முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 47 - Agnipuratchi

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 47

Share This

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 47

(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)

46. அருந்ததியர், இஸ்லாமியர் உள் ஒதுக்கீடு!

தமிழ்நாட்டில் வன்னியர்கள் உள்ளிட்ட 107 சமுதாயங்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு  பெற்றுக் கொடுத்ததைப் போலவே, பட்டியலினத்தவர்களுக்கான 18% இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3%, பிற்படுத்தப்பட்டோருக்கான 30% இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5% உள் ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்த பெருமையும், சிறப்பும் எனக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் உண்டு.

அருந்ததியர்களின் அவலநிலை

பட்டியலின மக்கள் சமூகத்தில் மிகவும் அடித்தட்டில் இருக்கிறார்கள் என்றால், அவர்களிலும் மிகவும் கீழானவர்களாகத் தான் அருந்ததியர்கள் வைக்கப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களைப் பொறுத்தவரை வாழ்வாதாரப் பாதுகாப்பை வழங்குவது நிலம் தான். ஆனால், கிராமப்புறங்களில் வாழும் அருந்ததிய மக்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு ஒரு சென்ட் நிலம் கூட கிடையாது என்பது தான் வேதனையான உண்மையாகும். பட்டியலினத்தவருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 80 ஆண்டுகளுக்கு மேலாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் போதிலும், அதன் பயன்கள் சமூகத்தின் அடித்தட்டிலும், அடித்தட்டில் உள்ள அருந்ததிய சமுதாய மக்களை இன்று வரை சென்றடையவில்லை.

பட்டியலின மக்களாலேயே அருந்ததியர்கள் ஒதுக்கி வைக்கப்படும் அவலம் இன்னும் நீடிக்கிறது. அருந்ததியர் சமுதாயங்களைச் சேர்ந்த மக்களில் கல்வி பெற்றவர்களின் விழுக்காடு மிக, மிகக் குறைவாகும். பெரும்பான்மையான அருந்ததியர்கள் செருப்பு தைக்கும் தொழிலாளர்களாகவும், துப்புரவுப் பணியாளர்களாகவும் தான் பணியாற்றி வருகின்றனர். கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது; எந்திரங்களைத் தான் பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் பல முறை தீர்ப்பளித்தாலும் கூட அந்த அவலம் இன்னும் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. கழிவுநீர் தொட்டிகளை தூய்மைப்படுத்தும் போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழப்பதாக வாரத்திற்கு ஒருமுறையாவது செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இந்தக் கொடுமைகளுக்கு இன்று வரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கி விட்டு ஒதுங்கிக் கொள்கின்றனர்.

முதலில் குரல் கொடுத்தது பாமக

அருந்ததியர்களின் இந்த அவல நிலைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக அருந்ததியர் சமூக சங்கங்கள் தான் 50 ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தனர். அவர்களின் போராட்டத்திற்கு எந்த  கட்சியும் ஆதரவு அளிக்கவில்லை. அவர்களுக்காக தமிழ்நாட்டில் முதன்முதலில் குரல் கொடுத்த அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். இன்னும் கேட்டால் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப் படுவதற்கு முன்பே, வன்னியர் சங்க காலத்திலேயே அருந்ததியர்களின் இட ஒதுக்கீட்டுக்காக நான் குரல் கொடுத்தேன்.

1988-ஆம் ஆண்டு ஈரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ பள்ளி மைதானத்தில்  வன்னியர் சங்கமும் அருந்ததியர் சங்கமும் இணைந்து வன்னியர் & அருந்ததியர் ஒற்றுமை மாநாட்டை நடத்தின. அருந்ததியர் சங்க தலைவர் மா.இராமன் தலைமையில் நடைபெற்ற அம்மாநாட்டில், நான் கலந்து கொண்டு, அருந்ததியருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; இல்லாவிட்டால் அந்த சமுதாயத்திற்கும் சேர்த்து வன்னியர் சங்கம் போராடும் எச்சரித்தேன். அதுமட்டுமின்றி,  அருந்ததியர் சமூகத்திற்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 6% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த மாநாட்டில் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து 1995-ஆம் ஆண்டு அருந்ததிய மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவையில் வஞ்சிக்கப்பட்டோர் வாழ்வுரிமை மாநாடு நடத்தப்பட்டது.  ஆதி தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான் தலைமையில் நடைபெற்ற அந்தப் போராட்டத்திலும் நான் கலந்து கொண்டு சமுதாயப் படிநிலையில் மிகவும் கீழாக உள்ள மக்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது தான் உண்மையான சமூக நீதியாக இருக்கும்; அதை அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

ஈரோட்டில் வன்னியர் - அருந்ததியர் ஒற்றுமை மாநாட்டு நடத்தப்பட்டதிலிருந்து 11 ஆண்டுகள் கழித்து 1999-ஆம் ஆண்டு திசம்பர் 11-ஆம் தேதி ஈரோடு வ.உ.சி பூங்காவில் நடைபெற்ற  அருந்ததியர் சமூகநீதி மாநாட்டில் சிறப்பு அழைப்பளராக கலந்து கொண்டு பேசினேன். அப்போது,  அருந்ததியருக்கு  தனி இடஒதுக்கீடு கிடைக்கும் வரை பாட்டாளி மக்கள் கட்சி போராடும் என்று வாக்குறுதியளித்தேன். அதன் தொடர்ச்சியாக அருந்ததியர் சங்கத் தலைவர் இராமன் பெயரில், அருந்ததியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர பா.ம.க. ஏற்பாடு செய்தது. அதற்குத் தேவையான பல்வேறு ஆவணங்களை கர்நாடகம், ஆந்திரம், கேரளம்  ஆகிய மாநிலங்களில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி  திரட்டிக் கொடுத்தது. வழக்கு நடத்துவதற்குத் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் இராமனுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்தது.

ஜெயலலிதா வாக்குறுதி

அருந்ததியர் சமுதாய மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு தளங்களில் அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுத்தது. குறிப்பாக தமிழக சட்டப்பேரவையில் அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்காக பலமுறை ஒலித்த குரல் பாட்டாளி மக்கள் கட்சியின் குரல் தான்.  1996 முதல் 2009-ஆம் ஆண்டு வரை குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட முறை சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சி குரல் கொடுத்திருக்கிறது. 2001-ஆம் ஆண்டு  தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அந்தியூர் தொகுதியில் கிருஷ்ணன் என்ற குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த ஏழை தொழிலாளியை வேட்பாளராக நிறுத்தி சட்டப்பேரவைக்கு அனுப்பினோம். அவர் மூலமாகவும் இந்தக் கோரிக்கையை சட்டப்பேரவையில் எழுப்பினோம். பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி ஏராளமான முறை அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்காக பேரவையில் குரல் எழுப்பியுள்ளார். அருந்ததியர்களில் குறிப்பிட்ட வகுப்பினர் கன்னட மொழி பேசக் கூடியவர்கள். தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும்  கன்னட மொழியில் பேசக் கூடியவர். அருந்ததியர்களின் கோரிக்கையை அவர்களில் ஒரு பிரிவினரின் தாய்மொழியில் அரசிடம் தெரிவிக்கலாம் என்ற எண்ணத்தில் 2003-ஆம் ஆண்டு  மே 5-ஆம் தேதி சட்டப்பேரவையில்  இந்த கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி  கன்னட மொழியில் பேசினார். அதைக் கேட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். அதன்பின் 3 ஆண்டுகள் பதவியிலிருந்தும் அந்தக் கோரிக்கையை ஜெயலலிதா அரசு நிறைவேற்றவில்லை.

பா.ம.க.வின் பங்களிப்பு

2006&ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை பா.ம.க. தீவிரமாக வலியுறுத்தியது. 06.05.2007&இல் ஈரோட்டில் அருந்ததியர் & சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாட்டை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது. அந்தக் கூட்டத்தில் அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்த பா.ம.க. முடிவு செய்தது. அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்காக போராடி வந்த ஆதித்தமிழர் பேரவை சார்பில் 2007, 2008 ஆம் ஆண்டுகளில் பல்வேறு மாவட்டங்களில்  22 இட ஒதுக்கீட்டு மாநாடுகள் நடத்தப்பட்டன. அவற்றில் பெரும்பாலான மாநாடுகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் பாலசுந்தரி, பவானி சட்டமன்ற உறுப்பினர் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரான பாலசுந்தரி அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அருந்ததியர்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று 2008-ஆம்  ஆண்டில் முதலமைச்சர் கலைஞரிடம் வலியுறுத்தினோம். அதையேற்று 2008-ஆம் ஆண்டு மார்ச் 12 அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியது.  மொத்தம் 27 கட்சிகள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில், அருந்ததியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கினால் பட்டியலினத்தவரிடையே பிரிவினை ஏற்படும் என்று கூறி தனி இடஒதுக்கீடு வழங்க சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும், அருந்ததியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதில்  பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருந்தது. அதையேற்ற கலைஞர், அருந்ததியர்களுக்கு 2001&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2.35% உள் ஒதுக்கீடு வழங்க அரசுத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அருந்ததியர்களுக்கு குறைந்தது 6% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தினார். பல அருந்ததியர் சமுதாய அமைப்புகளும் இதே கருத்தைத் தெரிவித்தன. அதைத்தொடர்ந்து அருந்ததியர் உள் ஒதுக்கீடு குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில்   ஒரு நபர் குழு அமைத்து மார்ச் 25-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டார்.

அடுத்த 3 மாத இடைவெளியில் 2008-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி நீதிபதி ஜனார்த்தனம் குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்,  அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அருந்ததியர் அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது. சென்னை பணிக்கர் விடுதியில் 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் 13 அருந்ததியர் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பா.ம.க. தலைவர் ஜி.கே,மணி தான் அந்தக் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே முதலமைச்சர் கலைஞர், ஜி.கே. மணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கலைஞர் தரப்பில் சில யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், அருந்ததியர்களுக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த நாள் அருந்ததியர் சங்கத் தலைவர்களுடன் தம்மை வந்து சந்திக்கும்படி ஜி.கே. மணியை கலைஞர் கேட்டுக் கொண்டார்.

கலைஞருடன் பேச்சு

ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பின்னர் அருந்ததியர் சங்கத் தலைவர்கள் அனைவரும்  சென்னை தியாகராயர் நகரில் உள்ள பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை அலுவலகத்தில் என்னை சந்தித்து அருந்ததியர் சமூக தனி இட ஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருவதற்காக  நன்றி தெரிவித்தனர். அவர்களிடம், நாளை கண்டிப்பாக உங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று நம்பிக்கை அளித்து அனுப்பி வைத்தேன்.

அதன்படியே நவம்பர் 27&ஆம் தேதி 13 அருந்ததியர் சங்கத் தலைவர்களுடன் கலைஞரை ஜி.கே.மணி சந்தித்தார். அந்தக் கூட்டத்தில் அருந்ததியர்களுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்குவதாக  கலைஞர் கூறினார். அதை ஏற்க மறுத்த ஜி.கே.மணி அருந்ததியர்களுக்கு 6% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு விளக்கமளித்த கலைஞர்,‘‘ அருந்ததியர்களுக்கு  2.88% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தான் ஜனார்த்தனம் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதனால் எங்கள் அரசு 3% வழங்க தீர்மானித்துள்ளது. முதலில் இதை ஏற்றுக் கொள்ளுங்கள். பின்னர் அதை உயர்த்தித் தருவதற்கான வாய்ப்புகளை ஆராயலாம்’’ என்று கூறினார். அதை அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 13 சங்கங்களின் தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து 2009&ஆம் ஆண்டு பிப்ரவரி 26&ஆம் தேதி அருந்ததியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆளுனரின் ஒப்புதல் பெறப்பட்டு, ஏப்ரல் 29&ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது, இவ்வாறாக அருந்ததியர்களின் இட ஒதுக்கீட்டுக் கனவு பா.ம.க. ஆதரவுடன் வெற்றிகரமாக நனவானது.

இஸ்லாமியர் இட ஒதுக்கீடு

அதேபோல், தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள், கிறித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையும்   பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்தது. அவர்களுக்கான கோரிக்கைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி தான் முன்வைத்துப் போராடியது. இதற்காக தமிழக சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சி தான் பலமுறை குரல் கொடுத்தது. இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர் அமைப்புகள் இது தொடர்பாக நடத்திய அனைத்துப் போராட்டங்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளித்தது.

2006-ஆம் ஆண்டில் திமுகவும், பாட்டாளி மக்கள் கட்சியும் திமுகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இரு கட்சிகளுமே தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தன. தேர்தலில் திமுகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவுடன் தான் கலைஞர் தமிழகத்தின் முதலமைச்சராக ஐந்தாவது முறையாக 2006-ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார்.

திருச்சியில் எச்சரிக்கை

ஆனால், பதவியேற்று பல மாதங்களாகியும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை கலைஞர் அரசு மேற்கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மண்டல வாழ்வுரிமை மாநாடுகள் நடத்தப் படும் என்று நான் அறிவித்தேன். அதன்படி தமிழ்நாட்டில் நெல்லை, ஈரோடு உள்ளிட்ட 6 இடங்களில் மண்டல வாழ்வுரிமை மாநாடுகள் நடத்தப்பட்டன. ஏழாவது வாழ்வுரிமை மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி மண்டல வாழ்வுரிமை மாநாட்டில் பேசிய நான்,‘‘சிறுபான்மை, பெரும்பான்மை என கூறுகின்றனர். ஆனால் நாம் அனைவரும் ஒரே பான்மையினர்தான். இந்த நாட்டின் பூர்வீக மக்களான நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள். என்னை போராளி என அழைத்தால் உத்வேகம், உணர்வு ஏற்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போராடுவதில் முன்னணியில் நிற்பேன். மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார இடஒதுக்கீடு வேண்டும். 100 சதவீதம் வகுப்பு வாரியான பிரதிநிதித்துவம் வேண்டும். இஸ்லாமிய, -கிறிஸ்துவ மதத்தில் மது, லாட்டரி, ஆபாசம், சூதாட்டம் கூடாது என கூறுவதை போல் நாங்களும் அவை வேண்டாம் என கூறுகிறோம்.

இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் சமூக, கல்வி நிலையில் மிகவும் பின்தங்கியுள்ளனர். அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இது தொடர்பாக கலைஞர் வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை முதலமைச்சர் கலைஞர் நிறைவேற்ற வேண்டும். சிறுபான்மை சமுதாயங்களுக்கு உடனடியாக இட ஒதுக்கீடு அளிக்கவில்லை என்றால், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மிகத் தீவிரமான போராட்டம் நடத்தப்படும்’’ என எச்சரித்தேன்.

நிறைவேறிய கனவு

அதற்கு அடுத்த நாளே பா.ம.க. தலைவர் ஜி.கே மணியை தொடர்பு கொண்ட முதலமைச்சர் கலைஞர்,‘‘ போராட்டங்கள் எதுவும் தேவையில்லை. சிறுபான்மையினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்று வாக்குறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து சிறுபான்மை சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்தியது. 

இது தொடர்பான மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் பரிந்துரை அறிக்கை பெற்ற தமிழக அரசு, தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 30% இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் ஆகியோருக்கு தலா 3.5% உள் ஒதுக்கீடு அளித்து அரசாணை பிறப்பித்தது. அந்த இட ஒதுக்கீடு 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் நடைமுறைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து அவசர சட்டத்திற்கு மாற்றாக நிரந்தர சட்டம் அதே ஆண்டு அக்டோபர் 22&ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.  ஆனால், தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு தேவையில்லை என்றும், தாங்கள் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலேயே நீடிப்பதாகவும் கிறித்தவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டு, கிறித்தவர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்றது. இஸ்லாமியர்கள் மட்டும் 3.50% விழுக்காடு இட ஒதுக்கீட்டை அனுபவித்து வருகின்றனர்.

நாளை....
69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages