முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 48
(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)
47. 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து!
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தான் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது; அதுமட்டுமின்றி, தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருப்பதால், இட ஒதுக்கீட்டுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நாம் பெருமிதப்பட்ட காலம் ஒன்று உண்டு. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. இந்த மாற்றத்திற்கு இரு காரணங்கள் உள்ளன. முதலாவது 9-ஆவது அட்டவணை குறித்து உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு. இரண்டாவது நமது ஆட்சியாளர்களின் அலட்சியம் ஆகும்.
அரசியல் சட்ட பாதுகாப்பு
மண்டல் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்று ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக, ‘‘தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலின வகுப்பினர், பழங்குடி வகுப்பினர் (மாநில அரசின் கீழ் உள்ள கல்வி நிறுவன மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகள்) இட ஒதுக்கீட்டுச் சட்டம் -1993’’ என்ற சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் அந்த சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் தலையீட்டிலிருந்து காப்பாற்றுவதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. அவ்வாறு சேர்க்கப்பட்டால் அந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறி எவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது; ஒன்பதாவது அட்டவணையில் உள்ள சட்டம் குறித்த வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்க முடியாது என்பது தான் அதன் சிறப்பாகும். அதனால் தான் 69% இட ஒதுக்கீடு பாதுகாப்பாக இருப்பதாக நம்பினோம்.
ஆனால், 1994-ஆம் ஆண்டில் ‘வாய்ஸ் (VOICE)’ என்ற அமைப்பின் சார்பில் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது என்றும், அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.எம்.விஜயன் வழக்குத் தொடர்ந்தார். அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்கும் கூடுதலாக இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை மதிக்காமல் 69% இட ஒதுக்கீட்டை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதால், தாங்கள் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் 19% கூடுதல் இடங்களை உருவாக்கி, அந்த இடங்களை 69% இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட உயர்சாதி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரி உயர்சாதி மாணவர்கள் பலர் 1994&ஆம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் உயர்சாதியினர் கூடுதல் இடங்களைக் கோரி உச்சநீதிமன்றத்திற்கு செல்வதும், அவர்களின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்பதும் வாடிக்கையான ஒன்றாக மாறிப்போனது.
ஐ.ஆர்.கோயலா வழக்கு
மற்றொருபக்கம், ஒன்பதாவது அட்டவணையில் சட்டங்கள் சேர்க்கப்படுவதை எதிர்த்து ஏற்கனவே ஐ.ஆர். கொய்லோ என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் ஜன்மம் எஸ்டேட் நிலங்கள் தொடர்பாக தமிழக அரசு 1969-ஆம் ஆண்டு நிறைவேற்றிய சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால், அந்த சட்டத்தை பாதுகாப்பதற்காக, அதை ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கும்படி மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அதை ஏற்று மத்திய அரசும் அந்த சட்டத்தை ஒன்பதாவது அட்டவணையில் மத்திய அரசு சேர்த்தது. அதை எதிர்த்து ஐ.ஆர்.கொய்லோ என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அது தான் ஒன்பதாவது அட்டவணையில் சட்டங்கள் சேர்க்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட முதல் வழக்கு ஆகும். அவரைப் போலவே ஒன்பதாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 284 சட்டங்களில் பெரும்பான்மையான சட்டங்களை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அவ்வழக்குகள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் 69% இட ஒதுக்கீட்டுச் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டதையும் தவறு என்று அறிவிக்கக் கோரி வாய்ஸ் அமைப்பு இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டது. அந்த அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஆஜராகி வாதாடினார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்குகள் 2006-ஆம் ஆண்டின் இறுதியில் மொத்தம் 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வால் விசாரிக்கப்பட்டன.
சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் அசோக்பான், அரிஜித் பசாயத், பி.பி.சிங், எஸ்.எச்.கபாடியா, சி.கே.தாக்கர், பி.கே.பாலசுப்பிரமணியன், அல்தாமஸ் கபீர், டி.கே.ஜெயின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஒன்பதாவது அட்டவணையில் பல்வேறு சட்டங்கள் சேர்க்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் 2006&ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது வாய்ஸ் அமைப்பின் சார்பில் நேர்நின்று வாதிட்ட வழக்கறிஞர் விஜயன்,‘‘ இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சட்டங்களைச் சேர்க்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால், எல்லா சட்டங்களையும் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து விட முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 31(ஏ) பிரிவின்படி வரையறுக்கப் பட்ட சட்டங்களை இயற்ற முடியும். 31(பி) பிரிவின்படி வரையறுக்கப்படாத சட்டங்களை இயற்றலாம்.
31(ஏ) பிரிவின்படி இயற்றப்பட்ட சட்டங்களை மட்டும் தான் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க முடியும். ஆனால், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு சட்டம் 31(பி) பிரிவின்படி இயற்றப்பட்டுள்ளது. அதனால், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க முடியாது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், அதை செயல்படுத்த முடியாத வகையில் ஒரு சட்டத்தை இயற்ற மாநில சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை. எனவே, தமிழக அரசின் சட்டம் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது செல்லாது என்று அறிவித்து, அந்த சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். இந்த வழக்கில் இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர்களில் பெரும்பான்மையினர் பல்வேறு தரப்புகளுக்காக நேர்நின்று வாதங்களை முன்வைத்தனர்.
69% இடஒதுக்கீட்டு பாதுகாப்புக்கு விழுந்த முதல் அடி
பல வாரங்கள் விசாரணைக்குப் பிறகு 2007-ஆம் ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அனைத்து நீதிபதிகளின் சார்பிலும் தலைமை நீதிபதி சபர்வால் தீர்ப்பை எழுதினார். அடிப்படை உரிமைகளை மறுக்கும் வகையிலான சட்டங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டால், அந்த சட்டத்தை மறு ஆய்வு செய்யும் உரிமை உச்சநீதிமன்றத்திற்கு உண்டு என்றும், அந்த உரிமையை உச்சநீதிமன்றத்திடமிருந்து பறிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை குறித்த தத்துவம் கேசவானந்த பாரதி வழக்கில் 13 நீதிபதிகள் கொண்ட அமர்வால் 1973-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பில் வரையறுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த நீதிபதிகள்,‘‘ இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 15, 16 ஆகிய பிரிவுகள் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப்பின் ஓர் அங்கம். அந்த பிரிவுகளின்படி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் ஏதேனும் சட்டம் இயற்றப்பட்டு, அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டால், அதன் செல்லுபடியாகும் தன்மையை மறுஆய்வு செய்யும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு உண்டு’’ என்று தங்களின் தீர்ப்பில் கூறியிருந்தனர்.
ஒன்பதாவது அட்டவணையில், 1973-ஆவது ஆண்டு கேசவானந்தபாரதி வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு சேர்க்கப்பட்ட சட்டங்களில் எவையெல்லாம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருக்கிறதோ, அந்த சட்டங்களை எதிர்த்து எவரும் வழக்கு தொடர முடியாது. மற்ற சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஒன்பதாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள பல்வேறு சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தான் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டின் பாதுகாப்புக்கு விழுந்த முதல் அடியாகும். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் விளைவாக, தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுச் சட்டம் ஒன்பதாவது அட்டவணையில் இருந்தாலும் கூட, அதனடிப்படையில் வழங்கப்பட்ட 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வாய்ஸ் அமைப்பு தொடர்ந்த வழக்கில் விசாரணை வேகம் பெற்றது. பின்னாளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்ட நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையில் நீதிபதிகள் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், சுதந்திர குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
69% இட ஒதுக்கீடு செல்லும்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று என்று உயர்சாதியினர் சார்பில் வாதிடப்பட்டது. அந்த வாதத்தை தமிழக அரசு மறுத்தது. ‘‘தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீடு எந்த வகையிலும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது அல்ல. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் மொத்த மக்கள்தொகை 88% ஆகும். அதனால், உச்சநீதிமன்றம் விதித்த 50% உச்சவரம்பு தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது’’ என்று தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், அதற்கான ஆதாரங்களை அரசு தாக்கல் செய்யவில்லை.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம்,‘‘ தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு செல்லும்’’ என்று 2010-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதேநேரத்தில் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு பெறும் வகுப்பினரின் மக்கள்தொகை 69 விழுக்காட்டுக்கும் அதிகம் என்பதை உறுதி செய்யக் கூடிய ஆதாரங்களுடன், அதாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, நிரூபித்து இட ஒதுக்கீட்டை தமிழக் அரசு உறுதி செய்து கொள்ளலாம். இதை தீர்ப்பு வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்திருந்தனர்.
கடமை தவறிய அரசுகள்
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படுமோ? என்று அஞ்சிக் கொண்டிருந்த அனைவருக்கும் இது நிம்மதியை அளித்தது. இந்தத் தீர்ப்பை வரவேற்ற நான், உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும்படி தமிழக அரசைக் கேட்டுக் கொண்டேன். அதன்பின் 2010-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்து சமுதாயத் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றினோம். கூட்டம் முடிந்தவுடன் நேராக கோட்டைக்குச் சென்று, முதலமைச்சர் கலைஞரை சந்தித்து, தீர்மானங்களை வழங்கி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். எங்களின் கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றுவதாக உறுதியளித்த கலைஞர், அவரது ஆட்சிக்காலம் முடிவடையும் வரை அதற்கான முயற்சிகளைக் கூட செய்யவில்லை; அதில் அவருக்கு ஆர்வமும் இல்லை.
2011-ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு பொறுப்பேற்றது. புதிய முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு இது தொடர்பாக நீண்ட கடிதம் எழுதிய நான், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி வலியுறுத்தினேன். ஆனால், அவரும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவில்லை. மாறாக, அப்போது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்த நீதிபதி ஜனார்த்தனத்தின் தவறான ஆலோசனையின் பேரில், பழைய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் மக்கள்தொகை 88% இருப்பதாக அறிவித்து, 69% இடஓதுக்கீட்டை உறுதி செய்து புதிய அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.
புதிய ஆபத்து
ஆனால், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றமும் அறிவித்து உள்ளது. அந்த வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் மக்கள் தொகை 88% இருப்பதை உறுதி செய்யும் வகையில் புள்ளி விவரங்களை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் கோரும். அப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையிலான புள்ளி விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், தமிழக அரசு இப்போது வரை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாத நிலையில், தமிழக அரசு பழைய புள்ளிவிவரங்களை தாக்கல் செய்தால் அதை உச்சநீதிமன்றம் ஏற்காது. அது 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்தாக முடியலாம்.
நாளை....
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் தேவை!
No comments:
Post a Comment