புதுவையைச் சேர்ந்த தமிழறிஞரும், தொழிலதிபரும், எனது நண்பருமான பெ.பராங்குசம் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்
தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டவரான பராங்குசம் இலக்கியப் பொழில் இலக்கிய மன்றத்தின் மூலம் புதுவையில் தமிழ் வளர்ச்சிக்கு ஏராளமான பணிகளை செய்து வந்தார். தமிழ் இலக்கிய வாதிகளின் புரவலராக திகழ்ந்த அவர், தமிழ் வளர்ச்சிக்கான பணிகளுக்காக அள்ளிக் கொடுத்தவர். மதுரை மாநகரம் எவ்வாறு சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததோ, அதேபோல், புதுவையிலும் சங்கம் அமைத்து தமிழை வளர்க்க பாடுபட்டவர். தமிழ்ப் பணிக்காக பல்வெறு விருதுகளை வென்றவர். தமிழினத்தின் குரலாக ஒலித்த பராங்குசம், தமிழ்த் தேசியத்தின் அடையாளமாகவும் திகழ்ந்தார்.
புதுவையைச் சேர்ந்த புகழ்பெற்ற தமிழறிஞர் புதுவை சிவத்தின் மருமகனான பெ.பராங்குசம் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஆவார். தைலாபுரம் தோட்டத்தில் தமிழ் வளர்ச்சி தொடர்பாக நான் நடத்திய கலந்தாய்வுக் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று யோசனைகளை வழங்குவார். புதுவைக்கு நான் சென்றால் என்னை சந்தித்துப் பேசத் தவறாதவர். இரு ஆண்டுகளுக்கு முன்பு தான் பவள விழா கண்டார். நூற்றாண்டைக் கடந்து தமிழுக்கு சேவை செய்வார் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தமிழறிஞர் புதுவை பராங்குசத்தை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment