முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 49
(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)
48. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் தேவை!
ஒரு கட்டிடத்தில் எத்தனை மாடி கட்டினாலும் அது வலிமையாக அமைவதற்கு அதன் அடித்தளம் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு ஒரு நாட்டில் சமூகநீதி தழைத்தோங்குவதற்கு தேவைப்படும் மிகவும் வலுவான அடித்தளம் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் இட ஒதுக்கீடு வழங்க முடியாது. இட ஒதுக்கீடு வழங்காமல் நலிவடைந்து கிடக்கும் ஒரு சமுதாயத்தை முன்னேற்ற முடியாது. ஒரு சமுதாயம் முன்னேறாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. அந்த வகையில் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், மக்களின் நலவாழ்வுக்கும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது தவிர்க்க முடியாததாகும்.
ஆங்கிலேயர் ஆட்சியில்....
இந்த உண்மைகளையெல்லாம் அறிந்திருந்ததால் தான், சாதிகள் இல்லாத நாட்டிலிருந்து வந்த இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் கூட இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினார்கள். இந்தியாவில் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு 1872&ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அது தான் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடத்தப் பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பும் கூட. ஆனாலும் நடைமுறை சிக்கல்களால் அந்த கணக்கெடுப்பு முழுமையாக அமையவில்லை. 1881&ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு தான் ஆங்கிலேயர் இந்தியாவின் முழுமையான மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும். அதில் தான் சாதி விவரங்கள் முழுமையாக சேகரிக்கப்பட்டன. 1931 ஆம் ஆண்டு வரை அனைத்து கணக்கெடுப்புகளும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாகவே நடத்தப்பட்டன.
1941-ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்ததால் மக்கள்தொகை கணக்கெடுப்பையே நேரடியாக வீடுகளுக்கு சென்று நடத்த முடியாத நிலை உருவானது. அதனால், 1941&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அரைகுறை கணக்கெடுப்பாகவே இருந்தது. அதில் சாதி விவரங்கள் சேகரிக்கப்படவில்லை. அது தான் இந்தியாவில் சாதி விவரங்கள் சேகரிக்கப் படாத முதலாவது மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும். அதன்பின்னர் இந்தியா விடுதலையடைந்தது. சுதந்திர இந்தியாவில் ஒருமுறை கூட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. கர்நாடகம் போன்ற சில மாநில அரசுகள் மட்டும் தனிப்பட்ட முறையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தின. ஆனாலும் அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால் தான் தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மக்களுக்கு துல்லியமான இட ஒதுக்கீட்டை வழங்க முடியவில்லை. இந்தியாவில் இப்போது அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டுக்கு அடிப்படையாக இருப்பது 1931-ஆம் ஆண்டு ஆங்கிலேயேர் ஆட்சியில் கடைசியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பு தான்.
இடஒதுக்கீட்டுக்கு ஆதாரம்
இந்தியா விடுதலையடைந்த நாளில் இருந்தே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான கோரிக்கைகள் நாடு முழுவதும் எழுப்பப்பட்டு வருகின்றன. பல நேரங்களில் நீதிமன்றங்களும், மத்திய, மாநில அரசுகளும் கூட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த பரிந்துரைத்துள்ளன. ஆனால், பல்வேறு காரணங்களால் அவை சாத்தியமாகவில்லை. ஆனாலும், கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப் பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சி தான் இதில் முதலிடத்தில் உள்ளது.
எனக்கு நினைவுக்கு தெரிந்த வகையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஆணை ஆந்திராவில் தான் பிறப்பிக்கப்பட்டது. ஆந்திராவில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க 1968-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட கே.என். அனந்தராமன் குழு அடுத்த இரு ஆண்டுகளில் பரிந்துரை அறிக்கையை வழங்கியது. தமது தலைமையிலான ஆணையத்தின் இட ஒதுக்கீட்டுப் பரிந்துரைகள் பத்தாண்டுகளுக்கு மட்டும் தான் பொருந்தும் என்றும், அதன்பின்னர் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டுமானால், அதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அனந்தராமன் ஆணையம் கூறியிருந்தது. அனந்தராமன் ஆணைய பரிந்துரைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை எதிர்த்து 1971-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற ஆணையத்தின் பரிந்துரை சிறப்பானது என்று கூறி ஏற்றுக் கொண்டது. அதுமட்டுமின்றி, ஆந்திரத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் அதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
வன்னியர் சங்க கோரிக்கை
வன்னியர்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் 1980-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதற்கான நிகழ்வில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தான். ஆனால், அதன்பின் 40 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்று வரை அந்தக் கோரிக்கை மட்டும் நிறைவேறவில்லை.
அத்வானியின் விருப்பம்
1998-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகித்தது. 1999-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட புதிய அரசிலும் பா.ம.க. நீடித்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி அவர்களை சந்தித்து, 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள். அப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக அதிக கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் தனிப்பட்ட முறையில் ஆர்வம் காட்டினார். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று வாக்குறுதியும் அளித்தார்.
ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசு உயரதிகாரிகளுக்கு ஆர்வம் இல்லை. அதனால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முட்டுக்கட்டைகளை போட்டனர். அந்த நேரத்தில், அதாவது 2001-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி குஜராத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு நிலைமையை சமாளிக்கும் பணியில் அத்வானி ஈடுபட்டு இருந்த நிலையில், அதைப் பயன்படுத்திக் கொண்ட அதிகாரிகள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் திட்டத்தை கைவிட்டனர். அன்றைய சூழலில் அதை அத்வானியாலும் தடுக்க முடியவில்லை.
ஏமாற்றிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பையாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்திவிட வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி தீவிரமாக இருந்தது. 2007-08 ஆம் ஆண்டிலிருந்தே இதற்கான பணிகளை அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மேற்கொண்டார். இதற்காக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 140 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டிய அவர், 2008-ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை நேரில் சந்தித்து 140 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்திடப்பட்ட மனுவை அளித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை பரிசீலிப்பதாக சிவராஜ் பாட்டீல் அவர்களும் அப்போது ஒப்புக்கொண்டார்.
அதன்பின்னர் மக்களவையில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பப்பட்ட போது லாலு பிரசாத், சரத்யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவளித்தனர். அதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த அரசு ஒப்புக்கொண்டது. மக்களவையில் இதுகுறித்த வாக்குறுதியை 2009-10 ஆம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி அளித்தார்.
அதைத் தொடர்ந்து 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தனியாகவும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தனியாகவும் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவ்வாறு செய்யாமல் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு என்ற பெயரில் எதற்கும் உதவாத சடங்கு ஒன்றை அப்போதைய மத்திய அரசு நடத்தி மக்களை ஏமாற்றியது. அப்போது நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் விவரங்களும் வெளியிடப்படவில்லை. அதனால், கணக்கெடுப்பு நடத்தப்பட்டதன் நோக்கமே சிதைந்தது. 2011-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதை தடுத்து நிறுத்தியவர் அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் தான்.
ஏமாற்றிய கலைஞர்
முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டவாறு தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 2010-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி அளித்தத் தீர்ப்பில், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தது. அதேநேரத்தில் அடுத்த ஓராண்டுக்குள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை மறு உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞரை அறிக்கை மூலம் வலியுறுத்தினேன். அதுமட்டுமின்றி, 28.10.2010-இல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக அனைத்து சமுதாயக் கூட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது. அந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்ப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் முடிவடைந்தவுடன் அதில் பங்கேற்ற 27 அமைப்புகளின் தலைவர்களுடன் கோட்டைக்குச் சென்று கலைஞரை சந்தித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதுடம், அது தொடர்பான தீர்மானத்தையும் கலைஞரிடம் வழங்கினோம். அதை ஏற்றுக்கொண்ட கலைஞர் கண்டிப்பாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று உறுதியளித்தார். ஆனால், ஆட்சிக்காலம் முடியும் வரை அதை செய்யவில்லை. காரணம்.... சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினால், மக்கள் தொகைக்கு ஏற்ப வன்னியர்களுக்கும், பிற சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியிருக்கும்; ஆனால், அதில் கலைஞருக்கு சிறிதும் உடன்பாடு இல்லை என்பது தான்.
உயர்நீதிமன்றத் தீர்ப்பு
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி தொடரப்பட்ட பொதுநலவழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எலிப்பி தருமாராவ், சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையருக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு மே மாதம் ஆணையிட்டது. ஆனால், இந்த தீர்ப்பை பின்னாளில் உச்சநீதிமன்றம் ரத்து செய்து விட்டதால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
ஜெயலலிதாவுக்கு கடிதம்
2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து, அதிமுக அரசு அமைந்தது. புதிய முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு இது தொடர்பாக நீண்ட கடிதம் எழுதிய நான், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி வலியுறுத்தினேன். ஆனால், அவரும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவில்லை. அதற்கு அப்போதைய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்த நீதிபதி ஜனார்த்தனம் தமிழக முதலமைச்சருக்கு அளித்த தவறான ஆலோசனை தான் காரணம் ஆகும்.
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு கோரிக்கை
தமிழ்நாட்டில் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக & பாட்டாளி மக்கள் கட்சி இடையே கூட்டணி ஏற்பட்டது. அதிமுகவுடன் கூட்டணி சேர பா.ம.க. 10 நிபந்தனைகனை முன்வைத்தது. அவற்றில் முதன்மையானது தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான். இதை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டது.
அதுகுறித்து நினைவூட்டும் நோக்குடன் 2019& ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த கோரினர்.
அதைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நானும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்டோரும் சந்தித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து வலியுறுத்தினோம்.
ஆனால், சமூக நீதியை மேம்படுத்துவதற்கு அடிப்படைத் தேவையான சாதிவாரி மக்கள்தொகை கனக்கெடுப்பை நடத்துவது குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டில் அதிமுகவாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும் சமூகநீதியை உறுதி செய்வதற்கான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் ஆர்வமும், விருப்பமும் இல்லை என்பதே உண்மையாகும்.
நாளை....
சமூகநீதி தான் சாதிஒழிப்புக்கான கருவி!
No comments:
Post a Comment