முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 40 - Agnipuratchi

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 40

Share This

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 40

(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)

39. தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாநாடு, பட்டினிப் போராட்டம், பேரணி, பட்டை நாமம் போராட்டம், ஒருநாள் சாலை மறியல் போராட்டம், ஒருநாள் தொடர்வண்டி மறியல் போராட்டம், ஒருவாரகால தொடர் சாலை மறியல் போராட்டம் என அனைத்து வகையான போராட்டங்களையும் வன்னியர் சங்கம் நடத்தியது. தொடக்க கட்ட போராட்டங்களின் வலிமையை ஆட்சியாளர்கள் அறிந்தாலும்கூட, எங்களுடன் பேச்சு நடத்துவதற்கு முன்வரவில்லை. ஒரு வார கால தொடர் சாலை மறியல் போராட்டம் முழுமையான வெற்றிபெற்ற பிறகுதான் இனியும் வன்னியர்களின் கோரிக்கையை புறக்கணிக்க முடியாது என்று முடிவு செய்து, அது குறித்து எங்களுடன் பேச்சு நடத்த எம்.ஜி.ஆர். முன்வந்தார். ஆனால், எங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு முன்பாகவே அவர் காலமானார். அதற்குப் பிறகு வந்த ஜானகி அம்மையாரின் ஆட்சி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குள் கலைக்கப்பட்டுவிட்டதால், அவரது ஆட்சியிலும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை.

நிறைவேறினால் மகிழ்ச்சி...
இல்லாவிட்டால் புறக்கணிப்பு!

இத்தனைப் போராட்டங்களையும் நடத்தியும், வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்ற எந்த அரசும் முன்வராதது ஏன்? என்பது குறித்து நான் சிந்தித்தேன். அப்போது தான் ஒரு உண்மை எனக்குப் புரிந்தது. எத்தனை வகையான போராட்டங்களை நடத்தினாலும் அதனால் அரசுக்கு சில நெருக்கடிகள் ஏற்படுமே தவிர, எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. நெருக்கடிகளை கண்டு அரசியல் கட்சிகள் அஞ்சுவதில்லை; மாறாத தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்றால் தான் பதறுவார்கள் என்பதை உணர்ந்தேன். அரசியல் கட்சிகளுக்கு அத்தகைய பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அறப்போராட்டங்களில் முதன்மையானது தேர்தல் புறக்கணிப்பு ஆகும். அது எனக்கு ஏற்கனவே நன்றாகத் தெரியும். அதனால் தான் அந்த ஆயுதத்தை ஏந்துவதென்று நாங்கள் முடிவு செய்தோம். குடியரசுத் தலைவர் ஆட்சியில் எங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் மகிழ்ச்சி.... இல்லாவிட்டால்  அடுத்து எப்போது தேர்தல் நடத்தப்பட்டாலும் அந்தத் தேர்தலைப் புறக்கணிப்பது என்பது தான் எங்களின் திட்டம் ஆகும்.

தமிழக ஆளுநரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறிக் கொண்டே இருந்தனர். ஆனால், அவர்களின் நோக்கம் எங்களின் வாக்குகளை வாங்குவது தானே தவிர, எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது இல்லை என்பது எங்களுக்கு நன்றாகத் தெரிந்தது. அதனால், அவர்களை மட்டுமே நம்பி ஏமாந்து விடக்கூடாது என்பதால், தேர்தல் புறக்கணிப்புக்கான முன்னேற்பாடுகளையும், அதற்காக பாட்டாளி சொந்தங்களை தயார்படுத்தும் பணிகளையும் 1988&ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கி விட்டோம். தேர்தல் புறக்கணிப்பு ஏன்? என்பது குறித்து 1988&ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கனல் இதழில் தொடர்ந்து எழுதி வந்தேன். அந்த முடிவுக்கு மக்களிடம் மிகப்பெரிய அளவில் ஆதரவு இருந்தது.

புறக்கணிப்பு பரப்புரை

அதன் தொடர்ச்சியாக வன்னியர் சங்கத்தின் சார்பில், தேர்தல் புறக்கணிப்பு பரப்புரைக்கான சைக்கிள் பேரணிகள் நடத்தப்பட்டது. அந்தப் பேரணிகளில் இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி தேர்தலைப் புறக்கணிக்க வன்னிய சமுதாய மக்கள் முழு அளவில் தயாராகி விட்டனர். சட்டமன்றத் தேர்தல் புறக்கணிப்பை விளக்கி, சுவர்களிலும், தட்டிகளிலும் வாசகங்கள் எழுதப்பட்டன.

‘‘ எட்டு முறை வோட்டுப் போட்டு என்ன சுகம் கண்டே!
ஒட்டுத்துணி & பழங்கஞ்சியில் மாற்றம் ஏதும் உண்டா?
      சாராயத்துக்கு வோட்டுப்போட்ட காலம் போச்சு பாரு?
      கொள்ளை அடிச்ச கூட்டம்! கட்சி சின்னங்களைக் காட்டும்.
      வோட்டுப் போட மறுத்துட்டா அவன் எடுப்பான் ஓட்டம்.’’

என்பன போன்ற  பரப்புரை வாசகங்கள்  மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தின. கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை திரும்பும் திசையெல்லாம் இத்தகைய வாசகங்களை பார்க்க முடியும். இந்த வாசகங்கள் படிப்பவர்களின் மனதில், வன்னியர்களுக்கு தமிழக அரசியல் கட்சிகள் இழைத்த துரோகங்கள் காட்சிகளாய் வந்து சென்றன. அதனால் தேர்தல் புறக்கணிப்புக்கு ஆதரவு பெருகியது.

ஊர், ஊராக பரப்புரை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க வன்னியர் சங்கம் முடிவு செய்தது ஏன்? என்பது குறித்து நான் மாவட்டம் தோறும் சென்று பிரச்சாரம் செய்தேன். ஊர் ஊராகச் சென்று வன்னியர் சங்கக் கொடிகளை ஏற்றி வைத்து, தேர்தல் புறக்கணிப்புக்கான காரணங்களை விளக்கி உரையாற்றுவேன். ஒவ்வொரு நாளும் இத்தகைய கூட்டங்கள் நடக்கும். இரவு 7 மணிக்கு தொடங்கும் இத்தகைய கூட்டங்கள், அதிகாலை வரை நடைபெறும். கூட்டம் தொடங்குவதற்காக பல மணி நேரம்  காத்திருக்கும் மக்கள், அதிகாலையில் நான் பேசி முடிக்கும் வரை ஆர்வத்துடன் எனது உரையை கேட்பார்கள்.

தேர்தல் புறக்கணிப்பு பரப்புரை மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில், 1988&ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி மாமல்லபுரத்தில் வன்னியர் இளைஞர் பெருவிழா நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். விழா தொடங்குவதற்கு முன் அனைத்து இளைஞர்களும் எழுந்து நின்று தேர்தல் புறக்கணிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதைபார்த்த அரசியல் விமர்சகர்களும், பத்திரிகையாளர்களும், தேர்தலைப் புறக்கணிப்பதில் வன்னியர் சங்கம் உறுதியாக உள்ளது; அவர்களின் இந்த நிலைப்பாடு அடுத்து வரும் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணித்தனர். வன்னியர்களின் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க ஆளுநரும், மத்திய அரசும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று  அறிவுறுத்தினர்.

அதைத் தொடர்ந்து தான், மே 11&ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் குடியரசுத்தலைவர்   ஆர்.வெங்கட்ராமனுடன் எங்களின் சந்திப்பு நடைபெற்றது. ஆனால், அந்தப் பேச்சுகள் தோல்வியடைந்து விட்ட நிலையில் தேர்தல் புறக்கணிப்பு விளக்க பரப்புரையைத் தீவிரப்படுத்தினோம். அடுத்த சில நாட்களிலேயே ஜெயங்கொண்டத்தில் வன்னியர் சங்க மாநாடு மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய நான், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களின் கோரிக்கைகள் குறித்து நவம்பர் மாதத்திற்குள் தமிழக ஆளுநரும், மத்திய அரசும் உறுதியான முடிவை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகக் கடுமையான போராட்டத்தை நடத்த நேரிடும் என்று மத்திய, மாநில அரசுகளை எச்சரித்தேன். அதனால் அரசியல் களம் சூடானது.
பரப்பப்பட்ட வதந்திகள்
வன்னியர் சங்கம் அறிவித்த தேர்தல் புறக்கணிப்பு திட்டமிடப்பட்டவாறு நடைபெற்றால், அது தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதைத் தடுக்கும் நோக்கத்துடன் வன்னியர் சங்கத்தின் நிலைப்பாடு பற்றி பலவிதமான வதந்திகள் பரப்பப்பட்டன. 1989&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் நடத்தப்பட இருந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில் ஓர் அணி, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தலைமையில் ஓர் அணி, ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஓர் அணி, மூப்பனார் தலைமையிலான காங்கிரஸ் தனி அணி என மொத்தம் 4 அணிகள் களமிறங்கின. அவற்றில் ஏதேனும் ஓர் அணிக்கு  வன்னியர் சங்கம் ஆதரவளிக்கும் அல்லது வன்னியர் சங்கமே தனி அரசியல் கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்கும் என்று வதந்திகள் பரவின.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 4 அணிகள் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், எந்த அணிக்கு  எவ்வளவு விழுக்காடு வாக்குகள் கிடைக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. ஆனால்,  வன்னியர் சஙகத்தின் ஆதரவு எந்த அணிக்கு கிடைக்கிறதோ, அந்த அணி வெற்றி பெறுவது உறுதி என்று ஊடகங்களில் எழுதப்பட்டன. அதனால் வன்னியர் சங்கத்தின் ஆதரவைப் பெறுவதில் தமிழக அரசியல் கட்சிகளிடம் கடுமையான போட்டி நிலவியது. பல கட்சிகளும் பல வழிகளில் முயன்றன.

அரசியல் கட்சிகளின் தூதுகள்

சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களை ஆதரிக்க வேண்டும் என்றும், விரும்பினால் கூட்டணி அமைத்து தேவையான இடங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் எங்களுக்கு அரசியல் கட்சிகள் ஆசை காட்டின. இது குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அரசியல் கட்சியிடமிருந்தும் தூதுகள் வந்த வண்ணம் இருந்தன. இந்தச் சூழலில் வன்னியர் சங்கம் எத்தகைய முடிவை எடுக்கப் போகிறது என்ற வினாவும், எதிர்பார்ப்பும்  அனைவர் மத்தியிலும் எழுந்திருந்தது. அது குறித்து முடிவெடுக்கும் நோக்கத்துடன் வன்னியர் சங்க மாநில நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது.

தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்கும்படி வேண்டுகோள் விடுத்த கட்சிகளாக இருந்தாலும், தேர்தலில் கூட்டணி அமைக்கலாம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்த கட்சிகளாக இருந்தாலும் சரி... இட ஒதுக்கீடு கோரி நாங்கள் போராட்டம் நடத்திய போது ஆதரவு தரவில்லை. எங்களின் கோரிக்கை நியாயமானது என்று கூற கூறவில்லை. ஆனால், அதே கட்சிகள் எங்களிடம் தேர்தலுக்கு முன்பாக ஓட்டுப்பிச்சை கேட்டு வந்து நின்றன. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததைப் போல,  ‘‘எல்லா கட்சிகளும் வன்னியர்களுக்கு  இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்’’ என்று குடம் குடமாக நீலிக்கண்ணீர் வடித்தன.

அரசியல் கட்சிகளின் திடீர்ப் பாசமாவது உண்மையா? என்றால் அதுவும் இல்லை. ‘‘ எங்களுக்கு இந்த தேர்தலில் வாக்களியுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறோம்’’ என்று வாக்குறுதி அளித்தார்கள். அவர்களின் வாக்குறுதிகளை தண்ணீரில் எழுதி வைப்பதா.... காற்றில் எழுதி வைப்பதா? என்பது கூட தெரியவில்லை. 8 முறை எங்கள் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று அதிகாரத்தை அனுபவித்து விட்டு, எங்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டு உரிமையை வழங்க மறுத்த கட்சிகள், இப்போது ஓட்டு போட்டால் மட்டும் ஆட்சிக்கு வந்து எங்களுக்கு இட ஒதுக்கீட்டை அள்ளிக் கொடுத்து விடுவார்கள் என்று நம்ப நாங்கள் தயாரில்லை.

புறக்கணிப்பில் உறுதி!

அதனால் வன்னியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்து வரும் தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவில் உறுதியாக இருப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனாலும், தமிழக ஆளுநர் அலெக்சாண்டர் எங்கள் முடிவை திரும்பப் பெறச் செய்து, எங்களை தேர்தலில் பங்கேற்கச் செய்ய வேண்டும்; முடிந்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கச் செய்ய வேண்டும் என்று  தீவிரமாக முயன்றார். ஆனால், எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தேர்தல் புறக்கணிப்பு முடிவை திரும்பப் பெற மாட்டோம் என்று உறுதியாக கூறிவிட்டோம். அதனால் அவரது முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

ஒருபுறம் எப்படியாவது எங்களை வளைத்து விட வேண்டும் என்பதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டது. மறுபுறம், அந்த முயற்சிகள் பலிக்காத சூழலில் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பதற்கான காலம் கடந்து கொண்டிருந்தது. அதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்ற நிலையில், 1988&ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 12&ஆம் தேதி சரண்யன் என்ற உளவுத்துறை அதிகாரி  என்னை சந்தித்து, ஆளுநர் அலெக்சாண்டரை சந்திப்பதற்காக ஆளுநர் மாளிகைக்கு வரும்படி அழைத்தார்.

அவரது அழைப்பை ஏற்று நானும் ஆளுநர் மாளிகைக்கு விரைந்தேன். அங்கு எனக்காக ஆளுநர் அலெக்சாண்டர் காத்துக் கொண்டு இருந்தார். ஆளுநர் மாளிகைக்கு சென்றவுடனேயே,‘‘ உங்கள் கோரிக்கை நிறைவேறப்போகிறது’’ என்று கூறியவாறே.  என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தார். அதை வாங்கிப் படித்ததும் நான் ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டேன். இட ஒதுக்கீட்டுப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுக்க பி.வி. வெங்கடகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அக்காகிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆளுநர் முயற்சி தோல்வி!

அதாவது.... வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக சாதிவாரி மக்கள்தொகை நடத்த ஆணையம் அமைக்கப்படுமாம். அந்த ஆணையம் அடுத்த சில மாதங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துமாம். அதனடிப்படையில் ஒவ்வொரு சாதிக்கும்  இட ஒதுக்கீடு வழங்குமாம். இவையெல்லாம் நடக்குமா, நடக்காதா? என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாதாம். நடந்தாலும் கூட எவ்வளவு காலத்திற்குள் நடக்கும் என்பது யாருக்கும் தெரியாதாம். ஆனால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும்  ரத்து செய்யப்படக்கூடிய அரசாணையை நம்பி நாங்கள் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டு, காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டுமாம். இது யாரை ஏமாற்றும் முயற்சி? ஆளுநரின்  யோசனையை கேட்டவுடன் எந்த பதிலும் கூறாமல் அங்கிருந்து வெளியில் வந்தேன்.

உடனடியாக வன்னியர் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து பேசினேன். கோரிக்கை நிறைவேறாத நிலையில் தேர்தல் புறக்கணிப்பை கைவிட வேண்டாம் என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தனர். அனைவரின் ஒப்புதலுடன், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை வன்னியர் சங்கம் புறக்கணிக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தேன். அதை ஆளுனரும் எதிர்பார்க்கவில்லை..... மத்திய அரசும் எதிர்பார்க்கவில்லை. எங்களின் தேர்தல் புறக்கணிப்பை கைவிடச் செய்வதற்காக வன்முறைகளையும், ஒடுக்கு முறைகளையும் கட்டவிழ்த்து விட்டன மத்திய அரசும், ஆளுநர் தலைமையிலான மாநில அரசும்!

நாளை...
மஞ்சள் பூ நடவடிக்கை!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages