மருத்துவர் அய்யா எழுதிய ‘சுக்கா... மிளகா... சமூகநீதி?’ நூல் செப்டம்பர் 17-இல் வெளியீடு! பா.ம.க., வன்னியர் சங்கம், ச.மு.ச தலைவர்கள் கூட்டறிக்கை
சமூகநீதி குறித்த வரலாற்றை மக்கள் தெரிந்து கொள்வதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட 30 அமைப்புகளின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் எழுதிய ‘‘சுக்கா... மிளகா... சமூகநீதி?’’ என்ற தலைப்பிலான சமூகநீதி வரலாற்று நூல் பாட்டாளிகளின் சமூக நீதி நாளான வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒவ்வொரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது சமூக நீதி ஆகும். சமூகநீதி கிடைக்கா விட்டால் எந்த சமுதாயத்திற்கும் வெற்றி கிடைக்காது; முன்னேற்றம் கிடைக்காது. முன்னேற்றத்தின் முதல் படிக்கட்டைக் கூட எட்டிப்பிடிக்க முடியாத அளவுக்கு பின்தங்கிக் கிடந்த வன்னியர்களின் முன்னேற்றத்திற்கு தமது சமூகநீதிப் போராட்டங்களின் மூலம் வழி வகுத்துக் கொடுத்தவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். வன்னியர் சமுதாயம் மட்டுமின்றி, மேலும் 107 சமுதாயங்களுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் 20% இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்தவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான்.
தமிழ்நாட்டு அளவில் மட்டுமின்றி, இந்திய அளவிலும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் பின்னணியில் ஒரு வரலாறு இருக்கும். ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு பெறப்பட்ட வரலாறு தான் மிகவும் நீண்ட நெடிய வரலாறு ஆகும். தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயம் என்றால் அது வன்னியர்கள் தான். ஆனால், அரசு வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் தொடர்ந்து புறக்கணிக்கப் பட்டு வந்த சமுதாயமும் வன்னியர்கள். தமிழ்நாட்டில் சில சமுதாயங்கள் அவற்றின் மொத்த மக்கள்தொகை, தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் எத்தனை விழுக்காடோ, அதை விட இரு மடங்குக்கும் கூடுதலான பிரதிநிதித்துவத்தை கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெற்றிருக்கிறார்கள்; ஆனால், தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் 25 விழுக்காட்டுக்கும் கூடுதலாக உள்ள வன்னியர்களுக்கு, இன்றைய நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒட்டுமொத்த பிரதிநிதித்துவம் 7-8 விழுக்காட்டைத் தாண்ட வில்லை. இது வன்னியர்களின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானது ஆகும்.
வன்னியர்கள் உள்ளிட்ட சமுதாயங்களை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்து 31 ஆண்டுகள் ஆகியும் இது தான் நிலைமை என்றால், அதற்கு முன் வன்னியர்களின் நிலை எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு சமுதாயம் முன்னேறாமல் ஒரு நாடு முன்னேறாது. தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சமுதாயம் முன்னேறாமல் தமிழ்நாடு முன்னேற முடியாது. அதை கருத்தில் கொண்டு தான் தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார். தனி இட ஒதுக்கீடு கிடைத்து விட்டால், வன்னியர் சமுதாயம் இப்போது அடைந்துள்ள முன்னேற்றத்தை விட 3 மடங்கு முன்னேற்றத்தை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான போராட்டத்திற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமுதாயங்களுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள், அருந்ததியர் உள்ளிட்ட பிரிவினருக்கு தனி இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்ததிலும் மருத்துவர் அய்யா அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. தேசிய அளவில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீட்டை ஒற்றை ஆளாக போராடி பெற்றுக் கொடுத்தவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு முறையே 15%, 7.5% இட ஒதுக்கீட்டை அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மூலம் பெற்றுக் கொடுத்தவரும் மருத்துவர் அய்யா அவர்கள். அவர் போற்றப்பட வேண்டிய சமூகநீதி நாயகர்.
எந்த ஒரு இனம் அதன் கடந்த காலத்தையும், போராட்ட வரலாற்றையும் மறந்து விடுகிறதோ, அதற்கு வீழ்ச்சி மட்டும் தான் பரிசாக கிடைக்கும். நமது தமிழ்ச் சமுதாயம் அதன் சமூகநீதி போராட்ட வரலாற்றை மறந்து விட்டது தான் சமுகநீதிச் சுரண்டலுக்கு வழி வகுத்துள்ளது. வன்னியர் சமுதாயம் அது கடந்து வந்த சமூகநீதிப் பாதையையும், போராட்ட வரலாற்றையும், தியாகங்களையும் மறந்து விட்டதால் தான், நாம் எட்ட வேண்டிய இலக்கை எட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். நம்மிடம் ஒற்றுமையும், உணர்வும் இருந்தால் நமது இலக்கை நாம் எப்போதோ எட்டி, சமுதாய வளர்ச்சிக்கு வழி கண்டிருக்க முடியும்.
இந்த நிலையை மாற்றவும், இந்தியாவின் சமூக நீதி போராட்டம் வரலாறு, தென் மாநிலங்களின் சமூகநீதி வரலாறு, தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாறு ஆகியவற்றுடன் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாக வரலாறு ஆகியவற்றை 510 பக்கங்கள் கொண்ட நூலில் விரிவாக விவரித்திருக்கிறார் மருத்துவர் அய்யா அவர்கள். சமூகநீதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூலை செய்திப்புனல் பதிப்பகம் வெளியிடுகிறது. அந்த வரலாற்றைப் படிக்கும் அனைவருக்கும் நாம் கடந்து வந்த பாதை தெரியும்; இனி நாம் செல்ல வேண்டிய முன்னேற்றப் பாதைக்கான வழியும் புரியும். நமது மக்களுக்குத் தேவையான மானம், அறிவு, ஒற்றுமை ஆகியவற்றை ‘‘சுக்கா... மிளகா.... சமூகநீதி?’’ நூல் நிச்சயமாக புகட்டும். மொத்தத்தில் இந்த நூல் அனைவரின் வீடுகளிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய புனித நூல் ஆகும்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம்பெறப் போகும் ‘‘சுக்கா... மிளகா.... சமூகநீதி?’’ நூல் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகள் நாளும், பாட்டாளிகளின் சமூகநீதி நாளுமான செப்டம்பர் 17 -ஆம் தேதி மருத்துவர் அய்யா அவர்கள் முன்னிலையில் வெளியிடப்படும். இணைய வழியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நூலை பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் ஆலோசனைக்குழுத் தலைவரும், இட ஒதுக்கீட்டுப் போராட்ட முன்னோடியுமான பேராசிரியர் தீரன் அவர்கள் வெளியிட, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது சேத்தியாத்தோப்பில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மார்பில் பாய்ந்த குண்டுகளைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் தியாகி தட்டானோடை செல்வராஜ் அவர்கள் பெற்றுக்கொள்வார். பாட்டாளிகள், சமூகநீதி குறித்த ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் இந்த நூலை வாங்கிப் படித்து சமூகநீதி வரலாற்றை அறிந்து கொள்ளும்படி வேண்டுகிறோம்
தங்கள் அன்புள்ள,
ஜி.கே. மணி,
தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி
பு.தா. அருள்மொழி,
தலைவர், வன்னியர் சங்கம்
ச.சிவப்பிரகாசம்,
தலைவர், சமூக முன்னேற்ற சங்கம்.
No comments:
Post a Comment