பிஞ்சுகளின் ஈர நெஞ்சம்! - மருத்துவர் இராமதாசு அய்யா.
தைலாபுரம் தோட்ட இல்லத்தின் வாயில் முகப்பில் கற்களில் செதுக்கப்பட்ட இரு யானை சிலைகள் கம்பீரமாக காட்சியளிக்கும். அண்மையில் எனது தைலாபுரம் தோட்ட இல்லத்திற்கு உறவினர்கள் வந்திருந்தனர். நாங்கள் 20 பேர் ஒன்றாக அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. அப்போது எங்களுடன் இருந்த எனது 2 வயது கொள்ளுப்பேரன் அகிரா மழை பெய்வதைப் பார்ப்பதற்காக வேகமாக வாசலுக்கு ஓடினான்.
வாசலுக்கு ஓடிய அதே வேகத்தில், அங்குள்ள யானை சிலைகள் மீது மழை பெய்வதைக் கண்டு, பதற்றத்துடன் உள்ளே ஓடி வந்த அந்த பிஞ்சுக்குழந்தை, மழலை மாறாத குரலில்,’’ தாத்தா... யானை நனையுது.... யானை நனையுது’’ என்று பரபரப்பாக கூறினான். அதன் பொருள்.... அந்த யானை சிலைகள் நனையாமல் இருக்க குடை பிடிக்க வேண்டும் என்பது தான்.
அது தான் குழந்தைகள்...!
யாரும் கஷ்டப்படக்கூடாது என்ற கருணை உள்ளத்தின் வெளிப்பாடு தான் யானை சிலைகள் மழையில் நனைவதைக் கண்டு ஏற்பட்ட பதற்றம்.
குழந்தைகளின் நல்ல உள்ளத்தை போற்றும் வகையில் தான் குழந்தையும், தெய்வமும் ஒன்று என்று நமது முன்னோர்கள் கூறியிருப்பார்கள் போலும்!
******
No comments:
Post a Comment