மகவு சூழ் உலகே மகிழ்வு! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

மகவு சூழ் உலகே மகிழ்வு! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

மகவு சூழ் உலகே மகிழ்வு! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா

ஐங்குறுநூறு நூலின் சிறப்பு குறித்து ஏற்கனவே நான் உங்களுக்கு கூறியிருக்கிறேன். ஐங்குறுநூறு நூலில் பட்டியலிடப்பட்டுள்ளவாறு  ஐந்திணைகளில் கடைசித் திணையான முல்லைத் திணையின் முதலாவது பத்து தான் என்னைக் கவந்த பாடல்கள் அடங்கிய பிரிவு ஆகும் என்பதையும் முன்பே நான் உங்களுக்கு கூறியிருக்கிறேன்.

இது ஐங்குறுநூறு நூலில் 41 ஆவது பத்து ஆகும். அதாவது 401 முதல் 410 வரையிலான 10 பாடல்கள் இந்தப் பிரிவில் அடங்கியுள்ளன. இந்த பத்து பாடல்களும் செவிலிக் கூற்றுப் பத்து என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளன. அதாவது தலைவிக்கு  செவிலி கூறுவதைப் போல இந்தப் பிரிவிலுள்ள 10 பாடல்களும் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் முதலாவது பாடல், அதாவது ஐங்குறுநூறு நூலின் 401 ஆவது பாடல் மகவைச் சூழ்ந்து இருப்பதே மகிழ்ச்சி என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

அந்தப் பாடல்....

‘‘மறி இடைப் படுத்த மான் பிணை போலப்
புதல்வன் நடுவணனாக நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி
நீல் நிற வியல் அகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே’’

அதாவது, மான் கன்று இடையில் படுத்திருக்கும் மான் இணையைப் போல மகன் நடுவில் போட்டு அவனுக்கு இரு புறமும் தலைவனும் தலைவியும் படுத்திருந்தார்களாம். அவர்கள் அவ்வாறு  படுத்திருந்த காட்சி இனிமையிலும் இனிமையாய் இருக்கிறது. நீல நிறம் சூழப்பட்ட அகன்ற இவ்வுலகிலும் மறு உலகிலும் கிடைத்தற்கரிய காட்சி இது தான் என்று புலவர் பேயனார் கூறியிருக்கிறார்.

தலைவியும் தலைவனும் வாழும் வீட்டிற்குச் செவிலித்தாய் சென்றபொழுது, அவர்கள் மகனுடன் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தாள். அதை தலைவியின்  தாயாரிடம்  தெரிவித்து செவிலித்தாய் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள இவ்வாறு சொல்வதாக இந்தப் பாடலை புலவர் பேயனார் எழுதியுள்ளார்.

படித்து மகிழுங்கள்!
                            

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages