3. இசையின் இசை சங்க இலக்கியங்களில் தமிழிசை! - மருத்துவர் இராமதாசு அய்யா
தமிழ் இலக்கியத்திற்கு செழுமை சேர்த்தவை சங்க இலக்கியங்கள் தான். மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்கள் குறித்தும், உலகின் அனைத்து நிகழ்வுகள் குறித்தும், தமிழ் மண், நில வகைகள், வீரம், காதல் என சங்க இலக்கியங்களில் இல்லாதது எதுவுமில்லை. தமிழ் இலக்கியத்திற்கு சிறப்பு சேர்த்த அதே சங்க இலக்கியங்கள் தான் தமிழிசைக்கும் பெருமை சேர்த்திருக்கின்றன. சங்க இலக்கியங்களில் தமிழிசை வாழ்கிறது; சங்க இலக்கியங்களை தமிழிசை வாழ வைக்கிறது என்று சொல்லும் அளவுக்கு சங்க இலக்கிய நூல்களில் பெரும்பாலானவற்றில் தமிழிசையும், அது சார்ந்த குறிப்புகளும் நிறைந்துள்ளன.
தொல்காப்பியத்தில் தமிழிசை
தொல்காப்பியம் சங்க இலக்கியத்தைச் சேர்ந்தது அல்ல; அதற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்தது. தமிழிசை சார்ந்து இப்போது கிடைக்கும் நூல்களில் மிகவும் பழமையானது தொல்காப்பியம் தான். சங்க இலக்கியத்தில் தமிழிசை என்று இந்த அத்தியாயத்திற்கு தலைப்பிட்டதாலேயே அதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த தொல்காப்பியம் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. தொல்காப்பியம் குறித்து வியந்து பேசாமல் சங்க இலக்கியங்களுக்குள் நுழைய முடியாது. சங்க இலக்கியங்களில் தமிழிசை என்ற தலைப்பிற்குள் புகுந்து விவாதிப்பதற்கான நுழைவாயிலே தொல்காப்பியம் தான் என்பது என் வாதம்.
தமிழிசையின் தொன்மையையும், சிறப்பையும் நிரூபிப்பதற்கு மிகச்சிறந்த ஆதாரம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியர் கி.மு. மூன்றாவது நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்தவர். அதனால் தொல்காப்பியம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தான் படைக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த நூலிலேயே தமிழிசைக்கான கருவிகள், தமிழிசையின் சிறப்புகள், தமிழிசையின் தொழிற்முறை பயன்பாடு ஆகியவை குறித்து ஏராளமான குறிப்புகள் உள்ளன என்பதால், தமிழிசையின் வயது குறைந்தது 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழிசையின் பயன்பாடு சிறப்பாக இருந்திருப்பதை அறியலாம்.
தொல்காப்பியத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்குரிய யாழ்களும், பண்களும் கருப்பொருளாக விளக்கப்பட்டுள்ளன என்பதை முதல் அத்தியாயத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். அதுமட்டுமல்ல... அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழிசைக் கருவிகள் குறித்தும் தொல்காப்பியத்தில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. அனைத்தும் வளர்ச்சியடைந்த இன்றைய நாளில் வணிகமுறை இசை நிகழ்ச்சிகள் நடத்துவது சாதாரணமானது மட்டுமின்றி சாத்தியமானதும் கூட.
ஆனால், 2500 ஆண்டுகளுக்கு முன்பே வணிக முறை இசை நிகழ்ச்சிகள் நடைமுறையில் இருந்தது குறித்தும், அதற்காக பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகள் குறித்தும் தொல்காப்பியத்தில் விவரிக்கப் பட்டுள்ளது. அந்த காலத்தில் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகள் மற்றும் பண்களாக தொல்காப்பியம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:
நிலம்: குறிஞ்சி
பண்: குறிஞ்சிப்பண்
யாழ்: குறிஞ்சி யாழ்
பறை: வெறியாட்டுப் பறை, தொண்டகப் பறை
நிலம்: முல்லை
பண: முல்லைப்பண்
யாழ்: முல்லையாழ்
பறை: ஏறுகோட்பறை
நிலம்: மருதம்
பண்: மருதப்பண்
யாழ்: மருத யாழ்
பறை: நெல்லரி, மணமுழவு
நிலம்: நெய்தல்
பண்: செவ்வழிப் பண்
யாழ்: விளரி யாழ்
பாறை: மீன் கோட் பறை
நிலம்: பாலை
பண்: பாலைப்பண்
யாழ்: பாலை யாழ்
பறை: துடி
ஐந்து நிலப்பகுதிகளிலுமே வணிகமுறைக்கான இசை, தனிப்பட்ட முறையில் இசைத்து இன்பம் காண்பதற்கான இசை என இரு வகையான இசை இருந்தை தொல்காப்பியம் சுட்டிக்காட்டியிருக்கிறது. வணிகமுறை இசைக்காக பயன்படுத்தப்பட்ட கருவி பறை ஆகும். பறை என்பது இப்போது பயன்படுத்தப் படும் பறை அல்ல. மாறாக, கேட்பவர்களை உற்சாகப்படுத்தும் தாள இசையை எழுப்பும் அனைத்து வகை இசைக்கருவிகளுமே பறை என்று தான் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், தனிப்பட்ட முறையில் இசைத்து இன்பம் காண்பதற்கு ‘யாழ்’ இசைக்கருவி தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இன்பம் காண்பதற்கும், உற்சாகம் காண்பதற்கும் தனித்தனி இசைக் கருவிகள் என்ற அளவுக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழிசை பக்குவப்பட்டு இருக்குமானால், அதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன் தமிழிசை தோன்றியிருக்க முடியும் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
சிலப்பதிகாரம்
தமிழிசைக்கு மிகப்பெரிய பங்களித்த நூல்களில் மிகவும் முக்கியமானது சிலப்பதிகாரம் என்று நான் உறுதியாக கூறுவேன். சங்க இலக்கியங்களில் மிகவும் முக்கியமானதான சிலப்பதிகாரம், பக்தி இலக்கியத்தின் முதன்மை நூல்களான தேவாரம், திருவாசகம், நாலயிரத்திவ்விய பிரபந்தம் ஆகியவற்றில் மட்டும் 13,000&க்கும் கூடுதலான தமிழிசைப் பாடல்கள் உள்ளன என்பது பலரும் அறியாத உண்மை ஆகும். அதுமட்டுமல்ல.... பள்ளிப்படிப்பின் போது பாடங்களில் எழும் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள கோனார் தமிழ் உரை நமக்கு எந்த அளவுக்கு உதவியாக இருந்ததோ, அதேபோல் தமிழிசை குறித்த ஐயங்களை தீர்த்து வைப்பதற்கான நூலாக சிலப்பதிகாரத்தை நான் குறிப்பிடுவேன். அந்த அளவுக்கு சிலப்பதிகாரத்தில் தமிழிசை தொடர்பாக நுணுக்கமான, அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் உள்ளன.
சிலப்பதிகாரம் எனக்கு மிகவும் பிடித்தமான இலக்கியம் ஆகும். அண்மையில் கூட ‘‘சிலப்பதிகாரம் அறிவோம்’’ என்ற தலைப்பில் முகநூலில் ஒரு தொடர் எழுதியிருந்தேன். இந்த நூலில் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் உள்ளன. சிலப்பதிகாரத்தில் தமிழிசைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அதிலுள்ள ஒரு முக்கியமான காட்சியிலிருந்து விளக்க விரும்புகிறேன்.
சிலப்பதிகாரத்தில் 3 காண்டங்களும், 30 காதைகளும் உள்ளன. முதல்காண்டமான புகார்க்காண்டத்தில் ஏழாவது காதையாக இடம் பெற்றுள்ள கானல்வரி காதை தான் சிலப்பதிகாரத்தின் திருப்புமுனையாகும். இந்தக் காதையில் தான் கோவலனும், மாதவியும் பிரியும் காட்சி விளக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பிரிவதற்கு காரணமாக அமைவதே முதலில் மாதவியும், பின்னர் கோவலனும் போட்டிப் போட்டுக் கொண்டு யாழ் வாசிப்பது தான். அந்தக் காட்சிகளில் யாழ் இசையின் பெருமை, 8 வகையான இசைக்கூறுகள் உள்ளிட்டவை குறித்து சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் விவரித்திருக்கிறார்.
யாழிசைச் சிறப்பு
காவிரிப்பூம்பட்டினத்தில் சித்திரை முழுநாளில் நடைபெறும் இந்திர விழாவில் கோவலனும், மாதவியும் கூடிக் களித்தனர். அப்போது வசந்த மாலை என்ற தமது தோழியிடம் இருந்த யாழை வாங்கிய மாதவி, அதை அற்புதமாக அனைவரும் மகிழும் வண்ணம் இசைக்கத் தொடங்கினாள். அதை இளங்கோவடிகள் கீழ்க்கண்டவாறு சித்தரிக்கிறார்.
‘‘சித்திரப்படத்துள் புக்குச்செழுங்கோட்டின் மலர் புனைந்து
மைத்திடம் கண்மண மகளிர்கோலம் போல்வனப் பெய்தி
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்எ ன்று
இத்திறத்துக் குற்றம் நீங்கிய யாழ்கையில் தொழுது வாங்கிப்
பண்ணல்பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டு கையூழ்
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய
எண்வகை யால் இசை எழி இப்
பண்வகையால் பரிவு தீர்ந்து,
மரகத மணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளை போலப்பல் நரம்பின்மிசைப் படர,
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏர் உடைப் பட்டடை என இசையோர் வகுத்த :
எட்டு வகையின் இசைக்கர ணத்துப்
பட்ட வகை தன்செவியின் ஓரத்து,
“ஏவ லன் பின்பாணி யாதெனக்”
கோவலன் கையாழ் நீட்ட அவனும்
காவிரியை நோக்கினவும் கடற்கானல் வரிப்பாணியும்,
மாதவிதன் மனம் மகிழ வாசித்தல் தொடங்கும் மன்’’
& என்று கானல் வரி கவிதையை புனைகிறார் இளங்கோவடிகள்.
இதன் பொருள் பின்வருமாறு:
சித்திர வேலைப்பாடு அமைந்த ஆடையும், வளப்பம் மிக்க மலர்மாலையும் தரித்து மை தீட்டப்பட்ட கண்ணோடு விளங்கும் மணப்பெண்ணைப் போன்று அழகு ஒளிர பத்தர், ஆணி, கோடு நரம்பு எனப்படும் உறுப்புகளுடன் விளங்கிய யாழை மாதவி கையில் ஏந்தினாளாம்.
எட்டு வகை இசைக்கூறுகள்
அவல்பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு ஆகிய எட்டுவகையான கலை நுட்பம்கொண்டு யாழினை மீட்டி மாதவி இசை எழுப்பினாளாம். மரகதக் கல்லினால் இழைக்கப்பட்ட மோதிரங்கள் காந்தள் மலர் போன்ற மாதவியின் கை விரலை அலங்கரிக்க அவை, யாழின் நரம்புகளின் மீது படிந்து இனிய இசையை எழுப்பினவாம்.
வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை ஆகிய எட்டு வகையான இசைக் கூறுகளையும் இசை வல்லார் வகுத்த வழியில் செவிக்கு இன்பம் தரும் வகையில் மாதவி மீட்டினாளாம்.
அதைத் தொடர்ந்து யாழை கோவலனிடம் மாதவி கொடுக்க, அதை அவன் மாதவியின் மனம் மகிழும் வகையில் வாசித்தானாம். ஒரு பெண்ணின் அழகை அன்னத்துடன் ஒப்பிட்டு கோவலன் பாட, அவன் வேறு ஒரு பெண்ணை நினைத்து பாடுவதாக எண்ணி அதிர்ச்சி அடைகிறாள் மாதவி. அவளும் யாழை வாங்கி, தாமும் ஒரு காதலனை எண்ணி பாடுவதைப் போல ஒரு பாடலைப் பாடினாள். அதனால் கோபமடைந்த கோவலன் மாதவியைப் பிரிந்து கடற்கரை மணலில் நடக்கத் தொடங்கியதாக சிலப்பதிகாரக் கதை செல்கிறது. அந்தக் கதையில் தமிழிசையின் சிறப்பு, 8 வகையான இசைக்கூறுகள் போன்றவை சிறப்பாக அமைந்திருப்பதைத் தான் தமிழிசைக்கு சிலப்பதிகாரம் செய்யும் தொண்டாக நான் கருதுகிறேன். சிலப்பாதிகாரத்தில் பல பகுதிகள் தமிழிசைக்கு அழகு சேர்க்கின்றன.
பரிபாடலில் பண்ணிசை
சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் குறிப்பிடத்தக்கது பரிபாடல் ஆகும். பரிபாடலில் மொத்தம் 70 பாடல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், அவை அனைத்துப் பாடல்களும் இன்னும் முழுமையாகக் கண்டெடுக்கப்படவில்லை. பரிபாடல் நூலில் உள்ள அனைத்துப் பாடல்களும் ஒரே சீராக இருக்காது. சில பாடல்கள் 25 அடி மட்டும் தான் இருக்கும்; வேறு சில பாடல்கள் 400 அடிகள் வரை இருக்கும். பரிபாடல் நூலின் அனைத்து பாடல்களும் இசையை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் என்பது சிறப்பு ஆகும். பரிபாடல் என்று இந்த நூலுக்கு தலைப்பு வந்ததன் பின்னணியாக ஒரு சுவையான காரணம் கூறப்படுகிறது. பரி என்றால் குதிரை என்று பொருள்.
குதிரையின் நடை போன்று பண்ணிசை பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் தான் இந்த நூலுக்கு பரிபாடல் என்று பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் பரிபாடலில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பாடல்கள் அனைத்தும் துள்ளல் நடையில் இருப்பதை உணர முடியும்.
பரிபாடல்களில் மறையோர் பாடல், உழிஞை பாடல், தமிஞ்சிப் பாடல், விறற்களப் பாடல், வெறியாட்டப் பாடல், துணங்கைப் பாடல், வேதப் பாடல், வள்ளைப் பாடல் உள்ளிட்ட அனைத்துமே இசைப்பாடல்கள் தான் என்று பரிமேலழகர் குறிப்பிட்டிருக்கிறார். பரிபாடலில் ஒவ்வொரு பாடலிலும் அதை இயற்றிய புலவர்களின் பெயர்களும், எந்தப் பண்ணில் பாடவேண்டும் என்ற விபரங்களும், பண்ணமைத்த இசையமைப்பாளர்களின் பெயர்களும் அந்தப் பாடல்களோடு பதிவு செய்யப்பட்டுள்ளன. பெட்டகனார், கண்ணனாகனார், மருத்துவன் நல்லச்சுதனார், பித்தாமத்தர் உள்ளிட்டோர் பரிபாடல் பாடல்களுக்கு பண்ணமைத்துள்ளனர். பரிபாடலில் உள்ள பாடல்கள், இசைப் பாடல்களாக அமைவதோடு மட்டுமன்றி, இசைபற்றியும், இசைக் கருவிகள் பற்றியும் தகவல்களைக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிற நூல்கள்
சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள மற்ற நூல்களிலும் தமிழிசை சார்ந்த குறிப்புகள் ஏராளமாக உள்ளன. குறிஞ்சிப்பண், மருதப்பண், காஞ்சிப்பண், செல்வழிப்பண், படுமலைப்பண், விளரிப்பண் உள்ளிட்ட பண்களைப் பற்றி எட்டுத் தொகை நூல்களில் எட்டாவது நூலான புறநானூறு நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. சீரியாழ், பேரியாழ், வேய்ங்குழல், ஆம்பற்குழல், முழவு, தண்ணுமை, பெருவங்கியம் உள்ளிட்ட இசைக்கருவிகள் குறித்தும் அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநானூறு அளவுக்கு இல்லை என்றாலும் கூட, அகநானூற்றிலும் தமிழிசை பற்றிய தகவல்கள் உள்ளன. அகநானூற்றின் ஒருபாடலில் ஒரு பெண் குறிஞ்சிப்பண்ணை இசைத்து, தினைப்புனத்தில் தீனிக்காக வந்த யானையைத் தூங்கச் செய்தாள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆற்றுப்படை நூல்கள்
சங்க இலக்கியங்களின் பத்துப்பாட்டு தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுபாணாற்றுப்படை மற்றும் பெரும்பாணாற்றுப்படையில் சீறியாழ், பேரியாழ் என்னும் இசைக்கருவிகளைப் பற்றிச் சொல்லப்படுகிறது. பாணர், பாடினி, விறலியர், கூத்தர் முதலான இசைக் கலைஞர்களைப் பற்றியும் இந்நூல்கள் பேசுகின்றன.
மலைபடுகடாம் என்ற இலக்கியத்தில் தமிழ் இசைக்கருவிகளின் வகைகள் விளக்கப்பட்டுள்ளன. இமிழ், முழவு, ஆகுளி, பாண்டில், கோட்டு, தும்பு, இளி, இமிர், குழல், அரி, தட்டை, எல்லரி, பதலை, ஆகியவை குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள் ஆகும். பதிற்றுப்பத்து நூலிலும் தமிழிசை குறித்தும், இசைக்கருவிகள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருப்பதை பல்வேறு ஆதாரங்களிலிருந்து அறிய முடிகிறது.
தமிழிசையின் பொற்காலம் என்பது சங்ககாலம் என்பதை முதல் அத்தியாயத்திலேயே கூறியுள்ளேன். இதன் மூலம் இன்னொரு செய்தியும் வெளிப்படுகிறது. மக்கள் கவலையின்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால் மட்டும் தான் இசை செழிக்க முடியும். பசியில் வாடும் மக்களால் இசையை ரசிக்க முடியாது. அந்த வகையில் சங்க காலத்தில் தமிழிசை சிறந்து விளங்கியிருப்பதன் மூலம் அப்போது மக்கள் கவலை இல்லாமல் வாழ்ந்துள்ளனர் என்பதை நம்மால் உணர முடிகிறது.
நாளை....
தமிழிசையின் வீழ்ச்சியும், எழுச்சியும்!
*****
No comments:
Post a Comment