இந்த உலகின் இனிய இன்பம் மழலை!- மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

இந்த உலகின் இனிய இன்பம் மழலை!- மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

இந்த உலகின் இனிய இன்பம் மழலை!- மருத்துவர் இராமதாசு அய்யா

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறுநூறு தான் இன்று இலக்கிய இன்பம் படைத்த நூல் ஆகும். மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை ஆகிய 5 திணைகளை அடிப்படையாக வைத்து தான் ஐங்குறுநூறு படைக்கப்பட்டிருக்கிறது.  ஒவ்வொரு திணையிலும் தலா 100 பாடல்கள் வீதம் மொத்தம் 500 பாடல்களைக் கொண்டது தான் ஐங்குறுநூறு நூல் ஆகும்.

ஒவ்வொரு தினைக்குமான 100 பாடல்களை ஒரு புலவர் எழுதியுள்ளார். மருதத் திணைப் பாடல்களை ஓரம்போகியார், நெய்தல் திணைப் பாடல்களை அம்மூவனார், குறிஞ்சித் திணைப் பாடல்களை கபிலர், பாலைத் திணைப் பாடல்களை ஓதலாந்தையார், முல்லைத் திணைப் பாடல்களை  பேயனார் எழுதியுள்ளனர்.

ஐந்திணைகளில் கடைசித் திணையான முல்லைத் திணையின் முதலாவது பத்து தான் என்னைக் கவந்த பாடல்கள் அடங்கிய பிரிவு ஆகும். இது ஐங்குறுநூறு நூலில் 41 ஆவது பத்து ஆகும். அதாவது 401 முதல் 410 வரையிலான 10 பாடல்கள் இந்தப் பிரிவில் அடங்கியுள்ளன. இந்த பத்து பாடல்களும் செவிலிக் கூற்றுப் பத்து என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளன. அதாவது தலைவிக்கு  செவிலி கூறுவதைப் போல இந்தப் பிரிவிலுள்ள 10 பாடல்களும் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் 9-ஆவது பாடல், அதாவது ஐங்குறுநூறு நூலின் 409 ஆவது பாடல் மழலை தான் உலகின் இனிய  இன்பம் என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

அந்தப் பாடல்....
‘‘புதல்வன் கவைஇயினன் தந்தை மென் மொழி
புதல்வன் தாயோ இருவரும் கவைஇயினள்
இனிது மன்ற அவர் கிடக்கை
நனி இரும் பரப்பின் இ உலகுடன் உறுமே’’

அதாவது, பிறந்து படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த குழந்தையையை தந்தை மகிழ்ச்சியுடன் தழுவினானாம். அதைப்பார்த்த மென்மையான மொழிகளைப் பேசும் தாய், தனது குழந்தையையும் கணவனையும் சேர்த்துத் தழுவிக்கொண்டாளாம். அப்போது அவர்கள் அடைந்த இன்பம் என்பது, பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகத்திற்கு இணையானதாம்.

குழந்தை பெற்று தாய்மை அடைந்த தலைவி எப்படி இருக்கிறாள்? என்று அவளது தாய் கேட்ட போது தான், அவள் உலகத்திற்கு இணையான மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறாள் என்று  தலைவியின் தாயிடம் செவிலித்தாய் கூறியதாக இந்த பாடலை படைத்திருக்கிறார் புலவர் பேயனார்.

கிட்டத்தட்ட இதே பொருள் கொண்ட திருக்குறள் ஒன்றும் உள்ளது. அறத்துப் பாலில் மக்கட்பேறு என்ற அதிகாரத்தில் 65-ஆவது குறளாக இடம்பெற்றிருக்கும் அந்தக் குறள் இது தான்...

‘‘மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’’.

அதன் பொருள்:  ‘‘குழந்தையின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்பது செவிக்கு இன்பம் தருவதாகும்’’ என்பது தான் அந்த திருக்குறளின் பொருள் ஆகும்.

ஐங்குறுநூறு, திருக்குறள் ஆகியவற்றையும், அவற்றின் பொருளையும் படிக்கும் போது தலைவியும், தலைவனும் அடைந்த மகிழ்ச்சியில் ஒரு பகுதியையாவது உங்களாலும் அடைய முடிந்தது என்றால், அது தான் இந்த முகநூல் பதிவின் வெற்றி ஆகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages