2 இசையின் இசை
தமிழிசை வரலாறும், சிறப்பும்! - மருத்துவர் இராமதாசு அய்யா
‘‘தமிழன் என்றொரு இனம் உண்டு,
தனியே அவர்க்கொரு குணம் உண்டு’’
- என்றார் நாமக்கல் கவிஞர்.
நாமக்கல் கவிஞரின் சொற்கள் உண்மையானவை. அனுபவத்தின் அடிப்படையிலானவை. தமிழனின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களும் தனித்துவமானவை. இதற்கு இசையும் விலக்கல்ல. ஆம்... தமிழர்கள் தனக்கென்று தனி இசையையும் உருவாக்கி வைத்திருந்தனர். அதற்கு இருந்த தனித்துவம் தான் பல்வேறு கலாச்சார படையெடுப்புகளையும், அதனால் ஏற்பட்ட பின்னடைவுகளையும் கடந்து தமிழிசையை இன்னும் உயிரோட்டத்துடன் வைத்திருக்கிறது.
தமிழிசை என்றால் என்ன?
ஆனால், பெரும் சோகம் என்னவென்றால் தமிழிசை என்றால் என்ன? என்பது குறித்த புரிதலே தமிழர்களில் பெரும்பான்மையினருக்கு இல்லை என்பது தான். தமிழிசை என்றால் என்ன? என்ற வினாவை கற்றறிந்தவர்கள் உள்ளிட்ட பலரிடமும் நான் எழுப்புவது வழக்கம். ஆனால், அவற்றுக்கு கிடைக்கும் பதில் தலையை சுற்ற வைத்து விடும். திருநெல்வேலியில் செய்யப்படும் அல்வா திருநெல்வேலி அல்வா என்ற ரீதியில் தமிழ் மொழியால் அமைந்த இசைப்பாடல்கள் தமிழிசை என்று விளக்கம் அளித்தவர்கள் பலர். முனைவர் பட்டம் பெற்ற பலரும் கூட இதில் அடக்கம் என்பது தான் வேதனை.
உண்மையில் தமிழிசை என்பது தமிழர்களின் இசை முறைமை ஆகும். இந்த முறைமையில் எந்த மொழிப்பாடல்களையும் பாட முடியும் என்பது தான் தமிழிசையின் சிறப்பு ஆகும்.
எல்லா மொழிகளுக்கு இசை உண்டா? என்ற வினாவுக்கு துல்லியமாக விடை தேட முடியாது. ஆனால், தமிழுக்கு இசை உண்டு. உலகில் பல மொழிகளில் இலக்கியங்களும், நாடகங்களும், இசையும் உண்டு. ஆனால், இயல், இசை, நாடகம் என தமிழை மூன்றாகப் பிரித்து இசைக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுத்தவர்கள் தமிழர்கள் தான்.
பிற மொழிகளில் இசை என்பது ஒரு கலையாக மட்டுமே பார்க்கப்படும். தமிழர்கள் மட்டும் தான் தமிழிசையை தங்களது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே பார்த்தனர்; பார்த்து வருகின்றனர். தாயின் வயிற்றில் கருவாகும் போதே நலுங்கு பாடல்கள் இசைக்கப்படுகின்றன. வயிற்றிலிருந்து பூமிக்கு வரும் போதே நம்மை வரவேற்பது தாலாட்டு எனும் தமிழிசை பாடல் வகை தான். வாழ்ந்து முடித்த பிறகு நம்மை வழியனுப்பி வைப்பது ஒப்பாரி எனும் தமிழிசை பாடல் ஆகும்.
தமிழிசை பாடல் வகைகள்
அதுமட்டுமின்றி, நாற்று நடும் போது அதற்காக தனிப்பாட்டு, முளைப்பாரி எடுத்துச் செல்லும் போது அதற்கு ஒரு பாட்டு, வண்டிக்காரன் வண்டி ஓட்டிச் செல்லும் போது பாடிச் செல்வதற்கு தனிப்பாட்டு, நெல்லுக் குத்தும் போது அதற்கான பாட்டு, எந்த வேலை செய்தாலும் அலுப்பு தெரியாமல் இருப்பதற்காக பாடப்படும் தனித்தனிப் பாடல்கள் என தமிழிசைப் பாடல்களில் ஏராளமான வகைகள் உள்ளன. தமிழிசை இல்லாமல் தமிழர்களின் வாழ்க்கை இல்லை என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் கூற முடியாது.
தமிழிசையில் தாலாட்டு, தெம்மாங்கு, அம்மானை, ஒப்பாரி, ஏலேலோ, நலுங்கு முதலான நூற்றுக்கணக்கான பாடல் வகைகள் உள்ளன. பண்டைப் பண் இசை, செவ்வியல் தமிழ் இசை, பக்தி இசை, நாட்டார் இசை, திரையிசை, சொல்லிசை என தமிழிசையில் ஏராளமான வடிவங்கள் உள்ளன. உலகில் எந்த மொழியின் இசைக்கும் இவ்வளவு சிறப்புகள் கிடையாது.
தமிழிசையின் காலம் என்று பார்த்தால் சங்ககாலத்திற்கு முந்தைய காலம் ஆகும். முத்தமிழில் இயல், நாடகம் ஆகிய வடிவங்கள் தோன்றுவதற்கு முன்பே இசை வடிவம் தோன்றிவிட்டது. கி.மு. 500&ஆவது ஆண்டுக்கு முன்பிலிருந்தே தமிழிசை பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அந்த வகையில் முத்தமிழில் மூத்த தமிழ் இசைத்தமிழ், அதாவது தமிழிசை தான். தமிழின் தொன்மையான இலக்கியமாக போற்றப்படும் தொல்காப்பியத்திலும், சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலும் தமிழிசையும், தமிழ் இசையின் கூறுகளும் நீக்கமற நிறைந்து கிடக்கின்றன.
தொல்காப்பியத்தில் தமிழிசை
தொல்காப்பியத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்குரிய யாழ்களும், பண்களும் கருப்பொருளாக விளக்கப்பட்டுள்ளன. சங்ககாலத்தில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்திலும், அதற்கான உரைகளிலும் ஏராளமான இசைக்குறிப்புகள் காணப்படுகின்றன. தமிழிசையின் நுட்பங்கள் குறித்து அரங்கேற்றுக் காதையில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆய்ச்சியர் குரவை, வேனில் காதை, நெடுநல் காதை போன்றவற்றில் அரிதிலும் அரிதான இசைக்குறிப்புகள் நிறைந்து கிடக்கின்றன.
தேவார மூவருக்கு முந்தையவராக கருதப்படும் காரைக்கால் அம்மையாரின் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகியவை பண்ணிசையை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை ஆகும்.
தமிழிசையில் 108 பண்கள்
தமிழிசை குறித்து நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் பயனாக பண்டையக் காலத்தில் தமிழில் 108 பண்கள் இருந்ததை அறியமுடிகிறது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய தேவார மூவரின் பாடல்களில் பண்ணிசை ஆட்சி செய்திருப்பத்தை பார்க்க முடியும். அதேபோல், மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும் பண்ணிசை இமயம் அளவுக்கு உயர்ந்து இருப்பதை உணர முடியும்.
பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்களில் பண்ணிசை நாட்டியமாடுவதை அந்தப் பாடல்களை கேட்கும் போது அறிய முடியும். பதினெண் சித்தர்களின் பாடல்களிலும் பண்ணிசை மனதை மயக்கும் வகையில் இருக்கும். தமிழிசையின் வயது குறைந்தது 2,500 ஆண்டுகளுக்கும் கூடுதலாக இருக்கலாம். ஆனால், அன்று முதல் இன்று வரையிலான மிக நீண்ட காலத்தில் தமிழ்ப் பண்ணிசையின் மரியாதையும், கவுரவமும் சற்றும் குறையாமல் பாதுகாத்து வரும் பெருமை நாகசுரத்திற்கே உண்டு. தமிழிசையின் வளர்ச்சிக்கு நாகசுரம் ஆற்றிய பங்கு அளவிட முடியாதது. நாகசுரம் தான் தமிழிசைக் கலாச்சாரத்தின் அடையாளம் ஆகும். தமிழிசை, நாகசுரம் ஆகிய இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று உதவியாக இருந்து வருகின்றன. தமிழிசை இருக்கும் வரை நாகசுரத்தையும், நாகசுரம் இருக்கும் வரை தமிழிசையையும் வீழ்த்த முடியாது. கி.மு காலத்தில் தொடங்கிய தமிழிசை இன்னும் வளர்ந்து வருகிறது. அது இனியும் வளரும். அது தான் தமிழிசையின் சிறப்பு ஆகும்.
தமிழிசை - மதச்சார்பற்ற இசை
தமிழிசைக்கும், சமய இலக்கியங்களுக்கும் இடையிலான தொடர்பு பிரிக்க முடியாதது ஆகும். தமிழிசையை வளர்த்ததில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சமயங்களுக்கும் பங்கு உண்டு. சைவ சமய நாயன்மார்களின் தேவார, திருவாசகமும், வைணவ ஆழ்வார்களின் திருப்பாசுரங்களும், இஸ்லாமிய சூஃபி இசை ஞானச் செம்மல்களாகிய குனங்குடி மஸ்தான் சாகிப் அவர்களின் மெய்ஞ்ஞான கீர்த்தனைகளும், தக்கலை சித்தர் பீர் முகமது வலியுல்லா அவர்களின் ஞானப்பாடல்களும் தனி அழகு கொண்டவை. அவற்றின் ஊடே தமிழ்ப் பண்ணிசை தவழ்ந்து செல்வதை பாடல்களை கேட்கும் போது உணர முடியும்; அனுபவித்து மகிழ முடியும். கிறித்தவ மதக் கீர்த்தனைகளும் தமிழ்ப் பண்ணிசையின் குழந்தைகள் தான். கிறித்தவ மதத்தைச் சேர்ந்த வேதநாயகம் பிள்ளையின் சமரசக் கீர்த்தனைகள் அலாதி தமிழ்மணம் கமழ்பவை. இவ்வாறாக தமிழிசை அனைத்து மதங்களையும் கடந்து மதச்சார்பற்ற இசையாக திகழ்கிறது. மதங்களை மட்டுமின்றி, மொழிகளையும் கடந்த இசை தான் தமிழிசை ஆகும். தமிழிசை என்பது இசை முறைமை தான் என்பதால் எந்த மொழியின் பாடலையும் தமிழிசையில் இசைக்க முடியும். எந்த மொழிப் பாடலாக இருந்தாலும், அந்தப் பாடலை மொழி தெரியாதவர்களையும் ரசிக்க செய்ய இயலும். அது தான் தமிழிசையின் இணையற்ற சிறப்பாகும்.
தமிழிசை உலகின் ஈடு இணையற்ற இசை என்றாலும் கூட, பல தருணங்களில் வீழ்ச்சியடைந்து தான் மீண்டு வந்திருக்கிறது. தமிழிசை சங்க காலத்திற்கு முன்பே தோன்றி விட்டது என்றாலும் கூட, சங்க காலம் தான் தமிழிசையின் பொற்காலம் ஆகும். சங்ககாலத்தில் இயற்றப்பட்ட அனைத்து இலக்கியங்களிலும் தமிழிசை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. பரிபாடல் உள்ளிட்ட பல்வேறு இலக்கியங்களில் தமிழ்ப் பண்ணிசையை அடிப்படையாகக் கொண்டே இயற்றப்பட்டுள்ளன. சங்க காலத்தில் இயற்றப்பட்ட இலக்கியங்களின் அடிப்படையில் தான் தமிழிசை இன்று தமிழர் வாழும் நாடுகள் அனைத்திற்கும் பயணித்து, வியக்கத்தக்க வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதனால் தான் சந்தேகமின்றி சொல்கிறேன்.... சங்க காலம் தான் தமிழிசையின் பொற்காலம் ஆகும். சங்க காலத்திற்குப் பிறகு தமிழிசை பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. ஆனாலும் அதற்கு தமிழிசை எந்த வகையிலும் காரணம் அல்ல. கி.பி. 300 முதல் கி.பி. 600 வரையிலான 300 ஆண்டுகளில் நம்மீது சமணர்கள் படையெடுத்து ஆட்சி செய்தது தான் தமிழிசை பின்னுக்குத் தள்ளப்பட்டதற்கு காரணம் ஆகும்.
சமணர் காலத்திற்கு பிறகு வந்த பக்தி காலத்தில் தமிழிசை மீண்டும் புத்துயிர் பெற்றது. அதைத் தொடந்து வந்த இடைக்காலத்தில் தான் பிற மொழிகளின் ஆதிக்கம் காரணமாக தமிழிசை மீண்டும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. எனினும் தற்காலத்தில் தமிழிசை தடைகளை உடைத்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. தமிழிசைக்கு வரவேற்பு பெருகிக் கொண்டிருக்கிறது. இவ்வாறாக தமிழிசையின் வரலாற்றை , சங்க காலம், சமணர் காலம், பக்தி காலம், இடைக் காலம், தற்காலம் என ஐந்து கட்டங்களாக பிரிக்கலாம்.
நாளை....
சங்க இலக்கியங்களில் தமிழிசை!
No comments:
Post a Comment