முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 44
(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)
43. கலைஞர் கட்டவிழ்த்த ஒடுக்குமுறை!
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தான் வன்னியர் சங்கம் போராட்டம் நடத்தியது. எங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்து தான் என்னை பேச்சுவார்த்தைக்கு கலைஞர் அழைத்தார். கலைஞரின் ஆலிவர் இல்ல சாலையில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுக்களின் போது வன்னியர்கள் உள்ளிட்ட 10 சாதியினர் கொண்ட பிரிவுக்கு 20% வழங்குவதாக கலைஞர் ஒப்புக் கொண்டார். அதன்பின் கலைஞர் இல்லத்தில் நடந்த சதியாட்டங்கள் குறித்து கடந்த அத்தியாயத்தில் விரிவாக விளக்கியிருந்தேன்.
மறக்க முடியாத துரோகம்
இந்த விஷயத்தில் கலைஞர், அவரின் நாடாளுமன்ற செயலாளர் எல்.கணேசன் ஆகிய இருவரும் இணைந்து சில குறிப்பிட்ட சமுதாயங்களுக்கு ஆதரவாக செய்த துரோகம் சாதாரணமானது அல்ல. அதனால் தான் கலைஞர் கொடுத்தது அழுகிய கனி என்று கடுமையாக விமர்சித்தேன். இதில் இழைக்கப்பட்ட துரோகம் குறித்து விளக்குகிறேன்....
தமிழ்நாட்டில் சில பெரிய சாதிகள் உள்ளன. அந்த சாதிகள் தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் இருக்கும். அவர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம்பெற்று இருப்பார்கள். அவர்கள் கல்வி, சமூக, பொருளாதார நிலையில் சற்று மேம்பட்டு இருப்பார்கள். அதே பெயரில் சில சாதிகள் இருக்கும். அவர்கள் சில தென் மாவட்டங்களில் மட்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வசிப்பார்கள். அவர்கள் கல்வி, சமூக, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி இருப்பார்கள். அந்த சாதிகளை சீர்மரபினர் பட்டியலில் சேர்த்திருப்பார்கள். சீர்மரபினர் பட்டியலில் உள்ள சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வருவர். ஆனால், இரு சாதிகளுக்கும் ஒரே மாதிரியான சாதிச் சான்றிதழ் தான் வழங்கப்படும். கலைஞர் நினைத்திருந்தால் சீர்மரபினருக்கு, அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு தனியாக இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், கலைஞரும், அவரது கூட்டாளிகளும் திட்டமிட்டு சீர்மரபினரை மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்த்தனர்.
அதன் மூலம் கல்வி, சமூக, பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிகள், தங்களை சீர்மரபினராக காட்டிக் கொண்டு எம்.பி.சி சான்றிதழ் வாங்கிக் கொண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அபகரித்துக் கொள்வார்கள். இதனால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் வன்னியர்கள் தான் . தமிழ்நாட்டில் வன்னியர்களின் மக்கள்தொகை குறைந்தது 25% ஆவது இருக்கும். அதன்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு குறைந்தது 17% பிரதிநிதித்துவமாவது கிடைக்க வேண்டும். ஆனால், பாதியளவு இட ஒதுக்கீடு கூட வன்னியர்களுக்கு கிடைப்பதில்லை. உண்மையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீடு என்பது அழுகிய கனியை விட மோசமான நிலையில் உள்ளது.
இதைவிட மோசமான துரோகத்தை வன்னியர்களுக்கு யாராவது செய்ய முடியுமா?
அப்படிப்பட்ட துரோகத்தைச் செய்தவர் கலைஞர் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
இது ஒருபுறமிருக்க மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த பிறகு, இன்று வரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 9 சாதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அதன் மூலம் அப்பிரிவில் இடம் பெற்றுள்ள சாதிகளின் எண்ணிக்கை 107-இல் இருந்து 116 ஆக உயர்ந்துள்ளது. இதுவும் வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்புகளை கடுமையாக பாதித்திருக்கிறது.
துரோகம் - முதல் முறையல்ல
வன்னியர்களுக்கும், அவர்களை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் கலைஞர் துரோகம் செய்தது இது முதல் முறையல்ல.
1954&ஆம் ஆண்டு காமராசர் ஆட்சிக்காலத்தில் இராமசாமி படையாட்சியாரின் கோரிக்கையை ஏற்று வன்னியர்கள் உள்ளிட்ட 39 சாதிகள் அடங்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இட ஒதுக்கீடு எதுவும் கிடையாது. இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவே கருதப் பட்டனர். ஆனாலும், அவர்களுக்கு 92 எம்.இ.ஆர் (Madras Educational Rules - MER) என்றழைக்கப்பட்ட சென்னை மாகாண கல்வி விதிகளின் 92-ஆவது பிரிவின்படி கல்விக்கட்டணத்தில் பாதி செலுத்தினால் போதும் என்ற ஒரு சலுகை வழங்கப்பட்டது. அதனால் ஏழை வன்னியர் சமுதாயக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாதி கட்டணம் மட்டும் செலுத்தி படிக்கலாம் என்ற சாதகமான நிலை உருவானது. ஆனால், 1971&ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற கலைஞர், அந்த முறையை அடியோடு ரத்து செய்தார். அதனால் வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 39 சாதியினருக்கு கிடைத்து வந்த கல்விக் கட்டண சலுகை பறிக்கப்பட்டது. இரண்டாவது பதவிக் காலத்தில் அந்த துரோகத்தைச் செய்த கலைஞர், மூன்றாவது பதவிக்காலத்தில், வன்னியர்கள் கேட்ட இடஒதுக்கீட்டை வழங்காமல், பயனில்லாத இட ஒதுக்கீட்டை வழங்கி பெருந்துரோகம் செய்தார்.
3 முக்கிய முடிவுகள்
கலைஞரின் இந்த துரோகம் குறித்து விவாதிக்கவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்து முடிவெடுக்கவும் வன்னியர் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் திண்டிவனத்தில் 1989-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14&ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மிகவும் முக்கியமான 3 முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றின் விவரம்:
1. வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு முன்வராவிட்டால் 1989-ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.
2. தமிழக அரசு அறிவித்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டால் வன்னியர்களுக்கு எந்த பயனுமில்லை என்பதால், வன்னியர் சங்க மகளிர் அணி சார்பில் 24.04.1989-இல் தமிழ்நாடு முழுவதும் இடஒதுக்கீட்டு அரசாணை நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும்.
3. பாட்டாளி மக்கள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சி தொடங்கப்படும்.
ஆகியவை தான் வன்னியர் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகும்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வன்னியர் சங்க மகளிர் அணி சார்பில் 1989-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இட ஒதுக்கீட்டு அரசாணை எரிப்புப் போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
கைவிடப்பட்ட போராட்டம்
ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு தொடர்சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒரு மாதம் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டால், உள்ளாட்சித் தேர்தல் பணிகள் பாதிக்கப்படும்; பொதுமக்கள் தொல்லைகளை அனுபவிக்க நேரிடும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து ஆலோசனைகள் வந்தன. அவற்றை ஏற்று, உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் வரை சாலைமறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்படும் என்று அறிவித்தேன். இந்த அறிவிப்பை அனைத்து ஊடகங்களும் வரவேற்று எழுதின.
கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறை
ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவின் ஈடு இணையற்ற ஜனநாயகவாதி என்று தமக்குத் தாமே பட்டம் சூட்டிக் கொள்ளும் கலைஞரால், அவரது அரசுக்கு எதிராக போராட்டம் அறிவிக்கப்படுவதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை. வன்னியர்கள் மீது வன்முறையையும், ஒடுக்குமுறையையும் கலைஞர் அரசு கட்டவிழ்த்து விட்டது. வன்னியர் சங்கத்தின் மூத்த தலைவர்களான பு.தா. இளங்கோவன், பு.தா. அருள்மொழி, நெய்வேலி நில மீட்புக்குழுத் தலைவர் வாழைச் செல்வன் ஆகிய மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்த கலைஞர் அரசு, அவர்களை கடலூர் மத்திய சிறையில் ஒன்றாக அடைத்தது. பின்னர் அவர்கள் மூவரையும் முறையே கோவை, மதுரை, திருச்சி ஆகிய சிறைகளில் அடைத்தது.
அதற்கு காரணம் என்ன தெரியுமா?
அவர்கள் மூவரையும் கடலூர் சிறையில் அடைத்தால் அவர்களின் குடும்பத்தினர் அடிக்கடி வந்து பார்ப்பார்களாம். அதைத் தடுப்பதற்காக அவர்களை கடலூர் சிறையிலிருந்து மாற்றியது மட்டுமின்றி, அவர்கள் ஒருவரை ஒருவர் கூட சந்தித்துக் கொள்ள முடியாத வகையில் தனித்தனி சிறைகளில் அடைக்க ஆணையிட்டார்களாம். அதுமட்டுமல்ல.... வன்னியர் சங்கத்தின் நிர்வாகிகளான தாராசிங், இராஜேந்திரன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது கலைஞர் அரசு. பழிவாங்கப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்களை அவர்களின் குடும்பத்தினர் கூட பார்க்கக்கூடாது என்று நினைக்கும் கலைஞர் எவ்வளவு பெரிய ஜனநாயகவாதி.... மனிதாபிமானி பாருங்கள்.
மற்றொருபக்கம் தென்னாற்காடு மாவட்டத்தில் வன்னியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம் அதிகரித்துக் கொண்டே சென்றது. வன்னியர்களின் வீடுகளுக்குள் புகுந்த காவல்துறையினர் வீட்டில் உள்ளவர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கினார்கள். கடலூரில் சீனிவாசப்படையாட்சி என்ற 83 வயதான ஓய்வுபெற்ற காவலர் வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர், அவரது மார்பில் குத்திக் கொடுமை செய்தனர். சீனிவாச படையாட்சியின் மகன், மருமகள் ஆகியோரும் காவலர்களாக பணியாற்றி வந்தனர். அவர்களையும் காவல்துறை மிரட்டியது.
என் வீட்டில் சோதனை
வட ஆற்காடு மற்றும் தென்னாற்காடு மாவட்டங்களில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர் குடும்பங்கள் மீது கலைஞரின் கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறையினர் பொய்வழக்கு பதிவு செய்து கொடுமைப்படுத்தினார்கள். தென்னாற்காடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஜெகநாதன், அப்போதைய அமைச்சர் பொன்முடியின் தூண்டுதலால், வன்னிய இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்துவது, பொய்வழக்கு போடுவது என தொடர்ந்து ஒடுக்குமுறையில் ஈடுபட்டு வந்தார்.
காவல்துறையினரின் கொடுங்கரங்கள் எனது வீட்டுக்கும் நீண்டன. எனது வீட்டில் காவல்துறையினர் எந்த சோதனையும் நடத்தப்படாத நிலையில், காவல்துறை சோதனை நடத்தியதாக ஊடகங்களுக்கு செய்தி கொடுத்தார் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெகநாதன். இதன் நோக்கம் வன்னியர்களை மிரட்டி, மன உறுதியை குலைப்பது ஆகும். 1989-ஆம் ஆண்டு மே மாதம் 4-ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் ஒரு வாகனத்தில் காவல் படையினர் எனது வீட்டுக்கு வந்தனர். அவர்களிடம் எதற்காக வந்தீர்கள் என்று கேட்ட போது, ‘‘ உங்கள் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது; உங்கள் வீட்டை சோதனையிடுவதற்காகவும், உங்கள் பாதுகாப்புக்காகவும் வந்திருக்கிறோம்’’ என்று கூறினார்கள். ஆனால், வெடிகுண்டு சோதனை நடத்துவதற்காக வந்த காவலர்களின் கைகளில் மெட்டல் டிடெக்டர் கூட இல்லை. அவர்களின் நோக்கம் வெடிகுண்டு சோதனை நடத்துவது அல்ல. எனது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எந்த மிரட்டலும் வரவில்லை என்பது தான் உண்மை. அவர்களின் நோக்கம் எல்லாம் என்னை மனதளவில் உறுதியிழக்கச் செய்ய வேண்டும் என்பது தான்.
தடியடி - துப்பாக்கிச் சூடு
காவல்துறை அட்டகாசம் அத்துடன் நின்றுவிடவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே அதன் தொழிற்சங்கமான பாட்டாளி தொழிற்சங்கம் அமைக்கப்பட்டிந்தது. அந்த அமைப்பின் சார்பில் 1989&ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி மே தின ஊர்வலம் விழுப்புரத்தில் நடத்தப்பட்டது. அதில் நானும் கலந்து கொண்டேன். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அந்த ஊர்வலத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர். ஊர்வலத்தின் போது, காவல்துறையினர் அவர்களின் வாகனங்கள் மீது அவர்களே கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அதைக் காரணம் காட்டி, ஊர்வலத்தில் வந்த வாகனங்களின் முன்னும் பின்னும் தங்களின் வாகனங்களை நிறுத்தி, ஊர்வலம் நகர முடியாத அளவுக்கு தடையை ஏற்படுத்தினர். ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது சரமாரி தடியடியும் நடத்தினர். அதில் பலர் காயமடைந்தனர்.
காவல்துறையின் ஒடுக்குமுறையால் ஊர்வலம் தடைபட்ட நிலையில், நகராட்சித் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைதியாக நடந்து கொண்டிருந்த கூட்டத்திற்குள் புகுந்த காவலர்கள் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினார்கள். அதில் கடலூர் புதுச்சத்திரத்தைச் சேர்ந்த இராமன் என்பவர் படுகாயம் அடைந்தார். அதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் பகுதி மக்கள், திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு குவிந்த காவல்துறையினர், எந்தவித முன்னெச்சரிக்கையும் செய்யாமல் மறியல் செய்த பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் லட்சுமணன் என்பவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து பல ஊர்களில் பதற்றம் அதிகரித்தது. பல இடங்களில் வன்னியர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது.
அராஜகப் பேர்வழிகள் யார்?
குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்ததைப் போல, வன்னியர்கள் மீது காவல்துறையைக் கொண்டு தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட அனைத்து வகையான வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்ட கலைஞர், எங்களை வன்முறையாளர்களாக காட்டவும் முயன்றார். எங்களை யாரோ தூண்டுவதாகவும், அதன்படி தான் நாங்கள் போராட்டங்களைச் செய்வதாகவும் கலைஞர் அபாண்டமாக குற்றஞ்சாட்டினார்.
கலைஞரின் குற்றச்சாட்டுகளை மறுத்த நான்,‘‘ எங்களுக்கு சொந்தமாக புத்தி இருக்கிறது. எங்களை யாரும் தூண்டத் தேவையில்லை. எங்களைத் தூண்டியவர்கள் யார் என்பதை கலைஞர் வெளியிட்டால் அல்லது நாங்கள் சதித்திட்டம் தீட்டுவதாக நிரூபித்தால் வன்னியர் சங்கத்தையே கலைத்து விடத் தயார். மேலும், எங்களைப் பார்த்து நாங்கள் ரயிலைக் கவிழ்க்கவும், தலைவர்களைக் கொல்லவும், சதி செய்வதாக கலைஞர் கூறுகிறார். சைக்கிள் செயினை ஓர் ஆயுதமாக தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்ததே திமுக தான். அவர்கள் அராஜகப் பேர்வழிகள் என்பதை நிரூபிக்க ஓர் உதாரணம் சட்டசபையில் ஒரு பெண்ணின் புடைவையை களைந்தது. பழைய உதாரணம் கேட்டால், தாம் டாக்டர் பட்டம் வாங்க அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதயகுமாரைக் கொன்றதைக் கூறலாம். மறக்கவே முடியாத உதாரணம் கேட்டால், தன்னை எதிர்த்து எழுதினார்கள் என்பதற்காக அலைஓசை, குமுதம், மக்கள்குரல் ஆகிய பத்திரிக்கை அலுவலகங்களில் அவர்கள் ஆடிய வெறியாட்டத்தைக் கூறலாம். அராஜகத்துக்கே திமுக தான் உதாரணம். இவர்கள் எங்களைப் பார்த்து சதி செய்வதாக கூறுகிறார்கள். நாங்கள் ரயில் மறியல் போராட்டம் செய்த போதும் கூட ரயிலைக் கவிழ்க்கவில்லை; கவிழ்க்க நினைத்ததும் இல்லை’’ என்று கூறினேன். எனது இந்த விளக்கம் 10.05.1989 ஆம் தேதியிட்ட ஜூனியர் விகடன் வார இதழில் முழுமையாக வெளிவந்தது.
அதுமட்டுமின்றி, இடஒதுக்கீடு குறித்து மருத்துவர் இராமதாசுடன் பேசி பயன் இல்லை என்றும் கலைஞர் கூறியிருந்தார். அது தொடர்பாக பத்திரிகையாளர்கள் என்னிடம் எழுப்பிய வினாக்களுக்கு நான் அளித்த பதில் வருமாறு:
இடஒதுக்கீடு குறித்து மருத்துவர் இராமதாசுடன் பேசி பயன் இல்லை என்று கலைஞர் கூறியுள்ளார். பரவாயில்லை. நான் கவுரவம் பார்ப்பவன் இல்லை. கவுரவம் பார்க்காதவன் என்பதால் தான், பூட்டாசிங்கை பார்க்க பெங்களூருக்கும், தில்லிக்கும் சென்றேன். எம்.ஜி.ஆரையும், கலைஞரையும் கூட சந்தித்தேன். இப்போது கலைஞர் என்னை சந்தித்துப் பேசாவிட்டால் கூட பரவாயில்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கட்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட 39 சாதிகளுக்கு மட்டுமாவது அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு 3 தொகுப்புகளாகப் பிரித்து இட ஒதுக்கீடு செய்யட்டும். இதை அவர் சர்வகட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசி முடிவெடுத்தால் கூட சம்மதம் தான் என்று நான் கூறினேன். எனது இந்த நிலைப்பாட்டுக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவளித்தன.`
கண்டனக் கூட்டம்
தொழிலாளர் நாளன்று வன்னியர் சங்கத்தினர் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து சென்னை தியாகராயநகர் பனகல் பூங்கா அருகில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தினோம். அதில் தொழிற்சங்கத் தலைவர் க.சுப்பு, அப்போது சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருந்த சு. திருநாவுக்கரசு, நடிகரும் தாயக மறுமலர்ச்சிக் கழகத் தலைவருமான டி.இராஜேந்தர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு காவல்துறையின் அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அந்தக் கூட்டத்தில் பேசிய நான்,‘‘இந்த மேடையில் திருநாவுக்கரசு, டி.இராஜேந்தர், க.சுப்பு ஆகியோர் இருப்பதற்கு கலைஞர் தான் காரணம். இது தான் கருணாநிதித்தனம். காவல்துறையைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை. நாங்கள் இராணுவத்தையே சந்தித்திருக்கிறோம். கலைஞரே பாயும்புலி பண்டாரக வன்னியன் என்று தானே எழுதுகிறார்?’’ என்று வினா எழுப்பினேன்.
வெற்று வசனம்
கலைஞர் எப்போதும், ‘‘ நாங்கள் செய்வதைத் தான் சொல்வோம், சொல்வதைத் தான் செய்வோம்’’ என்று வசனம் பேசுவார். ஆனால், அவை வெற்று வசனங்கள் தான் என்பதற்கு ஆயிரம் உதாரணங்களைக் கூற முடியும். அவற்றில் ஒரு உதாரணத்தை மட்டும் இப்போது கூறுகிறேன்...
வன்னியர்களுக்கு தனியாக 20% இட ஒதுக்கீடு கோரிய நிலையில், ஒட்டுமொத்தமாக 107 சாதிகளை இணைந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவை உண்டாக்கி, அதற்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதில் வன்னியர் சங்கத்துக்கு உடன்பாடு இல்லை என்று தொடக்கத்திலேயே கூறியிருந்தேன். அதற்கு பதிலளித்த கலைஞர், இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அதை மறு ஆய்வு செய்வேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை கலைஞர் நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பில், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 03.04.1990&இல் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினேன். ஆனால், அந்தக் கடிதத்திற்கு கலைஞரிடமிருந்து பதிலே வரவில்லை.
இது தான் கலைஞரின் ‘‘நாங்கள் செய்வதைத் தான் சொல்வோம், சொல்வதைத் தான் செய்வோம்’’ வசனம்.... வெற்று வசனம் என்பதற்கு உதாரணம்.
நாளை....
பா.ம.க. தொடங்கப்பட்டது ஏன்?
No comments:
Post a Comment