முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 39 - Agnipuratchi

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 39

Share This

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 39

(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)

38. கவர்னரும், காங்கிரசும் செய்த துரோகம்!

ஜானகி இராமச்சந்திரன் தலைமையிலான அரசு 1988-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி கலைக்கப் பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சியில் அனைத்து அதிகாரங்களும் ஆளுநருக்குத் தான்.

அப்போது ஆளுநராக இருந்தவர் சுந்தர்லால் குரானா.  ஜானகி அம்மையார் அரசு கலைக்கப்பட்டு விட்ட நிலையில், அவருக்கு தான் அனைத்து அதிகாரங்களும். ஆனால், அவரது பதவிக்காலம் 1987-ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதியே முடிவடைந்து விட்டது. தற்காலிக பதவி நீட்டிப்பில் தான் அவர் இருந்தார். அவர் தமிழக ஆளுநராக நியமனம் செய்யப்படுவதற்கு முன்பே தில்லி யூனியன் பிரதேச ஆளுநராகவும், இடையில் சில காலம் புதுச்சேரி ஆளுநராகவும் பணியாற்றியவர். சுமார் 8 ஆண்டுகள் ஆளுநராக பதவி வகித்து விட்ட அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு தயாராக இல்லை.

ஆளுநர் அலெக்சாண்டர்

அதுமட்டுமின்றி, வழக்கமான காலத்தில் ஆளுநராக இருப்பதற்கும், குடியரசுத் தலைவர் ஆட்சிக் காலத்தில் ஆளுநராக இருப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. அதனால், மத்திய அரசின் விருப்பங்களை செயல்படுத்தும் ஒருவர் தான் புதிய ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று நம்பினோம். அப்படிப்பட்ட ஒருவரின் நியமன அறிவிப்புக்காக காத்திருந்தோம். அடுத்த சில நாட்களிலேயே தமிழக ஆளுநராக  பி.சி. அலெக்சாண்டர் நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. அலெக்சாண்டர் கேரள மாநிலத்தைச்  சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி. நேரு குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். இந்திராவின் முதன்மை செயலராக இருந்தவர். இந்திரா காந்தியின் நிழலாக இருந்து, அவரது அனைத்து முடிவுகளுக்கும் பின்னணியில் செயல்பட்டவர். இராஜிவ் காந்திக்கும் ஆலோசகராக இருந்தவர். அலெக்சாண்டர் ஆளுநராக நியமிக்கப்பட்ட போதே தமிழகத்தில் அரசியல் சித்து விளையாட்டுகளை நடத்த காங்கிரஸ் தயாராகிறது என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அது உண்மை என்பது பின்னர்  உறுதியானது.

மற்றொருபக்கம், தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில், இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து நாங்கள் தீவிரமாக விவாதித்தோம். இட ஒதுக்கீட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுக்கலாம் என்ற எண்ணம் எனக்குத் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்தது. ஒரு வாரகால தொடர் சாலைமறியல் போராட்டம் குறித்து விவாதிப்பதற்காக 1987-ஆம் ஆண்டு  பிப்ரவரி 22-ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்கத்தின் மத்தியக் குழு கூட்டத்திலேயே  இது குறித்தும் பேசப்பட்டது. ஆனால், அப்போது தொடர் சாலைமறியல் போராட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்றும், தேர்தல் புறக்கணிப்பு குறித்து பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு விட்ட நிலையில், அதுகுறித்த சிந்தனை மீண்டும் எழுந்தது.

திண்டிவனத்தில் 04.02.1988-இல் நடத்தப்பட்ட வன்னியர் சங்க மாநில நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் புறக்கணிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பது என்று கொள்கை அளவில் முடிவெடுக்கப்பட்டது. அதேநேரத்தில் இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்து ஆளுநரிடம் பேசுவதற்கான வாய்ப்புகள் இருந்ததால், அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நாங்கள் முடிவு செய்தோம். தேர்தல் புறக்கணிப்புக்கான எங்கள் பயணம் நீண்டது என்பதால் அது பற்றி அடுத்த அத்தியாயத்தில் விரிவாக எழுதுகிறேன். இட ஒதுக்கீடு கோரிக்கைகள் குறித்து  ஆளுநர் ஆட்சியில் அவரிடமும், குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன், மத்திய அமைச்சர்கள் நரசிம்மராவ், பூட்டாசிங் உள்ளிட்டோரிடமும் நடத்திய பேச்சு வார்த்தைகள் குறித்தும், அதில் எங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் குறித்தும் இந்த அத்தியாயத்தில் விளக்குகிறேன்.

ஆளுநருடன் பேச்சு 

தமிழகத்தின் ஆளுநராக அலெக்சாண்டர் பொறுப்பேற்ற 18-ஆவது நாளில், அதாவது 1988-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி அவரை நானும், வன்னியர் சங்கத்தின் மற்ற நிர்வாகிகளும் கிண்டி ஆளுனர் மாளிகையில் சந்தித்துப் பேசினோம். எங்களின் கோரிக்கைகளை நன்றாக கேட்டுக் கொண்டார். மத்திய அரசிடம் அது குறித்து பேசுவதாக ஆளுநர் உறுதியளித்தார். அந்த மாத இறுதியில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருந்தது.  அந்த நிதிநிலை அறிக்கையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியிடச் செய்ய வேண்டும் என்று ஆளுநரைக் கேட்டுக் கொண்டோம். எங்கள் கோரிக்கையை அவர் நிறைவேற்றி வைப்பார் என்று நம்பினோம். ஆனால், மத்திய நிதியமைச்சர் என்.டி.திவாரி தாக்கல் செய்த தமிழக  நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. ஆளுநர் ஆட்சியிலும் ஏமாற்றம் தொடர்ந்தது.

வன்னியர்களின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றாலும் கூட, சில அரசியல் கணக்குகளுக்காக ஆளுநரும், அவரது ஆலோசகர்களும் எங்களுக்கு உதவியாக இருப்பதைப் போல காட்டிக் கொண்டனர். ஆளுநரின் முதன்மை ஆலோசகரான இ.ஆ.ப. அதிகாரி எஸ்.எஸ்.சித்து,  1988-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி சென்னை ஆளுனர் மாளிகையில் தங்கியிருந்த குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனை சந்தித்துப் பேச ஏற்பாடு செய்தார். இந்தியாவில் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரங்கள் என்னென்ன? என்பது குறித்து நாங்கள் நன்றாக அறிவோம். ஆனாலும், குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் தமிழ்நாட்டைச்  சேர்ந்தவர் என்பதால் வன்னியர்களின் நிலையை புரிந்து கொண்டிருப்பார்; வன்னியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்படி மத்திய அரசுக்கு பரிந்துரைப்பார் என்று எதிர்பார்த்து தான் அவரை சந்தித்தோம். எனது தலைமையில் வன்னியர் சங்கத் தலைவர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு இந்த சந்திப்பில் பங்கேற்றது. ஆனால், அவருடனான சந்திப்பு எங்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்திருந்தது; பெரும் ஏமாற்றமாகவும் அமைந்திருந்தது.

குடியரசுத் தலைவரின் பொறாமை

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை கேட்டவுடனேயே  அவரது முகம் மாறத் தொடங்கியது. நாங்கள் அவரிடம் சென்றது வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்பதற்காகத் தான். அந்தக் கோரிக்கைகளை ஏற்பது குறித்து தான் அவர் எங்களிடம் விவாதித்திருக்க வேண்டும். ஆனால், அவரோ, சம்பந்தமே இல்லாமல், அவரது சாதி குறித்து புலம்பத் தொடங்கி விட்டார். ஆம்.... அவர் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர். உத்தரப் பிரதேசத்தில் அவரது சமுதாயம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக எங்களிடம் கவலைப்பட்டார்.

‘‘ கேரளத்தில் ஈழவ மக்கள் ஒரு காலத்தில் தீண்டத்தகாத மக்களாக இருந்தனர். ஆனால், கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற்று உலக அளவில் மிகவும் பெரிய பதவிகளில் உள்ளனர். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்கள் குதிரை வண்டி ஓட்டி பிழைக்கிறார்கள். சமையல்காரர்களாக இருந்து  வறுமையில் வாடுகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?’’ என்று எங்களைப் பார்த்து  கேட்டார். அதுமட்டுமின்றி, சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கோருவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும் என்று கூறினார்.

அதைக் கேட்டதும் எனக்கு வழக்கம் போல கோபம் ஏற்பட்டது. குடியரசுத் தலைவர் கூறியதையெல்லாம்  கேட்ட நான், இறுதியாக திட்டவட்டமாக ஒரு கருத்தைக் கூறினேன். ‘‘ எங்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தேர்தலை புறக்கணிக்கப் போகிறோம்’’ என்று நான் கூறினேன். ஆனால், குடியரசுத் தலைவரோ, மிக அலட்சியமாக,‘‘ நீங்க அப்படியே செய்யுங்க’’ என்று பதிலளித்தார்.
அதைக் கேட்ட நாங்கள், ‘‘மிகவும் தவறான, சந்திக்கக்கூடாத மனிதரை சந்தித்திருக்கிறோம்’’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்தோம். அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து,‘‘ சனாதிபதியா,  சனாதனவாதியா?’’ என்ற தலைப்பில் கனல் இதழில் நான் தலையங்கம் எழுதினேன்.

ராஜிவ் காந்தியின் உறுதிமொழி

குடியரசுத் தலைவருடான சந்திப்பு தோல்வியில் முடிவடைந்து விட்ட நிலையில், எங்களின் கோரிக்கை  குறித்து மத்திய அரசே எங்களுடன் பேச்சு நடத்த முன்வந்தது. அதற்கும் அரசியல் காரணங்கள் இருந்தன. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் மறைந்து விட்ட நிலையில், அதனால் ஏற்பட்டிருந்த அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும், பிரதமருமான ராஜிவ்காந்தி நினைத்தார். தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களின் ஆதரவு கிடைத்தால், எளிதாக ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று அவருக்கு தமிழக ஆளுநர் தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. அதனால், ஒவ்வொரு முறை ராஜிவ்காந்தி தமிழகத்திற்கு வரும் போதும் வன்னியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதுமட்டுமின்றி, தமது அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பி.வி. நரசிம்மராவ் அவர்களை அழைத்து வன்னியர் சங்கத்தினரிடம் அவர்களின்  கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்தி, தீர்வு காணும் பொறுப்பை ராஜிவ்காந்தி ஒப்படைத்தார்.

கொடுக்க நினைத்த நரசிம்மராவ்...
தடுத்துக் கெடுத்த மூப்பனார், சிதம்பரம்!

அதன்படி, சென்னை வந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பி.வி. நரசிம்மராவ், வன்னியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து தனி  இட ஒதுக்கீட்டு  கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்தினார். அடுத்தக்கட்ட பேச்சுக்களுக்காக ஹைதராபாத் வரும்படி அழைப்பு விடுத்தார். அடுத்தக்கட்ட பேச்சு  ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நரசிம்மராவை சந்திப்பதற்காக ஹைதராபாத் செல்வதற்காக எனக்கும், எங்கள் குழுவினருக்கும் மத்திய அரசே விமான டிக்கெட் எடுத்துத் தருவதாக கூறியது. ஆனால், எங்களுக்கு எங்கள் கோரிக்கை தான் முக்கியம். மற்றவர்கள் காசில் பயணம் செய்யமாட்டோம். எங்கள் செலவில் தான் வருவோம் என்று கூறி சொந்த செலவில் சென்று வந்தோம். ஹைதராபாத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுகள்   ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தன. அப்பேச்சுக்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.

மூன்றாவது கட்ட பேச்சுகளுக்காக தில்லி வரும்படி எங்களுக்கு நரசிம்மராவ் அழைப்பு விடுத்தார். தில்லி செல்வதற்கான விமான டிக்கெட், தங்குமிடம் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து தர மத்திய அரசு மீண்டும் முன்வந்தது. ஆனால், நாங்கள் மீண்டும் உறுதியாக மறுத்து விட்டோம். எங்களின் செலவில் நாங்கள் தில்லி சென்று வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு குறித்து பேச்சு நடத்தினோம். அப்போது வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க நரசிம்மராவ் ஒப்புக்கொண்டார். அடுத்த சில நாட்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் அவரது அலுவலகத்தில் இருந்து வெளிவந்தோம். அப்போது  தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த மூப்பனாரும், ப.சிதம்பரமும் உள்ளே நுழைந்தனர். நரசிம்மராவை சந்தித்த அவர்கள், வன்னியர்கள் என்ற ஒரு சாதிக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கினால் மற்ற சாதியினர் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறி அவரின் மனதை கலைத்தனர். இதனால் இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு மாறியது.

பூட்டாசிங் காட்டிய ஆசை

அடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் பூட்டாசிங் எங்களுடன் பேச்சு நடத்தினார். ‘‘ சட்டப்பேரவைத் தேர்தலில் நீங்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும். காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் உங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். தேர்தலில் காங்கிரஸ் சார்பில் உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போட்டியிடலாம். தேர்தல் செலவுக்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம்’’ என்று  ஆசை காட்டினார்.  ஆனால், அதை நான் ஏற்கவில்லை. ‘‘எங்களுக்குத் தேவை இடஒதுக்கீடு தான்... மற்றபடி உங்கள் சீட்டும் வேண்டாம்.... நோட்டும் வேண்டாம்’’ என்று கூறி அதை நிராகரித்து விட்டேன்.

ஏமாற்றும் முயற்சி; துரோகம்

காங்கிரஸ் கட்சிக்கு வன்னியர்களின் ஆதரவைப் பெற்று மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு பெற்றுத் தர வேண்டும் என்ற எண்ணம் பெரும்பான்மையான காங்கிரஸ் தலைவர்களுக்கு, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு இல்லை. வன்னியர்களின் வாக்குகளை வாங்கி முதலில் வெற்றி பெற்று விடலாம்; அவர்களின் கோரிக்கைகள் குறித்து பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. மற்றொருபுறம் காலம் விரைவாக ஓடிக் கொண்டிருந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகவும் அமைதியான மாநிலம். எந்த சிக்கலும் இல்லாமல் மிகவும் எளிதாக தேர்தலை நடத்தி விட முடியும். அதனால், 1988-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி  ஜானகி அம்மையாரின் ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில், ஜூலை மாத இறுதிக்குள் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,  வன்னியர் சங்கத்தின் ஆதரவைப் பெற வேண்டும்  என்பதற்காகவே, ‘‘வன்னியர் சங்கத்தின் தனி இட ஒதுக்கீட்டு கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை’’ என்று எங்களிடம் கூறி விட்டு, அது குறித்து இறுதி முடிவு எடுக்க கால அவகாசம் தேவை என்று கூறி, ஆளுநர் ஆட்சியை ஆறு மாதத்திற்கு நீட்டித்து இருந்தனர் மத்திய ஆட்சியாளர்கள். அதன்படி  1989-ஆம் ஆண்டு ஜனவரி இறுதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதனால், மத்திய அரசு மற்றும் ஆளுநர் மாளிகையின் செயல்பாடுகளில் அவசரம் தெரிந்தது. 1988-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 12-ஆம் தேதி திங்கட்கிழமை உளவுத்துறை அதிகாரி ஒருவர் என்னை சந்தித்து, ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னை வரவேற்ற தமிழக ஆளுநர் அலெக்சாண்டர் என்னிடம் ஓர் அரசாணையைக் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த நான், ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டேன். வன்னியர்கள் கேட்ட இட ஒதுக்கீட்டை வழங்காமல், அவர்களை ஏமாற்றி, அவர்களின் வாக்குகளை மட்டும் வாங்குவதற்கான ஏற்பாடு அது.  அதை ஏற்க நான் தயாராக இல்லை. உடனடியாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேறிய நான், அன்று மாலையில் வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டேன். அது தமிழக அரசியல் வரலாற்றில் அதுவரை நிகழ்த்தப்படாத அதிரடியான செயல் ஆகும்.    

நாளை....
தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages