முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 45 - Agnipuratchi

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 45

Share This

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 45

(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)

44. பா.ம.க. தொடங்கப்பட்டது ஏன்?

இட ஒதுக்கீடு என்ற பெயரில் அழுகிய கனியைக் கொடுத்தார் கலைஞர். அதிலும் கூட, வலது கையால் கொடுத்து விட்டு, இடது கையால் பறித்துக் கொள்வதைப் போல மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு என்று அறிவித்து விட்டு, அதில் சீர்மரபினர் என்ற பிரிவையும் எங்களுக்குத் தெரியாமலேயே  சேர்த்தார் அவர். சீர்மரபினருக்கு இட ஒதுக்கீடு தருவதில் எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், சீர்மரபினர் பட்டியலில் உள்ள பல சாதிகளின் பெயருடன் உள்ள ஒற்றுமையைப் பயன்படுத்தி,  அந்த பெயரில் போலி சாதி சான்றிதழ் வாங்கி, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இட ஒதுக்கீட்டை மட்டுமின்றி, சீர் மரபினரின் இட ஒதுக்கீட்டையும்  தங்களுடையதாக்கிக் கொள்கின்றனர் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடம்பெற்றுள்ள சில சாதியினர். இதற்கெல்லாம் காரணம்  இடஒதுக்கீட்டில் கலைஞர் அரசு செய்த பிழை.

மக்கள்தொகை அடிப்படையில்
சாதிவாரி இட ஒதுக்கீடு ஏன்?

இட ஒதுக்கீட்டில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதை மறுபரிசீலனை செய்வதாக கலைஞர் உறுதி அளித்திருந்தார். பயனில்லாத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், கலைஞர் அளித்திருந்த வாக்குறுதியை நினைவூட்டி அவருக்கு கடிதம் எழுதினேன். ஆனால், அதற்கு எந்த பதிலும் வரவில்லை. மாறாக வன்னியர்களுக்கு எதிராக அடக்குமுறை தான் முடுக்கிவிடப்பட்டது.

வன்னியர் சங்கத்தின் கோரிக்கை என்பது அனைத்து சாதியினருக்கும் அவரவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான். 40 ஆண்டுகளுக்கு முன் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதையே தான் நான் கூறி வருகிறேன். விருந்து வழங்கும் போது பந்தி ஒன்றாக இருந்தாலும் அதில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும்  இலை தனித்தனியாகத் தான் போட வேண்டும். ஒரே இலையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை அமர வைத்து விருந்து படைத்தால் ஒருவருக்குரிய பங்கை இன்னொருவர் அபகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இது இட ஒதுக்கீட்டுக்கும் பொருந்தும். அதனால் தான் அனைவருக்கும் மக்கள்தொகை அடிப்படையில்  தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

ஆனால், தமிழ்நாட்டில் 1989 வரை செயல்படுத்தப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டு முறையாக இருந்தாலும், அதன்பிறகு திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு முறையாக இருந்தாலும் அது மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்கும் வகையில் தான் அமைந்திருக்கிறது. கலைஞர் ஆட்சியில் நாங்கள் கோரியவாறு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அல்லது வன்னிய சமுதாய மக்களைப் போலவே மிக மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள 9 சாதிகளை இணைத்து தனித் தொகுப்பு இட  ஒதுக்கீடு வழங்கப்படாததால் வன்னியர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கூடுதலாக பறிக்கப்பட்டது.

கொள்ளை போகும் இட ஒதுக்கீடு?
அது எவ்வாறு என்பதை விளக்குகிறேன்...

தமிழ்நாட்டில் உள் ஒதுக்கீடுகள் உட்பட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20%, பட்டியலினத்தவருக்கு 18%, பழங்குடியினருக்கு 1% என மொத்தம் 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீடுகளை சம்பந்தப்பட்ட பிரிவில் உள்ளவர்களைத் தவிர வேறு எவரும் அனுபவிக்க முடியாது. 69% இட ஒதுக்கீடு தவிர பொதுப்போட்டிக்கு என்று 31%  உள்ளது. இதில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர், இட ஒதுக்கீட்டுக்கு தகுதி பெறாத உயர்சாதியினர் என  அனைத்துப் பிரிவினரும் போட்டியிடலாம். முழுக்க முழுக்க தகுதி அடிப்படையில் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த பொதுப்போட்டிக்கான 31% இடங்களில் 5 முதல் 6 % இடங்களைத் தான் பிராமணர்கள் உள்ளிட்ட உயர்சாதியினர் கைப்பற்றுகின்றனர். அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் அது குறைவானதும் இல்லை.... அதிகமானதும்  இல்லை. கிட்டத்தட்ட சரியான பிரதிநிதித்துவம் தான்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மொத்தமாக 5 முதல் 6 விழுக்காடு இடங்களைப் பிடிப்பார்கள்.

மீதமுள்ள 20% இடங்கள் யாருக்குச் செல்லும் தெரியுமா?

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட சமுதாயங்கள் தான் அந்த 20% இட ஒதுக்கீட்டை  கைப்பற்றிக் கொள்ளும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 50%க்கும் கூடுதலான இடங்களைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். அதுவும் கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள அனைத்து சாதியினரும் இதை அனுபவிப்பதில்லை. பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள ஒரு சில சாதிகள் மட்டும் தான் இந்த இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர். இந்த சமுதாயங்கள் அவர்களின் மக்கள்தொகையை விட சுமார் 50% கூடுதல் இடங்களை அனுபவிக்கின்றன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது எந்த வகையில் சமூகநீதியாக இருக்கும் சொல்லுங்கள்?

ஒரு சில குறிப்பிட்ட சமுதாயங்கள் மட்டும் இந்த அளவுக்கு இட ஒதுக்கீட்டை கைப்பற்றுவதற்கு காரணம் என்ன?

செழுமையான சாதிகள்
அவர்கள் கல்வியிலும், சமூகத்திலும் மிகவும் மேம்பட்ட நிலையில் இருப்பவர்கள். சமூக நிலையை மதிப்பிடுவதற்கு பொருளாதாரம் ஒரு காரணி அல்ல என்ற போதிலும், கல்வி மற்றும் சமூகம் சார்ந்த அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கு பொருளாதாரம் ஒரு தவிர்க்க முடியாத காரணியாக திகழ்கிறது. அந்த பொருளாதாரமும் அவர்களிடம் தாராளமாக இருக்கும். அதனால், அவர்களால் தரமான கல்வியைப் பெற்று உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுகளையும், வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளையும் எழுத எளிதாக தயாராகின்றனர்.

இந்த நிலையில் உள்ளவர்களுடன் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில்  அடிநிலையில் உள்ள சமுதாயங்களால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக இடங்களைக் கைப்பற்ற எப்படி போட்டியிட முடியும்? பொதுப்போட்டிப் பிரிவுக்கான இடங்களில் இந்த சமுதாயங்களுடன் வன்னியர்களாலும், பிற மிகவும் பிற்படுத்தப்ப வகுப்பினராலும் எவ்வாறு போட்டியிட முடியும். அதனால் தான் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான விழுக்காடு இடங்களை உறுதி செய்யும் வகையில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க  வேண்டும் என்று கோருகிறோம்.

தொடரும் சமூக அநீதி
இந்த சமூக அநீதி இப்போது தான் என்றில்லை... அதற்கு முன்பிலிருந்தே இருந்து வந்திருக்கிறது. ஆனால், அந்த சமூக அநீதியைப் போக்க தமிழக ஆட்சியாளர்கள் எதுவுமே செய்யவில்லை என்பது தான் வருத்தமளிக்கும் உண்மையாகும்.

1960-ஆம் ஆண்டுகளின் இறுதியில் கல்வியில், குறிப்பாக தொழிற்கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலையை அறிந்து கொள்வதற்காக அக்கல்லூரிகளின் முதல்வர்களிடம் இருந்து சட்டநாதன் ஆணையம் சில புள்ளிவிவரங்களைக் கேட்டது. அதன்படி தொழிற்கல்லூரி முதல்வர்கள் அனுப்பிய புள்ளி விவரங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒட்டுமொத்தமாக  25% இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ள போதிலும், ஒட்டுமொத்த இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பொதுப்போட்டி இடங்களிலும் குறிப்பிடத்தக்க இடங்களைப் பிடித்து  ஒட்டுமொத்தமாக 60% முதல் 70% வரை பிரதிநிதித்துவம் பெற்று இருந்தனர்.

தமிழ்நாட்டின்  பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகையில் 11.7% மட்டுமே உள்ள 9 பிற்படுத்தப்பட்ட சாதிகள் அரசு வேலைவாய்ப்புகளில் அரசிதழ் பதிவு பெறாத பணிகளில் 37.3 விழுக்காட்டையும், அரசிதழ் பதிவு பெற்ற பணிகளில் 48.2 விழுக்காட்டையும் பெற்றுள்ளனர் என்பதை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சட்டநாதன் ஆணையம் அதன் அறிக்கையில் நிறுவியிருந்தது.

அதேநேரத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 25% இடஒதுக்கீட்டில் கூட தங்களுக்கான பிரதிநிதித்துவத்தை பெற முடியாமல் தடுமாறினார்கள். மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இடங்களை பிடித்திருந்தனர். பல கல்லூரிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் என்பதே இல்லாமல் இருந்தது என்பதை சட்டநாதன் ஆணையம் படம்பிடித்துக் காட்டியது. சட்டநாதன் ஆணையம் அமைக்கப்படுவதற்கு எவ்வாறு சில சமுதாயங்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டின் பயன்களை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருந்ததோ, அதே நிலை தான், இன்னும் கேட்டால் அதை விட 10 மடங்கு மோசமான நிலை தான் இப்போது நிலவுகிறது.

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பரிந்துரை

சட்டநாதன் ஆணையத்திற்கு பிறகு அம்பாசங்கர் ஆணையம் அமைக்கப்பட்ட காலத்திலும் அதே நிலை தான் தொடர்ந்தது. தமிழ்நாட்டில் உள்ள 3 வகையான தொழிற்கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களில் நான்கில் மூன்று பங்குக்கும் கூடுதலான, அதாவது 75 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்களை வெறும் 34 சமுதாயங்கள் மட்டும் தான் அனுபவித்து வந்தன. மீதமுள்ள 25 விழுக்காட்டுக்கும் குறைவான இடங்கள் தான் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள மற்ற 188 சாதிகளுக்கு கிடைத்தன. 75 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்களைப் பிடித்த 34 பிரிவினரின் மக்கள்தொகை தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோர் மக்கள்தொகையில் சுமார் 40% மட்டும் தான் என்பதையும் அம்பாசங்கர் ஆணையம் விரிவான புள்ளி விவரங்களுடன் நிறுவியிருந்தது.

கல்வி உதவித்தொகை, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றிலும் மூன்றில் இரு பங்குக்கும், அதாவது 66%-க்கும் கூடுதலான இடங்களை மேற்கண்ட 34 சாதிகள் மட்டும் தான் அனுபவித்து வந்தன. அந்த 34 சாதிகளிலும் கூட, முதலில் உள்ள 11 சாதிகளை சேர்ந்தவர்கள்  மட்டும் தொழிற்கல்லூரிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மொத்த இடங்களில் சுமார் 66% இடங்களைக் கைப்பற்றினர்.

இத்தகைய அநீதியை களைய பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடம்பெற்றுள்ள சமூகத்திலும், கல்வியிலும் முன்னேறிய சமூகங்களை அந்த வகுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று அம்பாசங்கர் ஆணையமும், இட ஒதுக்கீட்டை அதிகமாக அனுபவிக்கும் சமுதாயங்களுக்கு சில நிபந்தனைகளை விதிக்க வேண்டும்; வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டநாதன் ஆணையமும் கூறியிருந்தது. ஆனால், கலைஞர் தலைமையிலான அரசும், எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசும் அந்த பரிந்துரைகளை பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்ளாமல் குப்பைத் தொட்டியில் வீசின. அதுமட்டுமல்ல, எந்த ஆணையத்தின் பரிந்துரையும் இல்லாமல் 15 உயர்சாதிகளை கலைஞரும், 29 உயர்சாதிகளை எம்.ஜி.ஆரும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தனர். அனைத்து நிலைகளிலும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை விட மேம்பட்ட நிலையில் உள்ள அவர்கள் இட ஒதுக்கீட்டில் பெரும் பகுதியை தங்களுடையதாக்கிக் கொள்கின்றனர்.

எதற்கும் தாயாரில்லாத கலைஞர்

அந்த குறைகளை களைய வேண்டும் என்பதற்காகத் தான் சிறப்பான ஒட ஒதுக்கீட்டுத் திட்டத்தை கலைஞரிடம் வகுத்துக் கொடுத்தோம். ஆனால், அதை சிதைத்து மோசமான இடஒதுக்கீட்டை கலைஞர் நடைமுறைப்படுத்தினார். தாம் வழங்கிய இட ஒதுக்கீடு மோசமானதாக இருந்தால் அதை மறுஆய்வு செய்வதாக கலைஞர் உறுதியளித்திருந்தார். குறைந்தபட்சம் அவர் வழங்கிய இட ஒதுக்கீடு யாருக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளதா? என்பதையாவது கண்டறிய வேண்டும் அல்லவா? அதற்குக் கூட தமிழக அரசுகள் தயாராக இல்லை. அரசு வேலைவாய்ப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பது குறித்த புள்ளிவிவரங்களைத் தரும்படி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பலமுறை விண்ணப்பித்தும் பதில் கிடைக்கவில்லை. அந்த புள்ளிவிவரங்கள் வெளியானால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான  இட ஒதுக்கீடு என்பதே மோசடி என்ற உண்மை அம்பலமாகிவிடும் என்பதால் தான் அதை வெளியிட எந்த அரசும் முன்வருவதில்லை.

இட ஒதுக்கீடு குறித்த எங்களின்  கோரிக்கைகளை ஏற்க மறுத்த கலைஞர், தொடர்ந்து எங்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டார். அப்போது தான் 2 கோடிக்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நாம் நமக்கான இட ஒதுக்கீட்டை மற்றவர்களிடம் கேட்பதற்கு பதிலாக, நாமே எடுத்துக் கொள்ளும் நிலையை உருவாக்குவோம் என்ற எண்ணத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் என 30&க்கும் மேற்பட்ட சமுதாயங்களின் தலைவர்களை அழைத்து பேச்சு நடத்தினோம். சுமார் 6 மாத இடைவெளியில் மூன்று முறை இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தான் 1989&ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி சென்னை கடற்கரை சீரணி அரங்கில் நடைபெற்ற விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி உதயமானது.

நாளை....
9-ஆவது அட்டவணையில் 69% இட ஒதுக்கீடு!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages