகுறை அங்கிலத்தில் எழுதினார். எப்படிப்பார்த்தாலும் அவர் கற்றறிந்தவர் அல்ல. இருந்தாலும் அவரது தேச பக்தி, அவரது வலிமை, அவரது எதையும் தாங்கும் துணிச்சல், மரணத்தையே எதிர்கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் அவர் எல்லாம் வல்லவராக இருந்தார்.
கற்றறிந்த கல்விமான்களால் தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போர் வெற்றிபெறவில்லை, மாறாக நாகப்பன் போன்ற வீரர்கள்தான் அதனை வெற்றியடைய வைத்தனர்" என்று எழுதியிருக்கிறார் காந்தி.
அப்படிப்பட்ட, சாமி நாகப்பன் படையாட்சி வரலாறு தமிழ்நாட்டில் மூடி மறைக்கப்பட்டுவிட்டது!
------------------
"வரலாற்று புறக்கணிப்புக்கு முடிவுகட்டவேண்டும்."
தமிழகத்தின் 38-வது மாவட்ட மாக மயிலாடுதுறை உதயமாகியுள்ளது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, "மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு, மகாத்மா காந்தியடிகள் அழைப்புவிடுத்த முதல் அறப்போராட்டத்தில் பங்கேற்று உயிர்த்துறந்த மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த தியாகி நாகப்பன் படையாட்சியின் பெயரை சூட்ட வேண்டும்; ஆட்சியர் வளாகத்தில் அவரது உருவச்சிலை அமைக்க வேண்டும்" - என்று மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் 24.03.2020 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
மருத்துவர் அய்யா அவர்கள் கோரிக்கையின் படி, "மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு தியாகி நாகப்பன் படையாட்சியின் பெயரை சூட்ட வேண்டும்; ஆட்சியர் வளாகத்தில் அவரது உருவச்சிலை அமைக்க வேண்டும்" - அதன் மூலம் வரலாற்று புறக்கணிப்புக்கு முடிவுகட்டவேண்டும்.
No comments:
Post a Comment