முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 41
(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)
40. மஞ்சள் பூ நடவடிக்கை!
(Yellow Flower Operation)
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு ஆளுநர் ஆட்சி நடைபெற்றது. வன்னியர் சங்கத்தின் கோரிக்கைகளை ஆய்வு செய்வதாகவும், விரைவில் நிறைவேற்றுவதாகவும் ஆண்டு முழுவதும் ஆளுநர் அலெக்சாண்டர் கூறிக் கொண்டிருந்தாரே தவிர, கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக 1988-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 12-ஆம் தேதி, அனைவருக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் நோக்குடன் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு வசதியாக ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி எங்களை ஏமாற்றப் பார்த்தார் தமிழக ஆளுனர்.
தேர்தல் அறிவிப்பு
அதை ஏற்க முடியாது; தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலை வன்னியர் சங்கம் கண்டிப்பாக புறக்கணிக்கும் என்று அறிவித்தேன். அடுத்த நாளே, தமிழகத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. 1989-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. வன்னியர் சங்கத்தின் தேர்தல் புறக்கணிப்பு மிகவும் தீவிரமாக இருக்கும் என்பதை மத்திய அரசு நன்றாக உணர்ந்து இருந்தது. அதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு அடுத்த நாளே வரலாறு காணாத அளவில் துணை இராணுவப் படைகளை மத்திய அரசு தமிழகத்திற்கு கொண்டு வந்து இறக்கியது. மத்திய அரசின் நோக்கம் எங்களை அச்சுறுத்த வேண்டும் என்பது தான்.
ஆனால், நாங்கள் கொஞ்சமும் அசரவில்லை. 1987-ஆம் ஆண்டு ஒரு வார கால தொடர்சாலை மறியல் போராட்டத்தின் போதே தமிழக காவல்துறையும், மத்திய அரசின் துணை இராணுவப் படைகளும் இணைந்து நடத்திய அத்துமீறல்களையும், அட்டகாசங்களையும் எதிர்கொண்ட அனுபவம் எங்களுக்கு உண்டு. அப்போது மத்திய, மாநிலக் காவல்படைகள் கூட்டணி அமைத்தாலும் கூட, தொடர் சாலைமறியல் போராட்டத்தை முறியடிக்க முடியவில்லை. 7 நாட்களும் தமிழகத்தில் எந்த வாகனமும் ஓடவில்லை. சாலைமறியல் போராட்டம் தொடரும் என்று சிறையில் இருந்தவாறே நான் அறிவித்திருந்தால், மறியல் போராட்டம் தொடர்ந்து இருந்திருக்கும். ஆனால், சாலைமறியல் நீடித்தால் நிலைமையை சமாளிக்க முடியாது என்பதால், போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த என்னிடம் கேட்டுக் கொண்டனர். அதுமட்டுமின்றி, சென்னை போன்ற நகரங்களில் பேருந்துகள் இயங்காததால் பாதிக்கப்பட்ட மக்கள் எங்களை விமர்சிப்பதற்கு பதிலாக, ‘‘ டாக்டர் ராமதாஸ் கேட்கும் இட ஒதுக்கீட்டை கொடுத்துவிட வேண்டியது தானே’’ என்று எங்களுக்கு ஆதரவாக பேசினர். அவர்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் தான் சாலைமறியல் போராட்டத்தை 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி நள்ளிரவுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்தேன். அதன்பிறகு தான் தொடர் சாலைமறியல் முடிவுக்கு வந்தது என்பது வரலாறு.
முழு அடைப்பு போராட்டம்
அதைப்போலவே, 1989-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் புறக்கணிப்பையும் வெற்றிகரமாக நடத்திவிட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். அதற்கு முன்பாகவே எங்கள் வலிமையை வெளிப்படுத்துவதற்காக 1988-ஆம் ஆண்டு திசம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தோம். தமிழ்நாட்டின் வரலாற்றில் இரு நாட்கள் இடைவெளியில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டதும், அப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியதும் அது தான் முதல்முறை என்று நான் கருதுகிறேன். ஆனால், திசம்பர் 15-ஆம் நாள் விவசாயிகள் சங்கம் முழு அடைப்பு அறிவித்திருந்ததால், நாங்கள் 16-ஆம் தேதிக்கு போராட்டத்தை மாற்றினோம். ஆனால், அந்த செய்தி தொலைதூரப் பகுதிகளில் உள்ள வன்னியர்களைச் சென்றடையவில்லை. அவர்கள் 15-ஆம் தேதியே முழு அடைப்புப் போராட்டத்தை தொடங்கி விட்டனர். ஆனாலும், 16-ஆம் தேதியும் முழு அடைப்பு போராட்டம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடந்தது.
முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதால் வன்னியர்கள் மீதான காவல்துறை மற்றும் துணை இராணுவத்தினரின் அடக்குமுறை இன்னும் அதிகரித்தது. வன்னியர்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைக்கு மஞ்சள் பூ நடவடிக்கை (Yellow Flower Operation) என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதன்படி வன்னியர்களுக்கு எதிராக வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவுக்கு ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவற்றைப் பார்ப்பதற்கு முன்பாக, துணை இராணுவம் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டதற்கு, வன்னியர்களை ஒடுக்குவது மட்டுமின்றி, இன்னொரு காரணமும், நோக்கமும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு இருந்தது; அதுகுறித்து இங்கு சுருக்கமாக விளக்குகிறேன்.
திரிபுராவும், தமிழ்நாடும்!
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை நாங்கள் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த போது, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் பழங்குடியின மக்கள் ஒன்று சேர்ந்து திரிபுரா தேசிய தன்னார்வலர்கள் படை (Tripura National Volunteers) என்ற அமைப்பை விஜய்குமார் ஹிராங்க்வால் என்பவர் தலைமையில் உருவாக்கி, திரிபுராவை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வந்தனர். 1980-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் ஆயுதம் ஏந்தி போராடி வந்த அந்தக் குழுவினரிடம் 1987-ஆம் ஆண்டு ராஜிவ் தலைமையிலான மத்திய அரசு பேச்சு நடத்தியது. அப்போது ராஜிவ்காந்தி தரப்பில் அவர்களுக்கு சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதன்படி, அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு, அவர்கள் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கினர்.
திரிபுரா தேசிய தன்னார்வலர்கள் படையினர் ஆயுதப் போராட்டம் நடத்திய போது, அவர்களை ஒடுக்குவதற்காக இராணுவம் வரவழைக்கப்பட்டது. அப்போது திரிபுராவில் இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தேசிய தன்னார்வலர்கள் படை சரணடைந்தவுடன் தேர்தல் அறிவிக்கப் பட்டது. அப்போதும் இராணுவத்தினரை திரிபுராவில் வைத்திருந்த மத்திய அரசு, அவர்களின் உதவியுடன் 1988-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த தேர்தலில் காங்கிரசை வெற்றி பெறச் செய்து ஆட்சியில் அமர்த்தியது.
அதேபோல், தமிழகத்திலும் எங்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக துணை இராணுவப்படைகளை கொண்டு வந்து அவர்களின் துணையுடன் ஆட்சியைப் பிடிப்பது தான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம் ஆகும். ஆனால், தமிழகத்தில் அப்படி ஒரு ஜனநாயகப் படுகொலை நடக்க வன்னியர் சங்கம் அனுமதிக்க வில்லை. அதனால், காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைப் பிடிக்கும் ஆசை நிறைவேறவில்லை.
உயிரைக் கொடுக்கத் தயார்
முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்ற பிறகு வன்னியர்கள் மீதான அடக்குமுறை உச்சக்கட்டத்தை அடைந்தது. 1988 டிசம்பர் மாதத்துக்குள்ளாகவே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வன்னியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். வன்னியர்கள் மிகுதியாக வாழும் கிராமங்களில் நுழைந்த காவலர்களும், துணை ராணுவத்தினரும் பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டது மட்டுமின்றி, வீடுகளுக்குள் புகுந்து வேர்க்கடலை மூட்டைகளைத் திருடுவது முதல், தங்க நகைகளைப் பறிப்பது வரை பல்வேறு சட்டவிரோத செயல்களை செய்தனர். இது குறித்து பத்திரிகைகள் பக்கம், பக்கமாக செய்தி வெளியிட்ட போதிலும், நாட்டைக் காக்கும் படையினர் திருட்டு, கொள்ளையை கைவிடவில்லை.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் மோட்டான்குறிச்சி அருகே பொதக்காடு கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு பரப்புரையில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் சுப்பிரமணியம் என்ற அப்பாவி இறந்தார். வன்னியர்களின் தேர்தல் புறக்கணிப்பு முடிவை திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவு தோல்வியடைந்து விட்ட நிலையில், வன்னிய மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி, வழிக்கு கொண்டு வருவதற்காகவே காவல்துறையும், துணை இராணுவப் படைகளும் இத்தகைய ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டன. சில கிராமங்களில் காவல் படையினர் பாலியல் வன்கொடுமைகளிலும் ஈடுபட்டனர் என்று அப்போது வெளியான தராசு வார இதழில் ரவிச்சந்திரன் என்ற செய்தியாளர் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.
வன்னியர்கள் அதிகமாக உள்ள திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களில் எங்கு பார்த்தாலும் துப்பாக்கியும் கையுமாக துணை இராணுவப் படைகள் ரோந்து வந்ததால் அந்தப் பகுதிகளில் மயான அமைதி நிலவியது. ஆனாலும், சட்டப்பேரவைத் தேர்தல் புறக்கணிப்பில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.
அந்த நேரத்தில் தராசு இதழுக்கு நான் அளித்த நேர்காணலின் போது, ‘‘ வன்னியர் சங்கத்தின் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை முறியடிக்க துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், இனி உங்கள் கோரிக்கைகளுக்காக எப்படி போராடப் போகிறீர்கள்’’ வினா எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த நான்,‘‘நாங்கள் ராணுவத்தைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம். எங்களிடத்தில் 25 லட்சம் இளைஞர்கள் உள்ளனர். அவர்களின் 50 லட்சம் கைகள்தான் எங்கள் ஆயுதம். ஒரு லட்சம் பேர் உயிர் கொடுக்கவும் தயார். அவர்களில் முதல் பலியாக நானே கூட இருப்பேன். சுயமாகச் சிந்திக்கும் மக்கள் ஊழல் ஆட்சிகளைப் புறக்கணிப்பார்கள். வோட்டுச் சாவடிக்குப் போக மாட்டார்கள்’ என்று கூறினேன்.
கைது வேட்டை
அதற்குள்ளாக தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருந்தது. வன்னியர்களின் தேர்தல் புறக்கணிப்பை தமிழக காவல்துறையும், மத்திய துணை இராணுவப் படைகளும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது. கடைசி உத்தியாக காவல்துறையினர், தங்களின் வழக்கமான அணுகுமுறையைக் கையாண்டது.
அதன்படி, தேர்தல் புறக்கணிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேர்தல் புறக்கணிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்யவும் வன்னியர் சங்கத் தலைமை நிலையச் செயலாளர் குருபரன், வீரபத்ர படையாட்சி மாவட்டம், மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தனர். ஆனால், அவர்கள் ஊர் ஊராக மகிழுந்துகளில் சென்று வன்முறையைத் தூண்டினார்கள் என்று கூறி காவல்துறை கைது செய்தது. அது மட்டுமின்றி, அவர்கள் வந்த வாகனத்தையும் கைப்பற்றிய காவல்துறையினர், வாகன ஓட்டுனர்களையும் கைது செய்தது. தேர்தல் புறக்கணிப்பு பணிகளை மேற்கொள்ளும் வன்னியர் சங்க நிர்வாகிகளுக்கு வாகனம் கூட கிடைக்கக்கூடாது என்பதற்காக இவ்வாறு அவர்கள் செய்தனர்.
தமிழ்நாடு முழுவதும் வன்னியர் சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வந்த நிலையில், அடுத்து என்னை கைது செய்ய காவல்துறை முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு இருந்தது. அதுமட்டுமின்றி, போராட்டத்தின் போது காவல்துறையினரால் கைது செய்யப்படும் வன்னியர் சங்கத் தலைவர்களையும், நிர்வாகிகளையும் பிணையில் எடுக்க வேண்டிய கூடுதல் பொறுப்பும் சேர்ந்து கொண்டது.
அதனால், எனது மருத்துவமனையில் அமர்ந்து கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கைது செய்யப்பட்ட வன்னியர் சங்கத்தினரையும், இனி கைது செய்யப்பட்டவுள்ளவர்களையும் பிணையில் எடுப்பதற்காக வழக்கறிஞர் குழுக்களை அமைக்கும்படி ஆலோசனைகளை வழங்கி வந்தேன். அப்போது என்னை சந்தித்த ஜூனியர் விகடன் இதழின் செய்தியாளர்,‘‘நீங்கள்கூட கைது செய்யப்படப் போகிறீர்கள் என்று செய்தி நிலவுகிற போது நீங்கள் எல்லோர் கண்ணிலும்படும்படி கிளினிக்கில் உட்கார்ந்திருக்கிறீர்களே?’’ என்று வினா எழுப்பினார்.
அந்த வினாவிற்கு பதிலளிப்பதற்கு முன்பாக அந்த செய்தியாளரை எனது மகிழுந்துக்கு அழைத்துச் சென்று, திறந்து காட்டினேன். அங்கு சிறைக்கு சென்றால் தேவைப்படக்கூடிய அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பெட்டியும், படுக்கையும் தயாராக வைக்கப்பட்டிருந்தன. அதைக் காட்டி, ‘‘நான் கைதாவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன். ஜெயிலுக்குப் போக பெட்டி, படுக்கை எல்லாம் கட்டிக்கிட்டு போலீசுக்காக காத்திருக்கிறேன்’’ என்று கூறினேன். ஆனால், காவல்துறை கடைசி வரை என்னை நெருங்கவில்லை.
நாளை...
பிசுபிசுத்துப் போன தேர்தல்!
No comments:
Post a Comment