சீதா பாட்டி, ராதாப்பாட்டி
குத்துதே... குடையுதே... எரியுதே
அய்யோ... தாங்க முடியலையே? - மருத்துவர் இராமதாசு அய்யா (07.12.2020) பதிவு
ராதா பாட்டி: அய்யோ... அம்மா எரியுதே... தாங்க முடியலையே? நான் என்ன செய்வேன்?
சீதா பாட்டி: என்னடி... உன்னை பார்த்து ரொம்பநாளாச்சுனு பார்த்துட்டு போகலாம்னு வந்தா புலம்பல் சத்தம் ஓவரா இருக்கு?
ராதா பாட்டி: அட நான் புலம்பலக்கா. வேற சில பேரு புலம்பியதை தான் இமிடேட் பண்ணி காட்டினேன்க்கா?
சீதா பாட்டி: வேற யாருடி புலம்புறது? புலம்பலுக்கு என்ன காரணம்?
ராதா பாட்டி: வேற யாருக்கா... நம்ம அம்புஜம் மாமி, ஆந்திராவுலேருந்து வந்து அப்பளம் விக்கிறாரே அவரு, நாலாவது வீட்டுல 4 பேர் அரசாங்க வேலையில இருக்கிறாங்களே அவங்களோட ஓய்வு பெற்ற தந்தை இவங்க தான் அய்யோ அம்மா எரியுதேன்னு புலம்பராங்க. எதுக்கு இந்த புலம்பல்னு விசாரிச்சேன்க்கா. வன்னியருங்க 20% தனி இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்துராங்க இல்லையா, அதை நினைச்சி தான் புலம்பராங்களாம்.
சீதா பாட்டி: அது சரி... இதுல என்னடி ஆச்சரியம். ஊருக்கே உலை வைச்சி சமைச்சி அதை யாருக்கும் தராமல் ஒரு கூட்டம் மட்டும் உட்கார்ந்து திண்ணும். பட்டினியா கிடக்குற கூட்டம் எங்களுக்கு ஒரு வாய் உணவு தரக்கூடாதா? என்று கேட்டால், அய்யய்யோ பங்கு கேட்டு வந்துட்டானுங்களே... இது நியாயமான்னு ஓலம் விடுனாங்க இல்லையா? அதுமாதிரி தாண்டி இதுவும். புலம்பட்டும் வுடு.
ராதா பாட்டி: அப்புறம்க்கா... செக்கரேட்ரியேட்ல செக்சன் ஆபீரசா இருக்கிறாரே... அந்த முட்டுசந்து வீட்டு மனுசன், வன்னியருக்கு மட்டும் 20% தனி இட ஒதுக்கீடு கோருவது எந்த வகையில நியாயம்னு கேட்கிறாருக்கா. அது சரி தானேக்கா?
சீதா பாட்டி: அட பைத்தியக்காரி. அது எப்படிடி சரியா இருக்க முடியும். செக்கரேட்ரியேட்ல செக்சன் ஆபீரசா இருக்கிறாரே? அவரது சமுதாய மக்கள் தமிழ்நாட்டில் எவ்வளவு பேரு இருப்பாங்க.
ராதா பாட்டி: ஒரு சதவீதம் இருப்பாங்க அக்கா.
சீதா பாட்டி: அரசு வேலைகளில் அவங்க எவ்வளவு இருப்பாங்க?
ராதா பாட்டி: 10 சதவீதம் இருப்பாங்க அக்கா.
சீதா பாட்டி: வன்னியருங்க மக்கள்தொகை எவ்வளவு இருக்கும்டி?
ராதா பாட்டி: எப்படியும் 25 விழுக்காட்டுக்கும் கூடுதலாகத்தான் இருக்கும்க்கா.
சீதா பாட்டி: சரி... அவங்க அரசு வேலைவாய்ப்புல எவ்வளவு பேர் இருப்பார்கள்?
ராதா பாட்டி: எப்படியும் 5, 6 விழுக்காடு இருப்பாங்க அக்கா
சீதா பாட்டி: ஏன்டி... ஒரு விழுக்காடு மக்கள்தொகை இருப்பவங்க அவங்க மக்கள்தொகையை விட 10 மடங்கு அதிகமாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அனுபவிப்பாங்க. மேலும் மேலும் வளருவாங்க. ஆனால், 25 விழுக்காடு மக்கள்தொகை உள்ளவங்க, அதைவிட 4 மடங்கு குறைவாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பிரதிநிதித்துவம் பெற்று அடிமட்டத்துலேயே கிடக்கணும். இதுவாடி சமூகநீதி? எங்களுக்கும் விகிதாச்சார அளவில் பிரதிநிதித்துவம் வேணும்னு கேட்டா அவங்களுக்கு எரியுதாமா?
வலுத்தவன் கொழுக்கும் போது, இளைத்தவன் தனக்கானதை கேட்கக் கூடாதா? அப்படி கேட்பதைக் கூட வலுத்தவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. இளைத்தவர்கள் மீது அவதூறு பரப்புவார்கள். அது தான்டி இங்கும் நடக்குது?
ராதா பாட்டி: உண்மைதான்க்கா. ஆனா இன்னோரு கேள்வி கேட்கிறாங்களே... 32 வருஷமா தனி இட ஒதுக்கீடு கேட்காம, இப்ப திடீர்னு தேர்தலுக்காகத் தான் பா.ம.க. போராடுவதாக சொல்றாங்களே... அது சரியா அக்கா?
சீதா பாட்டி: ‘செலக்டிவ் அம்னீஷியா’ன்னு ஒரு நோய் கேள்விப்பட்டிருக்கியா? அந்த நோய் தமிழ்நாட்டுல நிறையப் பேருக்கு இருக்கு. 32 வருஷமா வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு தான் இருக்கிறது. வன்னியர்களுக்கு சாதிவாரி இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தணும்னு அக்கட்சி போராடியிருக்கிறது. சமூகநீதி தான் அந்தக் கட்சிக்கு அடையாளம். மத்த சமுதாயங்களின் உரிமைகளுக்காக போராடுகிற பா.ம.க., இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர்களுக்கும் போராடி தனி இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த பா.ம.க., வன்னியர்களின் தனி இட ஒதுக்கீட்டுக்காக 32 வருடமாக போராடவில்லை என்று கூறுவது ‘‘கேட்பவன் கேனையன் என்றால், எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டுகிறது’’ என்று கூறுவதற்கு சமமானது தான்.
அதெல்லாம் சரி... 32 வருஷமா வன்னியர்களின் தனி இட ஒதுக்கீட்டுக்கு பா.ம.க.வும், அதன் நிறுவனர் டாக்டர் ராமதாசும் பேசவில்லை என்று சொல்பவர்கள் கடந்த 32 வருஷமாக வன்னியர்களின் 20% தனி இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்காக துரும்பையாவது கிள்ளிப் போட்டிருக்கிறார்களா? என்ற கேள்வியை உனக்குள் நீயே கேட்டுப்பாரு உண்மை புரியும்.
ராதா பாட்டி: ஒரு போராட்டம்.... அதற்கு எதிரா ஓராயிரம் சதிகள் இருக்குதா அக்கா. நல்லா புரிஞ்சுகிட்டேன் அக்கா. வன்னியர்கள் தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை நானும் இனி ஆதரிக்கப் போறேன்க்கா. இனி எவனாவது என்கிட்ட வந்து வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தைப் பற்றி தப்பா பேசினா குமட்டுல குத்துவேன்.
சீதா பாட்டி: சரிடி... நீ எப்படி உண்மையை புரிஞ்சிகிட்டியோ, அதேபோல் மத்தவங்களுக்கும் புரிய வை. நானும் அதைத் தான்டி செய்யறேன். நான் பா.ம.க.வோ, வன்னியரோ இல்லை. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒருவனுக்கு சமூகநீதியில் அக்கறையும், அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வும் இருந்தால் அவனும் வன்னியர் தோழனே!
*******
No comments:
Post a Comment