அன்பின் அடையாளமாகவும் கருணையின் வடிவமாகவும் வாழ்ந்த இயேசுபிரான் பிறந்த நாளை கிறித்துமஸ் விழாவாகக் கொண்டாடும் கிறித்துவ சொந்தங்கள் அனைவருக்கும் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் இயேசுபிரான் அன்பு காட்டினார். உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். தமது வாழ்நாளின் கடைசி நொடி வரை அன்பையும், கருணையையும் காட்டியது மட்டுமின்றி, எதிரிகளுக்கு மன்னிப்பையும் வழங்கினார்.
உலகில் அன்பும், சகிப்புத் தன்மையும், கருணையும் பெருகுவதற்கு கிறித்துமஸ் திருநாள் போன்ற விழாக்கள் அடிக்கடி கொண்டாடப்பட வேண்டும். இயேசுபிரான் போதித்த கொள்கைகள் அனைவரின் மனதிலும் பதியும் வண்ணம் பரப்பப்பட வேண்டும். இயேசுவின் கொள்கைகள் பின்பற்றப்படுவதற்கு சிறந்த முன்னுதாரணங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இவையே கர்த்தருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.
இயேசு பிறந்த இந்த நன்னாளில் இந்தப் பணிகளைத் தொடங்குவோம். இருப்பவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை வழங்குவோம். பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம். அதன் மூலம் இயேசு விரும்பிய அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் பெருகுவதற்காக உழைக்க உறுதியேற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment