"குடிசை இல்லா"தமிழ்நாடு உருவாக்க வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி
தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் பல ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக குடிசை வீடுகள் இருந்தன.அவை படிப்படியாக மாறியிருக்கின்றன. இது வரவேற்கத்தக்கது. ஆனால் தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் பரவலாக இன்னும் குடிசை வீடுகள் உள்ளன.
குடிசை வீடுகளில் வாழும் நிலை மாற்றப்பட வேண்டுமென மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்திகொண்டு வருகிறார்கள். இதை நானும் சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வாதாடினேன்.இந்த குடிசை வீடுகள் நேற்று,இன்று உருவானதல்ல. தாத்தா காலம், மகன் காலம்,பேரன் காலம் என மூன்று தலைமுறைகளுக்கு மேலாக குடிசை வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பொருளாதாரம், சமூக நிலை, குழந்தைகளின் கல்வி,வேலைவாய்ப்பு, வருவாய் உள்ளிட்ட மனித வள காரணிகளின் குறியீடுகள் எந்த அளவில் இருக்கும்.இதற்கு அவர்கள்தான் காரணமா? இந்த நிலை மாற வேண்டாமா? நம் நாடு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் அரசின் ஐந்தாண்டு திட்டங்கள்,அரசின் சட்டங்கள்,சட்ட திருத்தங்கள்,கொள்கை முடிவுகள்,நிதி ஒதுக்கீடுகள் போன்றவை இவர்களை முன்னேற்றவில்லையே.
இந்த குடும்பங்களின் நிலை இனிமேலாவது மாற வேண்டாமா? இந்த குடிசைகள் மாறாமல்,இவர்களின் வாழ்வு மேம்படாமல் தமிழ்நாடு எப்படி முன்னேறிய மாநிலமாகக் கருத முடியும்.எனவே இந்த சட்டமன்றத்தில் நான் வலியுறுத்துவது "குடிசை இல்லா" தமிழ்நாடு உருவாக்கப்பட வேண்டும். அதற்கான ஒரு சிறப்புத் திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் அரசின் சார்பில் அறிவிக்கவேண்டுமென பல முறை தொடர்ந்து வாதாடினேன்.அதை ஏற்றுக்கொண்டு அன்றைய முதலமைச்சர் அவர்கள் உடனே ஜி.கே.மணி அவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது.தமிழ்நாடு முழுவதும் குடிசை வீடுகளை மாற்றும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
அதன் பின்னர் அது தமிழ்நாடு அரசின் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் தனி நபர் பெயரில் கூடாது அரசின் திட்டமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு அரசின் திட்டமாக அறிவிக்கப்பட்டு இன்று வரை ஏழை மக்களுக்கு அரசு வீடுகள் கட்டிக் கொடுத்து வருகிறது. ஆனால் இன்னும் குடிசை வீடுகள் முழுமையாக மாற்றப்படவில்லை.ஆண்டுக்கு குறிப்பிட்ட அளவு குறைந்த எண்ணிக்கையிலே வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன.அன்று சட்டமன்றத்தில் வாதாடியது 5 ஆண்டுகளுக்குள் "குடிசை இல்லா"தமிழ்நாட்டை உருவாக்க வேண்டுமென்பதுதான்.
எனவே மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து 4, 5 ஆண்டுகள் இலக்கு நிர்ணயித்து "குடிசை இல்லா " தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.
No comments:
Post a Comment