வாளை மீனுக்கும் நீர்நாய்க்கும் சண்டை: அகநானூறு விளக்கும் குடும்பப் பாசம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
அகநானூறு...
சங்க இலக்கியங்களில் அற்புதமான நூல். தலைவனுக்கும், தலைவிக்கு உள்ள அன்பையும், உறவையும் சுவையுடன் விளக்கும் இலக்கிய இன்பம் அது.
இரு நாட்களுக்கு முன் பெண்புலியின் பசியைப் போக்க யானையை வேட்டையாடிய ஆண்புலியின் வீரத்தை விளக்கும் அகநானூறு பாடலைப் பற்றி உங்களுக்கு விளக்கியிருந்தேன். இன்று பெண்நீர்நாயின் பசியைப் போக்க வாளை மீனுடன் சண்டையிட்ட ஆண்நீர்நாய் குறித்த அகநானூற்றுப் பாடலை விளக்குகிறேன்.
அந்த அகநானூற்றுப் பாடலின் எண் 336 ஆகும். புலவர் பாவைக்கொட்டிலார் இந்த பாடலை எழுதியுள்ளார்.
தலைவனுக்காக மட்டுமே வாழும் நயப்புப்பரத்தை தலைவனைக் காண வருகிறாள். ஆனால், ஊர்ப்பரத்தைகளோ நயப்புபரத்தையை தலைவனை சந்திக்க விடாமல் தடுக்கிறார்கள். அப்போது ஊர்ப்பரத்தைகளின் தோழிகளின் காதில் படும்படி நயப்புப்பரத்தை பேசுவதைப் போல இந்த பாடல் எழுதப்பட்டிருக்கிறது.
அந்தப்பாடலின் முதன்மை வரிகள் இதோ....
‘‘குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப்
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய,
நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய்
வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின்
தெண் கட் தேறல் மாந்தி, மகளிர்
நுண் செயல் அம் குடம் இரீஇ,’’
அதாவது, ‘‘குழல் போல் உள்ளே துளை உள்ள காம்பையும், அகன்ற மடல் போன்ற இலைகளையும் கொண்ட சேம்புச் செடிக்கு அடியில் பாசி படிந்த நீரில் உணவு இல்லாமல் பசியோடு இருக்கும் தன் பெண்நாய்க்கு அன்றாட உணவைத் தர விரும்பி, ஆண்நீர்நாய் வாளைமீனோடு போரிடுகையில் நீர்த்துறையே கலங்கிக் கிடக்கும். அந்தத் துறையின் கரையில் உள்ள காஞ்சிமர நிழலில் குடிநீர் மொண்டுகொண்டு வந்த மகளிர் நீர்க்குடத்தை இறக்கி வைத்துவிட்டு, பாடிக்கொண்டு குரவை ஆடுவர்.’’ என்று பாடலாசிரியர் புலவர் பாவைக்கொட்டிலார் வர்ணிக்கிறார்.
மனிதர்கள் மட்டும் தான் தங்களின் வாழ்க்கைத்துணை நலனில் அக்கறை கொண்டவர்கள் என்று கூறிவிட முடியாது. விலங்குகளுக்கும் வாழ்க்கைத் துணை மீது அளவில்லா அன்பும், அக்கறையும் கொண்டிருக்கின்றன என்பதற்கு சிறந்த உதாரணம் தான் அகநானூற்றுப் பாடலில் வரும் ஆண்புலி மற்றும் ஆண்நீர்நாயின் வீரதீர நிகழ்வுகள் ஆகும்.
No comments:
Post a Comment