பொதுப் பள்ளி முறை என்றால் என்ன? - மருத்துவர் இராமதாசு அய்யா விளக்கம்.
கோத்தாரி ஆணையத்தின் மூன்று முக்கியப் பரிந்துரைகளில் இரண்டாவது முக்கியமான பரிந்துரை பொதுப்பள்ளி முறை (Common School System) ஆகும். முதலாவது பரிந்துரையான அருகமைப் பள்ளி முறை குறித்து நேற்றைய முகநூல் பதிவில் விளக்கியிருந்தேன். இன்று பொதுப்பள்ளி முறை குறித்து உங்களுக்கு விளக்குகிறேன்.
பொதுப்பள்ளி முறை என்றால் என்ன?
அம்பானி வீட்டு குழந்தைகளுக்கு அளிக்கப்படும் அதே தரத்திலான கல்வி சாதாரண குப்பன், சுப்பன் வீட்டு குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தொடக்கம் முதலே கூறி வருகிறேன். அம்பானி வீட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் அதே தரத்திலான கல்வி சாதாரண மக்களுக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்யும் கல்வி முறைக்கு தான் பொதுப்பள்ளி முறை என்று பெயர்.
எந்த ஒரு குழந்தைக்கும் அதன் சமூக அல்லது பொருளாதார சூழலை காரணம் காட்டி கல்வி வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்பது தான் பொதுப்பள்ளி முறையின் நோக்கம் ஆகும். அவ்வாறு பள்ளியில் சேர்க்கப்பட்ட அனைத்து குழந்தைகளின் தனிப்பட்ட திறன்களை வளர்ப்பதில் ஒவ்வொரு குழந்தைக்கும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் இம்முறையில் அடுத்த நோக்கமாகும்.
பொதுப்பள்ளி முறையில் இன்னொன்றை குறிப்பிட்டு சொல்லியாக வேண்டும். பொதுப்பள்ளி முறையில் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்படுவதில்லை... மாறாக சமத்துவமான கல்வி வழங்கப்படுகிறது. சில மாணவர்கள் நன்றாக படிப்பார்கள். இன்னும் சில மாணவர்களுக்கு அவ்வளவு சரியாக படிப்பு வராது. அத்தகைய மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்பது தான் கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ள கருத்துரை ஆகும்.
இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் விதவிதமான கல்வி முறைகள் உள்ளன. முதலில் மாநிலப் பாடத் திட்டத்தைப் பார்ப்போம். மாநில அரசின் பாடத்திட்டத்தில் தமிழ்வழி மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ & இந்தியன், ஓரியண்டல் ஆகிய 4 வகைகள் உள்ளன. நான் போராடி அறிமுகப்படுத்த வைத்த சமச்சீர் கல்வி முறை வந்த பின்னர் இந்த 4 முறைகளையும் ஒன்றாக்கி சமச்சீர்கல்விமுறை என்ற ஒரே பாடத்திட்டம் தான் நடைமுறையில் இருக்க வேண்டும். அப்போது அரசு பள்ளிகள், கான்வெண்ட் என்ற வேறுபாடு இருக்காது என்பதால், தனியார் பள்ளிகள் தங்களை உயர்ந்தவையாக காட்டிக் கொண்டு பணம் பறிக்க முடியாது என்பதால், தங்களை மெட்ரிக் பள்ளிகள் என்றே அழைத்துக் கொள்கின்றன. நான்கு வகையான பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடம் தான் சொல்லித் தரப்படுகிறது என்றாலும் கூட, நான்குக்கும் நான்கு வகையான பாடத் திட்ட பெயர்கள் இன்னும் தொடர்கிறது.
இவை தவிர மத்திய அரசின் கல்வித் திட்டமான சி.பி.எஸ்.இ., பன்னாட்டு பாடத்திட்டங்களான சி.ஐ.எஸ்.சி.இ (Council for the Indian School Certificate Examinations), ஐ.எஸ்.சி (Indian School Certificate) என பல பாடத் திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடத்திட்டத்தை படிப்பவர்களும் சமுதாயத்தின் ஒவ்வொரு படிநிலையில் இருப்பவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். இது சமத்துவத் தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.
இப்படி பல்வேறு வகையான கல்வி முறைகள் இருப்பதால் தான் கல்வி வணிகமயமாகிறது. தமிழகத்தின் சாதாரண நகரங்களில் கூட சி.பி.எஸ்.இ பள்ளி என்று பெயரில் புதுப்புது பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. இந்த பள்ளிகள் குறித்து விளம்பரப்படுத்தப்பட்டு, அதைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் பள்ளி பேருந்துகள் அனுப்பப்பட்டு, மாணவர்கள் அள்ளிவரப்பட்டு பள்ளிகளில் குவிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மாணவருக்கு ரூ.80,000 வரை கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அத்தகைய பள்ளிகளில் கேந்திரிய வித்யாலயாக்களில் கற்பிக்கப்படும் கல்வியின் தரத்தில் பத்தில் ஒரு பங்கு தரத்திலான கல்வி கூட வழங்கப்படுவதில்லை. கல்வி வளராமல் போனதற்கு இது தான் காரணமாகும்.
இந்த நிலை மாற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ முறைக்கு இணையான, தரமான கல்வி வழங்கப்பட வேண்டும். அதற்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும். மத்திய கல்வி வாரியம், மாநில கல்வி வாரியம் என பல வாரியங்கள் கூடாது. மாநில அரசின் ஆளுகையில் ஒரே கல்வி வாரியம் தான் இருக்க வேண்டும். பொதுப்பள்ளி முறையில் அனைவருக்கும் சமத்துவமான கல்வி வழங்கப்பட வேண்டும்; அதற்கு வசதியாக கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும்.
இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று கோத்தாரி ஆணையம் முன்பே கணித்திருந்ததால் தான் 1967-ஆம் ஆண்டில் தாக்கல் செய்த அதன் பரிந்துரை அறிக்கையில் அருகமை பள்ளி முறையோடு சேர்த்து பொதுப்பள்ளி முறையும் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. அதன்பின் 1986-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது கல்வி ஆணையத்தின் அறிக்கை, அதை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆச்சார்ய இராமமூர்த்தி குழு அறிக்கை ஆகியவற்றிலும் பொதுப்பள்ளி முறையை அறிமுகம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த ஆணையங்கள் அனைத்தும் பொதுப்பள்ளி முறை பற்றி வலியுறுத்தி இருந்தாலும் இது தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் கனவு ஆகும். 1937&ஆம் ஆண்டிலேயே மகாத்மா காந்தியடிகள் பொதுப்பள்ளி முறை பற்றி கூறியிருக்கிறார். இதற்கான குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதற்காக நான் போராடி வருகிறேன். ஆனால், பொதுப்பள்ளி முறை என்பது தொடுவானமாகவே இருந்து வருகிறது. இது பெரும் ஏமாற்றம் தான்.
மத்திய, மாநில அரசுகளில் கொள்கை வகுக்கும் அதிகாரிகளுக்கு பொதுப்பள்ளி முறையில் விருப்பம் இல்லை. ஒரு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தால் கூட, பெரும்பான்மையான அதிகாரிகள் தங்களின் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட உயர்வான பிரபலமான பள்ளிகளில் பயில வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால், சாதாரண குழந்தைகள் பயிலும் பள்ளிகளை விட, உயர்ந்த பள்ளிகள் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இந்த சூழல் நிலவும் வரை இந்தியாவில் பொதுப்பள்ளி முறை வருவதற்கு வாய்ப்புகள் கிடையாது.
ஆனால், காலம் ஒரு நாள் மாறும்.... அப்போது பொதுப்பள்ளி முறை நிச்சயம் மலரும். இது உறுதி!
*************
No comments:
Post a Comment