முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 33 - Agnipuratchi

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 33

Share This

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 33

(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)

32.சமூகநீதிக்காக வீரச்சாவு
அடைந்த புறநானூற்று வீரர்கள்!

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமுதாயத்தினருக்கும் அவரவர் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழகத்தில் 20 விழுக்காடும், மத்தியில் 2 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்; இட ஒதுக்கீடு கோரி நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றதற்காக வன்னியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்; பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 18 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக  உயர்த்த வேண்டும் என்ற உன்னதமான 5 கோரிக்கைகளை முன்வைத்து தான் வன்னியர் சங்கம் ஒரு வார தொடர்சாலை மறியல் போராட்டத்தைத் தொடங்கி நடத்தியது.

உண்மையில் இந்த போராட்டத்தை அனைத்து சமுதாயங்களும் இணைந்து நடத்தியிருக்க வேண்டும். இந்த போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசே இந்த போராட்டத்திற்கு துணை நின்றிருக்க வேண்டும். ஏனெனில், இது அனைத்து சமுதாயங்களின் சமூக நீதிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் நடத்தப்பட்ட போராட்டம். ஆனால், போராட்டத்தில் பங்கேற்பதற்கு மட்டுமல்ல.... தார்மீக ஆதரவு வழங்கக் கூட எந்த அமைப்பும் முன்வரவில்லை. எந்தக் கட்சியும் உன்னதமான இந்த போராட்டத்தை ஆதரிக்கவில்லை. மாறாக, இந்த போராட்டத்தில் திமுக திட்டமிட்டு வன்முறையை நடத்தி, துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கும், அதில் 21 பாட்டாளி சொந்தங்கள் உயிரிழப்பதற்கும் காரணமாக இருந்தது. எம்.ஜி.ஆர் அரசோ, அதையெல்லாம் கடந்து வன்னியர்கள் அனைவரையும் எதிரிகளாக நினைத்து, அவர்கள் மீது அறிவிக்கப்படாத போரைத் தொடுத்து, காக்கை & குருவிகளை சுடுவதைப் போல வன்னியர்களை சரமாரியாக சுட்டுக் கொன்றது.

மாவீரன் சித்தணி ஏழுமலை -
சாகும் தருவாயிலும் சபதம்!

செப்டம்பர் 17-ஆம் தேதி நள்ளிரவில் போராட்டம் தொடங்கிய 3 மணி நேரத்திற்குள் பாப்பனப்பட்டு கிராமத்தில் 2 பாட்டாளி சொந்தங்களை துடிக்கத் துடிக்க சுட்டுக் கொன்ற காவல்துறையினரின்  வெறி அதன்பிறகும் தணியவில்லை. பாப்பனப்பட்டு கிராமத்தைத் தொடர்ந்து அடுத்த சிறிது நேரத்தில் சித்தணி கிராமத்தில் தங்களின் வெறித்தனத்தை அரங்கேற்றினார்கள்.

சென்னை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சித்தணி கிராமத்தில் உள்ள வீடூர் அணைக்கு அருகில் வன்னியர்கள் பெருந்திரளாக சாலைமறியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி காவல்துறையினரின் துப்பாக்கிகள் குண்டு மழைப் பெய்யத் தொடங்கின. அதில் சித்தணி ஏழுமலை என்ற 25-க்கும் குறைவான வயதுடைய இளைஞனின் மார்புகளில் சரமாரியாக குண்டுகள் பாய்ந்தன. அத்தனை குண்டுகளையும் தாங்கிக் கொண்டு குற்றுயிரும், குலையுயிருமாக  மண்ணில் சாய்ந்தான் அந்த மாவீரன். அவன் உடலில் இருந்து உயிர் பிரிந்து கொண்டிருந்தது; ஆனால், உணர்வு பிரியவில்லை.

தனது உடலில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்த நிலையில், தமது உடலில் இருந்த வலிமை முழுவதையும் திரட்டி,‘‘ டாக்டர் அய்யா வாழ்க. 20 சதவிகித இட ஒதுக்கீட்டை அடைந்தே தீருவோம். வாழ்க வன்னிய இனம்’’ என்று அந்த இடமே அதிரும்படி முழங்கினான். அதைக் கேட்டதும் காவல் துறையினரின் ஆத்திரம் அதிகமானது.  குண்டடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த மாவீரனுக்கு மருத்துவம் தருவதற்கு பதிலாக, பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கினார்கள். அவனைக் காப்பாற்ற போதிய அவகாசம் இருந்தும், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்தினர். அதனால் உயிருக்குப் போராடிய மாவீரன் ஏழுமலை செப்டம்பர் 18-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு உயிர் துறந்தான். ஏழுமலையின் மரணம் இன்றும் வேதனையளிக்கிறது.

சித்தணி ஏழுமலை குணத்திலும்,  கொள்கையிலும், வீரத்திலும் பணக்காரன் என்றாலும் கூட, பொருளாதாரத்தில் மிகவும் ஏழை. வசிப்பதற்கு ஒரு வீடு கூட இல்லாத நிலையில் புறம்போக்கு நிலத்தில் தான் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தான். அவனது தந்தை இராமகிருஷ்ணன் பார்வையிழந்தவர். தாய் ரெங்கநாயகி முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டவர். ஏழுமலைக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் ஆகி, 22 வயதில் அஞ்சலாட்சி என்ற மனைவியும், ஒரு வயதில் குழந்தையும்  இருந்தனர். ஏழுமலையைக் கொன்று அனைவரையும் ஆதரவற்றவர்களாக்கி விட்டது எம்.ஜி.ஆர் அரசு.

ஏழுமலையை பிரதிபலித்த
ஒரத்தூர் ஜெகநாதன்

சித்தணியைத் தொடர்ந்து பனையபுரம் என்ற இடத்தில் அடுத்த அரசப் படுகொலை நடத்தப்பட்டது. பனையபுரம் தான் அப்பகுதியின் மிக முக்கிய சந்திப்பு ஆகும்.  சென்னை & பாண்டி, கும்பகோணம்,  விழுப்புரம் சாலைகள் சந்திக்கும் மையப்புள்ளி அது தான். அங்கு ஏராளமான மக்கள் திரண்டு 20% இட ஒதுக்கீடு கேட்டு சாலைமறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் எந்தவித முன் எச்சரிக்கையும் செய்யாமல் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.  அதில் மறியல் போராட்டத்துக்கு தலைமையேற்றிருந்த கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கயத்தூர் தாண்டவராயன், ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு ஆகிய 5 இளைஞர்களும் உடல்களில் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். கிட்டத்தட்ட அதுவும் ஒரு ஜாலியன் வாலாபாக் படுகொலை தான்.

காவல்துறையினரின் துப்பாக்கிகளில் இருந்து பாய்ந்த குண்டுகள் ஒரத்தூர் ஜெகநாதனின் மார்புகளை  துளைத்தன. ஆனால், அப்போதும் அந்த சிங்கம் கவலைப்படவில்லை. மாவீரன் சித்தணி ஏழுமலை எவ்வாறு சாகும் தருவாயிலும் இனத்திற்காக குரல் கொடுத்தானோ, அதேபோல், ஒரத்தூர் ஜெகநாதனும்  மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்த போதும் இனத்திற்காக குரல் கொடுத்தான். ‘‘வன்னியர் சங்கம் வாழ்க.... உயிரைக் கொடுத்தாவது ஒதுக்கீடு பெறுவோம்’’ என்று அப்போதும் அவனது உதடுகள் உச்சரித்துக் கொண்டிருந்தன. காவல்துறையினர் நினைத்திருந்தால் ஜெகநாதனைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், தண்ணீர் கூட கொடுக்காமல் படுபாவிகள் சாகடித்து விட்டனர்.

வீரத்தியாகியான ஜெகநாதன் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் மெசஞ்சராக பணியாற்றியவன்.  ஒரத்தூரில் மனைவியுடன் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். ஜெகநாதன் மறைந்தவுடன் அவரது மனைவி  ஆலங்குப்பத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்று தங்கினார்.

மார்பைத் திறந்து காட்டிய
துணிச்சல்காரன் சிங்காரவேலு

பனையபுரம் துப்பாக்கிச் சூட்டில் இறந்த இன்னொருவர் சிங்காரவேலு  ஆவார். சங்கப் பணி என்றால் சர்க்கரைப் பொங்கல் போல அவருக்கு இனிக்கும். எப்போதும் துடிப்புடன் பணியாற்றுவான். பனையபுரத்தில் 17.07.1987-இல் அவனைச் சுடுவதற்காக  காவல்துறையினர் துப்பாக்கியைத் தூக்கிய போது,  பொத்தான்கள் அறுபட சட்டையை விலக்கி, வெற்று மார்பைக் காட்டி,‘‘ சுட்டுக்கொள்’’ என்று முழங்கினான் சிங்காரவேலு என்று அவனுடன் போராட்டக்களத்தில் இருந்த மற்றவர்கள் கூறிய போது. மெய்சிலிர்த்து போனேன். காவல்துறையினருக்கு உண்மையிலேயே வீரம் இருந்திருந்தால் சிங்காரவேலுவின் வீரத்தைப் போற்றியிருப்பார்கள். ஆனால், அங்கு களமிறக்கப்பட்ட காவலர்கள், துப்பாக்கி ஏந்திய கோழைகள் என்பதால் சிங்கார வேலுவின் உடலை துப்பாக்கியால் சிதைத்தனர்.

முண்டியம்பாக்கம் சிங்காரவேலு துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்திருந்த நிலையில் காவல்துறையினர் நினைத்திருந்தால் அவனைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், 25 மணி நேரமாக அவனை மருத்துவமனைக்குக் கூட எடுத்துச் செல்லாமலும், குடிப்பதற்கு தண்ணீர் கூட தராமலும் காவல்துறையினர் கொடுமைப்படுத்திக் கொன்றனர். முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் தான் சிங்காரவேலு பணியாற்றி வந்தான். துப்பாக்கிச் சூட்டில் சிங்காரவேலு கொல்லப்பட்ட பிறகு நாவம்மா (அப்போது வயது 30) என்ற அவரது மனைவியும், மூன்று குழந்தைகளும் ஆதரவற்றவர்களாகி விட்டனர்.

கயத்தூர் முனியன், கயத்தூர்
முத்துவின் தியாகம்

கயத்தூர் முனியனின் வீரத்தையும், தியாகத்தையும் வார்த்தைகளில் வடிக்க முடியாது. பனையபுரம்  போராட்டத்திற்கு அவர் தான் தலைமையேற்றார். அப்போது அவருக்கு வயது வெறும் 27 தான். அமைப்பு பணிகளில் அத்தனை துடிப்பானவர். தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது,  பனையபுரம் பகுதியில் போராட்டத்திற்கு நான் தான் தலைமையேற்பேன் என்று சண்டையிட்டு  அந்த வாய்ப்பை வாங்கிச் சென்றவன்.
காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில்,  தாகத்தை தணிக்க தண்ணீர் தரும்படி கேட்டான் முனியன். ஆனால், தண்ணீர் தர மறுத்த காவலர்கள் முனியனின் வாயில் சிறுநீரை ஊற்றிக் கொடுமைப்படுத்தினர். முனியன் கொல்லப்பட்ட போது அவருக்கு திருமணமாகி 10 மாதங்கள் கூட ஆகவில்லை. அப்போது அவரது மனைவி ஜெயா 7 மாத கர்ப்பிணியாக  இருந்தார். 

போராட்டக் களத்திலிருந்து கணவன் வெற்றி வீரனாக திரும்புவான்  என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அவன் காவல்துறையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டான் என்ற செய்தி தான் அவர் மனைவி ஜெயாவின் காதுகளை எட்டியது. ஜெயாவின் கதறலை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ‘‘ கதறிக்கதறி அழும் அந்த கர்ப்பிணியின் கண்களுக்கு சுட்டெரிக்கும் சக்தி மட்டும் இருந்திருந்தால் பொசுங்கிப் போயிருந்திருப்பார் அந்த பொல்லாத போலீசார்’’ என்று இரங்கல் செய்தியில் நான் குறிப்பிட்டிருந்தேன்.

பனையபுரத்தில் கொல்லப்பட்ட மற்றொரு மாவீரனின் பெயர் முத்து. 21 வயதான அவன்  திருமணமாகாதவன். விவசாயக் குடும்பத்தில் பிறந்து விவசாயம் செய்து வந்த அவனை பனையபுரம் போராட்டக் களத்தில் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தமாக சுட்டுக் கொன்றனர்.

முத்து கொல்லப்பட்ட செய்தியறிந்து அவனது உடலைப் பார்ப்பதற்கு ஓடி வந்த அவரது தாயார் பொக்கிலை ஓடி வந்தார். ஆனால்,  மகனின் உடலைகூட பார்க்க விடாமல் துரத்தியடித்தனர். அத்தகைய கொடுமையை இழைத்தவர்கள் பெண் காவலர்கள்.  அதைக் கேட்டு மனம் நொந்து போனேன் நான். ‘‘ காக்கி உடையை மாட்டிக் கொண்டால் பெண் கூட பேயாட்டம் போடுவாள் போலிருக்கிறது’’ என்று நான் கண்டனத்தை பதிவு செய்தேன். அந்த அளவுக்கு காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனம் தலைவிரித்து ஆடியது.

உத்தமவீரன் தாண்டவராயன்

பனையபுரத்தில் கொல்லப்பட்ட ஐந்தாவது மாவீரன் கயத்தூர் தாண்டவராயன் படுகொலை செய்யப்பட்ட விதம் தான் நினைத்துப் பார்க்க முடியாததாகும். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாண்டவராயனை அவரது உயிர்நிலை அருகில் சுட்ட காவல்துறையினர், அவன் இறந்து விட்டாரா? என்று சோதித்து பார்த்துள்ளனர். அவன் உயிருடன் இருப்பதை அறிந்து  மார்பில் துப்பாக்கிக்  கட்டையால் குத்தி கொடுமைப் படுத்தியுள்ளனர். அதன்பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாண்டவராயன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

தாண்டவராயனின் இறப்பு என்னை மிகவும் பாதித்தது. அவன்து மறைவு குறித்த இரங்கல் செய்தியில்,‘‘நாட்டை நாசப்படுத்துபவன் எல்லாம் நடமாடிக் கொண்டிருக்கையில் உரிமைக்காக போராடிய உத்தமவீரன் போலீஸ் கொடுங்கோலர்கள் சுட்டதால் படுகாயமுற்றுத் தாள முடியாது மீளா இடம் நோக்கிப் போய்விட்டான். உழைப்பை நேசிக்கும் பாட்டாளியைப் போல் வன்னியர் சங்கத்தை நேசித்து வளர்த்த  தீரன் தாண்டவராயன் மறைவு நெஞ்சத்தை  விட்டு நீங்காத வடுவாகும்’’ என்று நான் குறிப்பிட்டிருந்தேன்.

நாளை.....
சாகும் போதும் காவலர்களிடம் சவால் விடுத்த சிங்கம் தொடர்ந்தனூர் வேலு!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages