1-இசையின் இசை - ஏன் இந்தத் தொடர்? -மருத்துவர் இராமதாசு அய்யா
‘‘இசையின் இசை’’ என்ற பெயரில் முகநூலில் நான் எழுதும் தொடர் தமிழ்ப் பண்ணிசையின் பெருமை குறித்தது. இப்படி ஒரு தொடரை மருத்துவர் இராமதாசு ஏன் எழுத வேண்டும்? என்ற வினா உங்கள் மனதில் எழலாம்.-
அதற்கான விடை மிகவும் எளிதானது.
நம் வீட்டுப் பெருமையை அண்டை வீட்டுக்காரன் அபகரிக்கவும், சிறுமைப்படுத்தவும் முயலும் போது நமக்கு இயல்பாகவே ஆத்திரம் பெருகும் அல்லவா? அத்தகைய ஆத்திரம் என் மனதில் பொங்கியதன் வெளிப்பாடு தான் தான் இந்த முகநூல் தொடர் ஆகும்.
மார்கழி மாதம் பிறந்தால் சென்னையில் உள்ள சபாக்களில் இசை நிகழ்ச்சிகள் தொடங்கி விடும். பலரும் குடும்பத்துடன் சபாக்களுக்கு செல்வார்கள். இந்த ஆண்டு இது குறைவு என்றாலும், நான் கடந்த சில பத்தாண்டுகளாக நடப்பதை நான் கூறுகிறேன். இசை விழாக்களுக்கு செல்பவர்களில் சிலருக்கு இசை குறித்து தெரிந்திருக்கலாம். ஆனால், பலருக்கு அந்த இசை புரியாது. எனினும், அனைத்தும் அறிந்தவர்களைப் போல பாவனைகளை செய்து விட்டு வீடு திரும்புவார்கள். அவர்களுக்கு இசை புரியாததற்கு காரணம் இசை விழாக்களில் பாடப்படும் பாடல்கள் அனைத்து சமஸ்கிருதத்திலும், தெலுங்கிலும் இருப்பது தான்.
நெளிவான்; வளைவான் தமிழன்!
இது எனது நிலைப்பாடு மட்டுமல்ல.... தமிழாய்ந்த தமிழறிஞர்களின் நிலைப்பாடும் இது தான். கர்நாடக இசைக் கச்சேரியை காணச் செல்லும் தமிழன் எப்படியெல்லாம் நெளிவான்; வளைவான் என்பதை நாமக்கல் கவிஞர் கீழ்க்கண்டவாறு விளக்கியிருக்கிறார்.
‘‘ பாட்டுக்கச்சேரி கேட்கப் போகிறவர்களில் பெரும்பாலரும், கொஞ்சங்கூட தங்களுக்கு விளங்காத வார்த்தைகளையும், உணர்ச்சி ஊட்டாத ஓசைகளையும் கேட்டுக் கொண்டே நெடுநேரம் உட்கார்ந்திருப்பார்கள். பாடுகின்ற வித்வானுடைய சலவைச் சட்டையையும், சரிகைத் துப்பட்டாவையும், அவர் வாங்கிய தோடா மெடல்கள் இருந்தால் அவற்றையும், அவர் முகத்தையும், உடலையும் கோணிக் கொண்டு கைகளையும், தலையையும் நீட்டிக் கொண்டு ஆட்டிக் கொண்டிருப்பதையும், இடையிடையே பொடி போடுவதையும், கனைப்பதையும், தும்முவதையும், இருமுவதையும் பார்த்துவிட்டு தாங்களும் பாட்டுக் கேட்டதாகச் சொல்லிக் கொண்டு போவது தான் தமிழ்நாட்டில் பாட்டுக்கச்சேரிக்குப் பதப்பொருள் என்று ஆகிவிட்டது. அவர்கள் பாடுகின்ற சாகித்தியத்தின் சரியான அர்த்தமோ, அதிலுள்ள ‘‘பாவம்’’ என்று சொல்கிறார்களே, அதன் பாவமோ, புண்ணியமோ கூட தெரியுமா என்பதே சந்தேகம் தான்’’
என்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை கிண்டலாகவும், வேதனையுடனும் எழுதியிருக்கிறார்.
தமிழுக்கு இடமில்லாதது ஏன்?
தமிழ்நாட்டின் இசை விழாக்களில் தமிழிசை தான் கோலோச்ச வேண்டும். ஆனால், இசை மேடைகளில் ஆட்டம் போடுபவை சமஸ்கிருதமும், தெலுங்கும் தான். இதைக் கூட என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால், தமிழ்நாட்டின் இசை விழாக்களில் தமிழுக்கு இடமில்லாதது ஏன்? என்று கேட்டால், அவர்கள் கூறும் பதில் தான் கோபத்தின் உச்சிக்கே என்னை கொண்டு செல்லும். இசை விழாக்களில் பாடும் அளவுக்கு தமிழிசை சிறந்தது அல்ல என்று ஒரு தரப்பினரும், தமிழில் கச்சேரிகள் செய்ய போதுமான உருப்படிகள் இல்லை என்று இன்னொரு தரப்பினரும் கூறி தமிழிசையை தட்டிக் கழித்தனர். தமிழிசைக்கு எதிரான இந்தப் போக்கு தான் எனக்கு எல்லையில்லாத ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகும்.
கச்சேரிகளில் பாடும் அளவுக்கு தமிழிசையில் உருப்படிகள் இல்லை, இசை நிகழ்ச்சிகளில் பாடுமளவுக்கு தமிழிசை சிறந்தது அல்ல என்று தமிழிசையின் எதிரிகள் கூறினால், அதை தமிழிசை குறித்து எதுவும் தெரியாதவர்கள் வேண்டுமானால் தலையாட்டி விட்டு செல்லலாம். ஆனால், நான் தமிழிசை குறித்து நன்கு அறிந்தவன். அதன் வளர்ச்சிக்காக பல்வேறு வகைகளில் பாடுபட்டவன். பல பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே சங்க இலக்கியங்களை தொடர்ந்து படித்து வருகிறேன். சிலப்பதிகாரத்தில் தொடங்கி பரிபாடல் வரை சங்க இலக்கியங்களில் தமிழ்ப் பண்ணிசை எந்த அளவுக்கு நிறைந்திருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். தமிழுக்கு எதிரானவர்களால் தான் தமிழிசை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதை நன்றாக அறிவேன். இது தொடர்பாக எனக்கு பல குமுறல்கள் உண்டு.
தமிழிசைக்கு புதிய அமைப்பு
ஒரே அலைவரிசை கொண்ட இருவர் இணையும் போது, அவர்களின் வலிமை 20 மடங்கு அதிகமாகும். அப்படித் தான் தமிழிசையைக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த எனக்கு, அதே எண்ணம் கொண்ட இன்னொருவர் 25 ஆண்டுகளுக்கு முன் நண்பராக வாய்த்தார். அவரது பெயர் ஜே.வி. கண்ணன். தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த முதுபெரும் பத்திரிகையாளர்களில் ஒருவர். தமிழ்நாட்டின் முன்னணி நாளிதழ்கள் பலவற்றிலும் பணியாற்றியவர். அவருடன் உரையாடும் போது தமிழிசையை கர்நாடக சங்கீதத்தின் பெயரால் முடக்கிப் போட நடக்கும் முயற்சிகள் குறித்து விரிவாகப் பேசுவார். தமிழ்நாட்டில் தமிழிசையை வளர்க்க பல சங்கங்கள் இருந்தாலும் கூட அவற்றால் எந்த பலனும் இல்லை. தமிழிசை குறித்த நமது கனவுகளை நனவாக்க வேண்டும் என்றால் தமிழிசை வளர்ச்சிக்காக புதிய அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் என்னை வலியுறுத்தி வந்தார்.
நண்பர் ஜே.வி. கண்ணனின் வலியுறுத்தலும், எனது விருப்பமும் இணைந்ததன் பயனாக பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றம் என்ற புதிய அமைப்பு 2003&ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அந்த அமைப்பிற்கு ஜே.வி. கண்ணன் தலைவராகவும், ஜி.கே.மணி பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். அந்த அமைப்பின் சார்பில் முதல் பண்ணிசை பெருவிழா 17.12.2003 அன்று சென்னையில் நடத்தப்பட்டது. தொடர்ந்து 10 ஆண்டுகள் அந்த அமைப்பின் சார்பில் பண்ணிசை பெருவிழாக்களை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும், உலகின் பல நாடுகளிலும் நடத்தினோம். அதன் பிறகு தமிழ்ப் பண்ணிசை பெருவிழாக்களை நடத்த முடியாமல் போனது மிகவும் வருத்தமளிக்கிறது. இது குறித்து விரிவாக பின்னர் எழுதவிருக்கிறேன்.
இப்படியாக தமிழிசை குறித்து தெளிவாக அறிந்து வைத்திருப்பதுடன், தமிழ்ப் பண்ணிசை விழாக்களையும் நடத்திய நான், கொரோனா காலத்தில் சிலப்பதிகாரம், பரிபாடல் உள்ளிட்ட சங்க இலக்கியங்களை படித்த போது, அவற்றில் இடம்பெற்றுள்ள தமிழிசைக் குறிப்புகளைக் கண்டு மீண்டும் ஒருமுறை வியந்து போனேன்.
இவ்வளவு சிறப்பு மிக்க தமிழிசைக்கு தமிழகத்தின் இசை மேடைகளில் இடம் கிடைக்கவில்லையே என்ற வருத்தமும், வேதனையும், ஏமாற்றமும் என்னை வாட்டின. அப்போது தான் தமிழிசையின் வரலாறு, சிறப்புகள், தமிழிசைக்கு புத்துயிரூட்டுவதற்காக தமிழறிஞர்களும், தமிழ் சான்றோர்களும், தமிழ் ஆர்வலர்களும், அந்த வரிசையில் நானும் செய்த தொண்டுகள் குறித்து பதிவு செய்ய விரும்பினேன். அதன் வெளிப்பாடு தான் ‘‘இசையின் இசை’’ என்ற இந்தத் தொடர் ஆகும்.
நாளை....
தமிழிசை வரலாறும், சிறப்பும்!
No comments:
Post a Comment