இலங்கை தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை
196 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது.
அதிபர் கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
அம்பாந்தோட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நடத்தப்பட்ட தேர்தலில், 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
அசம்பாவிதங்கள் ஏதுமின்றி சுமூகமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்றைய தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 7 மணி முதல் எண்ணப்படுகின்றன.
பிற்பகல் 2 மணி முதல் முடிவுகள் தெரிய தொடங்கும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ள தேர்தல் ஆணையம், நாளை காலை 6 மணிக்குள் முடிவுகள் முழுமையாக வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலில், ராஜபக்ச சகோதரர்களின் பொதுஜன பெரமுன கட்சியும், ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் தேசிய கட்சியும், மைத்ரிபாலாவின் சுதந்திர கட்சியும் களத்தில் உள்ளன.
இதனிடையே, இலங்கையில் அடுத்த 7 நாட்களுக்கு ஊர்வலம் மற்றும் பேரணி நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment