16. இசையின் இசை
தில்லியிலும், மும்பையிலும் ஒலித்த தமிழிசை! - மருத்துவர் இராமதாசு அய்யா
தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் தமிழிசை மணக்க வேண்டும் என்பது தான் எனது எளிமையான ஆசைகளில் முதன்மையானது. அந்த முயற்சிக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், உலகின் பல நாடுகளிலும் தமிழர்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கினார்கள். அதனால் தான் தமிழகத்திற்கு வெளியே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், இந்தியாவிற்கு வெளியே பல நாடுகளிலிலும் பொங்கு தமிழ்ப் பண்ணிசைப் பெருவிழாவை நடத்துவது சாத்தியமானது; பெரும் வெற்றியும் பெற்றது.
தமிழ்நாட்டில் தமிழிசை விழாக்களை நடத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. முறையான திட்டமிடலுக்குப் பிறகு அது 2003&ஆம் ஆண்டில் நனவானது. அந்த ஆண்டில் தான் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் முதன் முதலில் பொங்குதமிழ்ப் பண்ணிசைப் பெருவிழா நடத்தப் பெற்றது. இரண்டாம் ஆண்டிலும் அதே கட்டமைப்பில் பண்ணிசைப் பெருவிழா வெகுசிறப்பாக நடத்தப்பெற்றது.
அவற்றைத் தொடர்ந்து 2005&ஆம் ஆண்டில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் அங்கமாக பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தேன். அதன்பிறகு தான் தமிழிசை விழாக்களை தமிழ்நாட்டுக்கு வெளியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நடத்துவதற்கு தீர்மானித்தேன். தமிழ்நாட்டிற்கு வெளியில் எந்த மாநிலத்தில் முதலில் நடத்துவது என்று வினா எழுந்தவுடன், அதற்கு கிடைத்த முதல் விடை மும்பையில் நடத்த வேண்டும் என்பது தான். அதற்கு காரணம் இருந்தது.
மும்பையில் இசைவிழா ஏன்?
தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்கள் அதிகம் வாழும் நகரங்களில் முதன்மையானது மும்பை மாநகரம் ஆகும். மும்பையில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கிறார்கள் என்பதைக் கடந்து, மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய செய்தி, மும்பையில் வாழும் தமிழர்களிடையே திரைப்பட இசை மோகம் எல்லையில்லாமல் வளர்ந்திருக்கிறது என்பது தான். அவர்களுக்கு தமிழிசை குறித்த புரிதல் கூட இல்லை என்பது தான் எனக்கு பெரும் கவலையாக இருந்தது. அதனால், தமிழிசை குறித்த புரிதலை மும்பை வாழ் தமிழர்களிடம் ஏற்படுத்த வேண்டும்; திரையிசை மோகத்திலிருந்து மும்பை தமிழர்களை மீட்டு, தமிழிசை மீது பற்றையும், ஆர்வத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் மும்பையில் பொங்குதமிழ்ப் பண்ணிசைப் பெருவிழாவை நடத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
மும்பையில் தமிழிசை விழாவை நடத்தலாம் என்று தீர்மானித்த பிறகு, பரந்து விரிந்து கிடக்கும் அந்த நகரில் எந்த இடத்தில் இசைவிழாவுக்கு ஏற்பாடு செய்யலாம் என்ற வினா எழுந்தது. அப்போது மும்பையில் திருவள்ளுவர் மன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன்வாயிலாக தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர் நலனுக்கும் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த திரு.தேவதாசன் அவர்களின் பெயர் தான் நினைவுக்கு வந்தது. திரு. தேவதாசன் ஒரு காலத்தில் திமுகவில் ஈடுபாடு கொண்டிருந்தவர் என்றாலும் கூட, ஒரு கட்டத்தில் அக்கட்சியில் தீவிரமாக செயல்படாமல் விலகி ஒதுங்கி இருந்தார். தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர் நலனுக்கும் மருத்துவர் அய்யா அவர்களால் தான் உதவி செய்ய முடியும் என்பதை தமது கடைசிக் காலம் வரை பலரிடமும் தெரிவித்து வந்தவர் அவர்.
மும்பையில் பொங்கு தமிழ்ப் பண்ணிசைப் பெருவிழாவை நடத்த வேண்டும் என்ற எனது விருப்பத்தை மணிமன்றத்தின் செயலாளர் திரு. ஜி.கே.மணி அவர்கள் மூலம் திரு.தேவதாசன் அவர்களிடம் கூறிய போது, மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதுமட்டுமின்றி, மும்பை பாண்டுப் மேற்குப் பகுதியில் திருவள்ளுவர் மன்றம் சார்பில் நடத்தப்பட்டு வரும் பிரைட் மேல்நிலைப்பள்ளியில் தான் இசை விழாவை நடத்த வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டார். அவரும், அவரது புதல்வர் ஜேம்ஸ் தேவதாசனும் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், உதவிகளையும் முன்னின்று செய்து கொடுத்தார்கள். பேலஸ் துரை, ராஜா இளங்கோ ஆகியோரும் அவர்களுக்கு உதவியாக பல்வேறு பணிகளை செய்தனர்.
மத்திய அமைச்சர் சரத்பவார் தொடங்கி வைத்தார்
2005&ஆம் ஆண்டு ஏப்ரல் 9, 10 ஆகிய நாட்களில் பண்ணிசைப் பெருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பாண்டுப் பகுதியில் உள்ள பிரைட் பள்ளியில் நடைபெற்ற பண்ணிசைப் பெருவிழாவுக்கு நான் தலைமையேற்றேன். அப்போதைய மத்திய வேளாண்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திரு.சரத்பவார் அவர்கள் பொங்குதமிழ்ப் பண்ணிசைப் பெருவிழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். திரு. சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, பாண்டுப் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சய் தினா பாட்டில் ஆகியோர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். விழாவிற்கு வந்தவர்களை பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் செயலாளர் திரு.ஜி.கே.மணி வரவேற்றார். மன்றத்தின் தலைவர் ஜே.வி. கண்ணன் அவர்கள் பண்ணிசைப் பெருவிழா குறித்து விளக்கவுரையாற்றினார்.
பண்ணிசைப் பெருவிழாவின் இரு நாட்களும் ஆய்வரங்கம், இசையரங்கம் என அரங்கம் களை கட்டியது. மும்பையில் வாழும் தமிழர்கள் திரையிசை மீது மிகுந்த மோகம் கொண்டவர்கள் என்பது பலரும் அறிந்த உண்மை. ஆனால், இரு நாட்கள் நடைபெற்ற பண்ணிசைப் பெருவிழாவுக்குப் பிறகு அந்த நிலை மாறியது. ஆயிரக்கணக்கான மும்பைத் தமிழர்கள் இரு நாட்களும் இசை விழாவிற்கு வந்திருந்து தேவாரம், திருவருட்பா, நாலாயிர திவ்விய பிரபந்தம், சித்தர் பாடல்கள், திருப்புகழ், காவடிச்சிந்து, பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள் ஆகியவற்றை கேட்டு ரசித்தனர். தமிழிசையை சுவைத்ததால் அவர்களுக்கு கிடைத்த அனுபவம் அவர்களின் ரசனையை மாற்றியிருக்கும் என்பது உறுதி.
தமிழிசையை பரப்ப வேண்டும்
விழாவின் முடிவில் நிறைவுரையாற்றிய நான், தமிழ்ப் பண்ணிசையை தமிழ்நாட்டைக் கடந்து நாட்டின் அனைத்து பகுதிகளிலும், உலகின் பல நாடுகளிலும் பரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
எனது உரை விவரம்:
தமிழிசையை பரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்ட தமிழிசை இயக்கம் அறிவுசார்ந்து வெற்றி பெற்றாலும் கூட, தமிழ்நாட்டின் இசையரங்குகளில் கர்நாடக இசையே உயர்ந்தது என்ற மாயையை அசைக்க முடியவில்லை. இதற்கு முதன்மைக் காரணம் தமிழிசை இயக்கம் சமுதாயத்தின் அடித்தளம் வரை வேரோடி மக்கள் இயக்கமாக மாறத் தவறியது தான். தமிழிசை இயக்கத்தைப் பொறுத்தவரை அது தமிழ் கலாசார உலகில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. படித்த செல்வாக்குள்ள இளைஞர்களிடம் அந்த இயக்கம் பெரிய இடத்தைப் பெற்று விட்டது. அதற்காக அந்த இயக்கத்தின் நிறுவனர்களுக்கு தமிழினம் கடமைப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தப் பணி மட்டும் போதுமானதல்ல.
தமிழிசையை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்று மக்கள் சக்தி என்ற வீரியத்தைப் பாய்ச்சும் நோக்கத்துடன் தான் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் அங்கமாக பொங்கு தமிழ்ப் பண்ணிசை மணிமன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். இந்த அமைப்பின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பண்ணிசை விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இத்தகைய விழாக்களை தமிழ்நாட்டுக்கு வெளியிலும் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து அதன்படி தான் மும்பையில் இந்த விழா இப்போது நடத்தப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு வெளிநாடுகளிலும் இத்தகைய விழாக்களை நடத்த முடிவு செய்திருக்கிறோம். சுருக்கமாக கூற வேண்டுமானால் தமிழிசையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம். இது மிகப்பெரிய முயற்சியாக அமையும்.
இவ்வாறு மும்பை பண்ணிசைப் பெருவிழாவில் நான் உரையாற்றினேன்.
தமிழ்நாட்டிற்கு வெளியில் நடத்தப்பட்ட முதல் பண்ணிசைப் பெருவிழாவான மும்பை தமிழிசை விழா மக்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றதுடன், மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.
தில்லி பண்ணிசைப் பெருவிழா
மும்பையில் பண்ணிசைப் பெருவிழா சிறப்பாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து 2006&ஆம் ஆண்டில் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பொங்குதமிழ்ப் பண்ணிசை பெருவிழாக்கள் வெகு சிறப்பாக நடத்தப்பெற்றன. அவற்றைத் தொடர்ந்து 2008&ஆம் ஆண்டு பிப்ரவரி 17&ஆம் நாள் தலைநகர் தில்லியில் தமிழ்ப் பண்ணிசைப் பெருவிழா நடத்தப்பட்டது, இந்த விழாவை நடத்துவதற்கு தில்லி தமிழ்ச் சங்கம் அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கியது. தில்லி தமிழ்ச்சங்கத்தின் அப்போதைய தலைவர் திரு.எம்.என்.கிருஷ்ணமணி, பொதுச்செயலாளர் திரு.முகுந்தன், துணைத்தலைவர் திரு, சேது துரை, அனைத்திந்திய தொழிற்கூட்டமைப்பின் ஆலோசகர் திரு.ய.சு. ராஜன் ஆகியோர் பண்ணிசை விழாவுக்கான ஏற்பாடுகளை செய்வதில் பெரும் உதவி செய்ததுடன், விழாவில் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி, தமிழ்ப் பண்ணிசைப் பெருவிழாவை தில்லியில் உள்ள தமிழ்ச்சங்கக் கட்டிடத்தில் நடத்திக் கொள்வதற்கும் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கப்படவாறு 17.02.2008&ஆம் நாள் தில்லி தமிழ்ச்சங்க வளாகத்தில் நடைபெற்ற பண்ணிசைப் பெருவிழாவுக்கு நான் தலைமையேற்றேன். அப்போதைய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் பண்ணிசைப் பெருவிழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் முரளிதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
தமிழிசை மணம் கமழ்ந்த விழா
பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் செயலாளர் திரு.ஜி.கே.மணி வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்வண்டித்துறையின் முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி அவர்கள் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் மணிமன்றத்தின் தலைவர் திரு. ஜே.வி.கண்ணன் அவர்கள் அறிமுக உரையாற்றினார்கள். தில்லி தமிழ்ச்சங்கத்தின் இணை செயலாளர் திரு.இராகவன் நாயுடு, பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் துணைச் செயலாளர் திரு. அவனி மாடசாமி உள்ளிட்டோரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.
தில்லி இசைவிழாவில் திருவருட்பா பாடல்களை திரு.கோடிலிங்கம் குழுவினர் பாடினார்கள். தேவாரம் மற்றும் திருவாசகப் பாடல்களை திருத்தணி திரு.சுவாமிநாதன் அவர்கள் குழுவினரும், வரிப்பாடல்கள் மற்றும் சித்தர்ப் பாடல்களை பேராசிரியர் மா. வைத்தியலிங்கம் குழுவினரும், நாலாயிர திவ்விய பிரபந்தப் பாடல்களை திருநிறை. பத்மா கிருஷ்ணசாமி அவர்கள் குழுவினரும், நம்மாழ்வார் பாசுரம் மற்றும் நாச்சியார் திருமொழிப் பாடல்களை திருநிறை. அகிலா சேசாத்திரி அவர்களும், திருப்புகழ் மற்றும் காவடிச்சிந்து பாடல்களை ஐதராபாத் திரு.சிவா அவர்களும், சீர்காழி மூவர் பாடல்களை திருப்பாம்புரம் சோ.சண்முகசுந்தரம் அவர்களும் பக்திமணமும், தமிழிசையும் கமழ பாடினார்கள்.
நாகூர் திரு.எம்.எம்.யூசுப் குழுவினர் இஸ்லாமியப் பாடல்களையும், திருநிறை.சங்கரி கிருட்டிணன் குழுவினர் பாரதியார் மற்றும் பாரதிதாசன் பாடல்களையும், பாடினார்கள். கிறித்தவப் பாடல்களை முனைவர் மார்கரெட் பாஸ்டின் குழுவினர் பாடினார்கள். பண்ணிசை விழா வெகு சிறப்பாக அமைந்திருந்தது.
விழாவின் முடிவில் நிறைவுரை நிகழ்த்திய நான், ‘‘ஒன்றாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை தமிழ் இசையை ஒரு கட்டாய பாடமாக வைக்கவேண்டும். இதற்கு 100 மதிப்பெண்கள் கொடுக்கவேண்டும். சபாக்களில் தமிழ் இசை இடம்பெறாது. எனவே அரசு சார்பில் இசையை வளர்க்க அரங்குகள் கட்டவேண்டும். தமிழ்நாட்டில் நாதஸ்வர கலைஞர்கள் 1000 பேர் இருந்தாலும் கூட அத்தனை கலைஞர்களையும் ஒரே அரங்கத்திற்கு வரவழைத்து நாதஸ்வரம் வாசிக்க சொல்ல வேண்டும் என்பது எனது ஆசை’’ என்று தெரிவித்தேன். அத்துடன் தில்லி விழா நிறைவடைந்தது.
நாளை....
நம்மாழ்வாருக்கு பாசுர ஆராதனை!
********
No comments:
Post a Comment