விட்டுக்கொடுத்தலே உலகின் பெரும் இன்பம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
உலகில் அனைத்து இலக்கியங்களும், மதங்களும் வலியுறுத்துவது விட்டுக்கொடுக்கும் அறத்தை தான். உலகில் வேறு எதிலும் கிடைக்காத மகிழ்ச்சி விட்டுக் கொடுத்தலில் கிடைக்கும். இவ்வளவு சிறந்த அறம் குறித்து அகநானூற்றில் இல்லாமல் இருக்குமா?
அகநானூறும் விட்டுக்கொடுத்தல் குறித்து விரிவாக பேசுகிறது.
அகநானூற்றின் 321 பாடல் தான் அந்த சிறப்புக்குரியது. கி.மு. காலத்தில் அந்த பாடலை இயற்றியவர் கயமனார்.
அந்தப் பாடலைப் பார்ப்போம்....
‘‘பசித்த யானைப் பழங்கண் அன்ன
வறுஞ் சுனை முகந்த கோடைத் தெள் விளி
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப,
கதிர்க் கால் அம் பிணை உணீஇய, புகல் ஏறு
குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது,
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப்
படு மணி இன நிரை உணீஇய, கோவலர்
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல்,
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும்
புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர்,
துணையொடு துச்சில் இருக்கும்கொல்லோ?’’
அதாவது, பசியோடு இருக்கும் யானை எவ்வாறு வாடிக்கிடக்குமோ, அதேபோல் வாடிக் கிடக்கும் நீரில்லாத சுனையின் வழியாக கோடைக்காற்று வீசும்போது பறை முழங்குவது போல மலை வெடிப்புப் பள்ளத்தில் எதிரொலிக்குமாம். அந்தப் பகுதியில் வெண்ணிற இரும்பைப் பூக்கள் சிறிய எண்ணிக்கையில் பூத்திருக்குமாம். அதை குதிர் போன்று பருத்த கால்களை உடைய ஆண்மான் முதலில் பார்த்தாலும் தாம் உண்ணாமல், கதிர் போன்று மெல்லிய கால்களை உடைய பெண்மான் உண்ணவேண்டும் என்று எண்ணி மேயாமல் விட்டுக்கொடுக்குமாம்.
மான்கள் மட்டுமல்ல.... யானையும் அப்படித்தானாம். கழுத்தில் மணி கட்டிய பசுவினம் காளையைத் தேடிக் குரல் கொடுக்குமாம். அதைக் கேட்டவுடன், அவற்றை மேய்க்கும் கோவலர்கள், அந்தப் பகுதியில் நீர் ஊறும் இடம் எது என்பதை ஆராய்ந்து அங்கு பள்ளம் தோண்டுவார்களாம். அங்கு கிடைக்கும் நீரை பசுக்கள் குடித்த பின்னர் தண்ணீர் மீதம் இருக்குமாம். அவற்றைக் குடிக்க யானைகள் குடும்பத்துடன் வருமாம். யானைகள் குடும்பத்தில் ஆண் யானை முதலில் நீரை குடிக்காதாம். மாறாக, முதலில் யானைக்கன்று, அடுத்து பெண்யானை, கடைசியில் ஆண்யானை என்ற வரிசையில் யானைகள் தண்ணீரைக் குடிக்குமாம்.
விட்டுக்கொடுத்தலுக்கு அகநானூறு கூறும் உதாரணத்தை படிக்கும் போதே மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லவா? நாமும் நமது வாழ்வில் விட்டுக்கொடுத்தலை கடைபிடித்து மகிழ்ச்சியடைவோம்!
No comments:
Post a Comment