தைலாபுரம் தோட்டத்தின் புதிய விருந்தாளிகள்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

தைலாபுரம் தோட்டத்தின் புதிய விருந்தாளிகள்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

தைலாபுரம் தோட்டத்தின் புதிய விருந்தாளிகள்! - மருத்துவர் இராமதாசு அய்யா

கொரோனாவுக்கு முன்பு வரை தைலாபுரம் தோட்டம் பாட்டாளி சொந்தங்களால் நிரம்பியிருக்கும். ஆனால், இப்போது கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், பாட்டாளி சொந்தங்களால் தைலாபுரம் வர முடியவில்லை.

ஆனால், யாராலும் தடை விதிக்க முடியாத புதிய விருந்தினர்கள் தைலாபுரம் தோட்டத்தில் குவிந்து கொண்டிருக்கின்றனர்.

மயில்கள்....

குயில்கள்....

கிளிகள்.....

மற்றும் பல பறவைகள் ஆகியவை தான் அந்த புதிய விருந்தினர்கள்.

மயில்களுக்கு தானியங்களும், சிறு புழு, பூச்சிகளும் தான் உணவு. கொரோனா காலத்தில் அதற்கு  தட்டுப்பாடு ஏற்பட்டதாலோ, என்னவோ அவை உணவு தேடி, உணவு கிடைக்கும் இடங்களுக்கு செல்கின்றன. அப்படித் தான் தைலாபுரம் தோட்டத்திற்கு 10&க்கும் மேற்பட்ட மயில்கள் வந்திருக்கின்றன. தோட்டத்தில் கிடைக்கும் தானியங்கள், புழு, பூச்சிகளை உட்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றன.

தனியார் தோட்டங்களில் மயில்கள் இருப்பது சர்ச்சையாகி விடக்கூடாது என்பதற்காக இது குறித்து வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்து விட்டோம். ஆனால், அவர்களோ, மயில்களை எங்களால் பிடிக்க இயலாது; தனியார் தோட்டங்களில் மயில்கள் இருப்பதில் எந்த சர்ச்சையும் இல்லை என்று கூறிவிட்டனர். அதனால், மயில்கள் தைலாபுரம் தோட்டத்தில் மரியாதைக்குரிய விருந்தினர்களாக  வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

அகநானூற்றுப் பாடல்களில் வருவதைப் போன்று மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, இடியோசை எழும்பி, அதனால் ஏற்படும்  மகிழ்ச்சியில் அந்த மயில்கள் தோகை விரித்து நடனமாடாதது மட்டும் தான் குறை.

தோட்டத்திற்கு புதிதாக வந்த குயில்கள் அதிகாலையில் தொடங்கி இரவு வரை மகிழ்ச்சியான குரலில் கூவிக்கொண்டே இருக்கின்றன. நீண்டகாலத்திற்கு பிறகு குயில்களின் கூவலைக் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

சில மணி நேரங்கள் குயில்களின் கூவல் கேட்கவில்லை என்றால், ‘‘எங்கே  குயில்கள்?’’ என்று தேடும் மனநிலைக்கு நான் வந்து விட்டேன். அந்த அளவுக்கு தைலாபுரம் தோட்டச் சூழலில் குயில்கள் இரண்டரக் கலந்து விட்டன.

மயில்களுக்கும், குயில்களுக்கும் கிளிகள் மட்டும் சளைத்தவையா என்ன?

கூட்டம் கூட்டமாக வரும் கிளிகள், ‘‘கீ..கீ..க்கீ’’ என்று தமிழ் பேசி மனதை மயக்குகின்றன.

தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி சொந்தங்களுக்கு உள்ள இடத்தை யாராலும் நிரப்ப முடியாது; அவர்களால் கிடைக்கும் மகிழ்ச்சியை வேறு யாராலும் தர முடியாது. இப்போது அந்த இரண்டும் இல்லாத சூழலில், அந்த வெற்றிடத்தை ஓரளவாவது நிரப்ப முயலுகின்றன மயில்கள், குயில்கள்  மற்றும் கிளிகள். பாட்டாளி சொந்தங்களை சந்திக்கும் வரை புதிய விருந்தினர்களால் கிடைக்கும் மகிழ்ச்சியை நானும் கொஞ்சம் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்!
                              

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages