பிரிவின் துயர் அனைவருக்கும் சமமே! - மருத்துவர் இராமதாசு அய்யா
இந்தியாவில் வடக்கு மாநிலங்களில் உடன்கட்டை ஏறுதல் என்ற கொடிய வழக்கம் இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. அதாவது கணவன் இறந்து விட்டால், அவனது சிதையில் மனைவியும் ஏறி தன்னை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த கொடிய வழக்கம். அதேநேரத்தில் மனைவி இறந்து விட்டால் கணவன் மனைவியின் சிதையில் அப்படி ஏறி உயிர் துறக்க மாட்டான். மாறாக மனைவி இறந்த துயரம் விலகும் முன்பாகபே மறுமணம் புரிந்து கொள்வான்.
ஆனால், தமிழ்நாட்டில் உடன்கட்டை போன்ற கொடிய வழக்கம் இல்லை. அதுமட்டுமின்றி, கணவனை பிரிந்த மனைவி எப்படி துயர் அடைவாளோ, அதேபோல் மனைவி பிரிந்தால் கணவனும் துயரடைவது வழக்கம் ஆகும். இயல்பான வாழ்க்கையில் மட்டுமல்ல.... இலக்கியங்களிலும் இதே வழக்கம் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மனிதர்கள் மட்டுமல்ல.... மான்களுக்கு இடையிலும் அதே பாசம் தான் இருந்திருக்கிறது என்பதை விளக்குகிறது ஓர் அகநானூற்றுப் பாடல்.
கி.மு. காலத்தில் எயினந்தை மகன் இளங்கீரனார் எழுதிய அந்தப் பாடல் அகநானூற்று வரிசையில் 371 -ஆவது பாடலாக இடம் பெற்றுள்ளது.
அந்தப் பாடல்:
‘‘அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை,
செவ் வாய்ப் பகழி, செயிர் நோக்கு ஆடவர்
கணை இடக் கழிந்த தன் வீழ்துணை உள்ளி,
குறு நெடுந் துணைய மறி புடை ஆட,
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை
மேய் பதம் மறுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
நெய்தல்அம் படுவில் சில் நீர் உண்ணாது,
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்’’
அதாவது, அழகிய விளிம்பிலிருந்து விரைந்து பாயும் மூங்கிலால் செய்யப்பட்ட வில்லை வைத்துள்ள ஆண்கள், அதிலிருந்து கூரிய அம்பை எய்தார்களாம். குறி பார்த்து ஏவிய அந்த அம்பு பெண் மான் மீது பாய்ந்ததில் அது அங்கேயே விழுந்து உயிரிழந்ததாம். அதைப்பார்த்த ஆண் மான் சோகம் அடைந்ததாம். முறுக்கிய கொம்பு கொம்பு கொண்ட அந்த ஆண்மான் வாழப்பிடிக்காமல் வருத்தத்துடன் நெடுந்தொலைவு சென்றதாம். அந்த மானுடன் துள்ளி விளையாடும் தன் குட்டிகளுடம் சென்றனவாம்.
ஆண்மானும் குட்டிகளும் துன்பத்துடன் சென்றனவாம். ஆண்மான் வழியில் புற்கள் இருந்தும் மேயாமல் வருத்தத்துடன் சென்றதாம். மனதில் துன்பம் நிறைந்து இருந்ததால், களர்நிலப் பள்ளத்தில் (நெய்தல்) தேங்கியுள்ள நீரையும் குடிக்காமல், வேல் பாய்ந்த புண்ணுடன் கிடக்கும் வீரன் போலத் துன்பத்துடன் படுத்துக் கிடந்ததாம்.
வாழ்வாதாரம் தேடி செல்லும் தலைவன் இத்தகைய காட்சியைக் கண்டு கொண்டே செல்வது போலவும், அப்போது, தமது காதலியும் தம்மைப் பிரிந்து இப்படித் தானே அழுது கொண்டிருப்பாள் என்று மனதில் துயரப்பட்டுக் கொண்டே செல்வதைப் போலவும் எயினந்தை மகன் இளங்கீரனார் அந்த அகநானூற்றுப் பாடலை எழுதியிருக்கிறார்.
அன்பும், பிரிவும் அனைவருக்கும் ஒன்று தான் என்பதே இந்த பாடல் சொல்லும் பாடம் ஆகும்!
No comments:
Post a Comment