சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

4. யானையை கோழி வீழ்த்திய கதை

யாராலும் வீழ்த்த முடியாத பெரும் இராட்சச வீரனாக திகழ்ந்த கோலியாத்தை டேவிட் என்ற சிறுவன் கவண் கல்லைக் கொண்டு வீழ்த்திய கதையை விவிலியத்தின் அடிப்படையிலான நூல்களில் படித்து இருப்போம்.

ஆனால், நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு பட்டத்து யானை ஒன்றை சாதாரண சேவல் வீழ்த்திய அதிசயம் நமது தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. அந்த வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

அந்த அதிசயத்தை சிலப்பதிகாரத்தில் அற்புதமாக விவரித்திருக்கிறார் இளங்கோவடிகள்.

புகார் காண்டத்தின் நாடுகாண் காதையில் கோவலனும், கண்ணகியும் கவுந்தியடிகளை சந்தித்து சாப விலக்கு கோருகின்றனர். சாப விலக்கு பெற்ற பிறகு அவர்கள் மூவரும் உறையூரை சென்றடைகின்றனர். அப்போது அந்த ஊரின் பெருமையை இளங்கோவடிகள் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.....

‘‘காவுந்திஐயையும், தேவியும், கணவனும்,
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து-என்’’

அதாவது கவுந்தியடிகளும், கண்ணகி மற்றும் கோவலனும் முறம் போன்ற செவி கொண்ட வாரணமான யானையும், புறத்தே சிறகுகளைக் கொண்ட சேவலும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு, அந்த சண்டையில் யானையை சேவல் வென்ற பகுதியைக் கடந்து செல்கின்றனர் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

யானையை சேவல் வென்றதால் உறையூருக்கு கோழியூர் என்ற இன்னொரு பெயரும் உண்டாம். யானைக்கும், கோழிக்கும் சண்டை நடந்த இடத்தில் தான் உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் உள்ளது. அந்த கோயிலில் யானை - கோழி சண்டை குறித்த சிற்பமும் இடம்பெற்றுள்ளது. உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் ஸ்தல புராணத்தில் யானை - கோழி சண்டை குறித்து இன்னும் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது.

உறையூரை தலைமையிடமாகக் கொண்டு சோழநாட்டை ஆட்சி செய்து வந்த வீரவாதித்தன் என்ற சோழ மன்னன் ஒரு நாள் பட்டத்து யானை மீது நகர்வலம் வந்து கொண்டிருந்தானாம். அப்போது, திடீரென யானைக்கு மதம் பிடித்து விட்டதாம். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மன்னனும் , பாகனும் தவித்த போது எங்கிருந்தோ ஆவேசக் குரல் எழுப்பியபடியே பறந்து வந்த சேவல் ஒன்று யானையுடன் சண்டையிட்டதாம். யானையின் தலை மீது அமர்ந்து தனது அலகால் கொத்தியதாம். அடுத்த நிமிடமே யானைக்கு மதம் தெளிந்து இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக கோயில் ஸ்தல புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது.

அதன்பின்னர் யானை மீதிருந்து இறங்கிய சேவல் அங்குள்ள வில்வ மரத்துக்கு அடியில் காலால் , பூமியை கீறி விட்டு மறைந்து விட்டதாம். உடனடியாக அங்கு பள்ளம் தோண்டி பார்த்த போது, சிவ லிங்கம் கிடைத்ததாம். அதைக் கொண்டு தான் உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் கட்டப்பட்டதாகவும் ஸ்தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages