சிலப்பதிகாரம் அறிவோம் - மருத்துவர் இராமதாசு அய்யா
17. மூவரும்வைகை நதியைக்கடந்து புறஞ்சேரிப்
பகுதியாகிய நகர்ப்புறத்தை அடைதல்
குரவழும், வகுளமும், கோங்கமும், வேங்கையும்,
மரவமும், நாகமும், திலகமும், மருதமும்,
சேடலும், செருந்தியும், செண்பக ஓங்கலும்,
பாடலும், தன்னொடு பன்மலர் விரிந்து,
குருகும், தளவமும் கொழுங்கொடி முசுண்டையும், 155
விரிமலர் அதிரலும், வெண்கூதாளமும்,
குடசமும், வெதிரமும், கொழுங்கொடிப் பகன்றையும்,
பிடவழும், மயிலையும், பிணங்கு அரில் மணந்த
கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும்
மிடைந்துசூழ் போகிய அகன்று ஏந்து அல்குல் 160
வாலுகம் குவைஇய மலர்பூந் துருத்தி
பால்புடைக் கொண்டு பன்மலர் ஓங்கி,
எதிரெதிர் விளங்கிய கதிர்இள வனமுலை
கரைநின்று உதிர்த்த கவிர்இதழ்ச் செவ்வாய்
அருவி முல்லை அணிநகை ஆட்டி,
165
விலங்குநிமிர்ந்து ஒழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா அவிர்அறல் கூந்தல்
உலகுபுரந்து ஊட்டும் உயர்போ் ஒழுக்கத்துப்
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி,
வையை என்ற பொய்யாக் குலக்கொடி,
170
தையற்கு உறுவது தான்அறிந் தனள்போல்
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்
புனல்யாறு அன்று இது பூம்புனல் யாறுஎன,
அனநடை மாதரும் ஐயனும் தொழுது,
பரிமுக அம்பியும், கரிமுக அம்பியும்,
அரிமுக அம்பியும், அருந்துறை இயக்கும்
பெருந்துறை மருங்கில் பெயராது ஆங்கண்
மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித்
தேமலர் நறும்பொழில் தென்கரை எய்தி,
180
வானவர் உறையும் மதுரை வலம்கொளத்
தான்நனி பெரிதும் தகவுஉடைத்து என்று ஆங்கு,
அருமிளை உடுத்து அகழிசூழ் போகிக்
கரு நெடுங் குவளையும், ஆம்பலும், கமலமும்,
தையலும் கணவனும் தனித்துஉறு துயரம்
185
ஐயம் இன்றி அறிந்தன போலப்
பண்நீர் வண்டு டரிந்து இணைந்து ஏங்கிக்
கண்ணீர் கொண்டு கால்உற நடுங்கப்
போர்உழந்து எடுத்த ஆர்எயில் நெடுங்கொடி
வாரல்! என்பனபோல் மறித்துக்கை காட்டப்
190
புள்ளணி கழனியும், பொழிலும் பொருந்தி
வெள்ளநீர்ப் பண்ணையும், விரிநீர் ஏரியும்,
காய்குலைத் தெங்கும், வாழையும், கமுகும்,
வேய்த்திரள் பந்தரும், விளங்கிய இருக்கை
அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப்
195
புறம் சிறை மூதூர்ப் புக்கனர் புரிந்து என்.
தெளிவுரை:
இங்கு வைகை ஆறு பெண்ணென உருவகிக்கப்பட்டது.
குராமலரும், மகிழமலரும், கோங்கமலரும், வேங்கைமலரும்,
வெண்கடம்ப மலரும், சுரபுன்னை மலரும், மற்றும் மஞ்சாடி,
மருதமரம், செருந்தி, செண்பகம், பாதிரி ஆகியன பூத்துச் சொரியும்
மலர்களும், குருக்கத்தி, செம்முல்லை, முசுக்கொட்டை, மோசி
முல்லை. வெள்ளை நறுந்தாளி, மலைமுல்லை, ஆகியனவும்,
மூங்கில், சிவதை, பிடவக்கொடி, இருவாட்சி ஆகியனவும் கலந்து
மேகலையாக சூடியவளாய்ச் சிற்றிடையும் இலமார்பும் விளங்க,
முருக்கமலர் போலும் உள்ள சிவந்த வாயும், அருவி நீரொடு
வந்த முல்லைமலர் போலும் விளங்கும் புன்சிரிப்பும், கரிய கயல்
மீன்களாகிய கண்களும், நறுமணம் நீங்கப் பெறாத கருங்கூந்தலும்,
மக்களுக்கு உணவு அளித்து உயிர்காக்கும் கொள்கையும், கொண்டு
புலவர்கள் போற்றுமாறு திகழ்பவள் வைகை என்னும் பெண்
ஆவாள். அவள் கண்ணகிக்குப் பின்னர் நிகழவுள்ள தீமையினை
எண்ணிக் கண்ணீர் வடிக்க அதனை வண்ணமலர்களைத் தன்
மேலாடையாகப் போர்த்துக் கொண்டு மறைத்துக் கொண்டனள்.
கோவலனும் கண்ணகியும் இது வெறும் நீர் ஒடும் ஆறு அன்று
பல மலர்களைச் சுமந்து வரும் பூ ஆறு என்று கொண்டு அதனை
வணங்கி நின்றார்கள். ஆங்கு ஆற்றைக் கடப்பதற்கு என விளங்கும்
குதிரை முக ஓடம், யானை முக ஓடம், சிங்கமுகஓடம் என்னும்
வகையில் பலரும் ஏறிச் செல்லும் துறைவழிச்செல்லாது சிறிய
துறையாக இருந்த ஒன்றில் கட்டுமரம் வாயிலாகக் கவுந்தியடிகள்,
கோவலன் கண்ணகி ஆதிய மூவரும் வைகையைக் கடந்து
சென்றார்கள். பின்பு தேவர்கள் உறையும் மதுரையை வலமாக
வருதல் நன்று எனக் கொண்டு அதன் காவற்காடு போல் சூழும்
அகழியைக் கடந்து எல்லையை அடைந்தார்கள். அந்நகரில்
கண்ணகியும் கோவலனும் பெருந்துன்பத்தை அடைய உள்ளனர்
என்பதை முன்னமேயே அறிந்த நிலையில் வண்டுகள் வருந்திப்
பாடக் குவளை மலரும், ஆம்பலும், தாமரையும் கண்ணீர் சிந்தவும்
நிலைத்து நிற்பதற்கும் அரிதாகி நடுக்கம் கொண்டன. வெற்றிக்
கொடி பறக்கும் மதுரைநகரின் நெடிய மதில்களில் உள்ள கொடிகள்
இங்கு வரவேண்டாம் என்று தடுப்பனபோன்று அசைந்து காட்டின.
பறவைகள் அழகு செய்யும் கழனிகளும் சோலைகளும்,
நீர்வளம் மிகுந்த தோட்டங்களும் குலைகளாகக் காய்களை
அளிக்கும் தென்னை, வாழை மற்றும் பாக்குமரங்களும், மூங்கில்
பந்தரும் உள்ள புறஞ்சேரிப் பகுதியில் தவச்சீலர்களே யல்லாது
பிறர் சார்தற்கு அரிய தன்மையில் கவுந்தியடிகளும் கோவலனும்
கண்ணகியும் சென்றடைந்தார்கள்.
No comments:
Post a Comment