பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கை காவிரி - கோதாவரி இணைப்போம்... உழவர்கள் கண்ணீரைத் துடைப்போம்!! - மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.
இந்தியாவின் வரைபடத்தில் கடைசியாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். அனைத்து வழிகளிலும் தமிழ்நாடு கடைமடைப் பாசனப் பகுதியாக இருப்பதால், விவசாயத்திற்காக மழைநீரையும், மற்ற மாநிலங்கள் விடுவிக்கும் ஆற்றுநீரையும் மட்டுமே தமிழ்நாடு நம்பியிருக்க வேண்டியுள்ளது. மற்றொருபுறம் தமிழ்நாட்டிற்குப் பருவமழை மூலமாகக் கிடைக்கும் நீரைச் சேமித்து வைப்பதற்கான கட்டமைப்புகள் இல்லை.
இதன் காரணமாகத் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வேளாண் நிலப்பரப்பில், பாதிக்கும் குறைவான நிலங்களுக்கு மட்டும் தான் நீர்ப்பாசன வசதி கிடைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வேளாண் நிலங்களுக்கும் பாசன வசதி செய்து தரப்பட்டால், தமிழ்நாடு வேளாண்மையில் முதலிடத்தைப் பிடித்துவிடும். தமிழகத்தின் பாசனப் பரப்பை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காகப் பாட்டாளி மக்கள் கட்சி அரிய கருத்துக்களைத் தமிழக அரசுக்கு வழங்கி வருகிறது. அவற்றில் பல திட்டங்களுக்கு அரசு செயல்வடிவம் கொடுத்திருக்கிறது. இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சியால் முன்மொழியப்பட்டு, மத்திய & மாநில அரசுகளால் செயல்வடிவம் கொடுக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள் வருமாறு:
=========================================
பாட்டாளி மக்கள் கட்சியால் நிறைவேறிய திட்டங்கள்
1. காவிரி மேலாண்மை ஆணையம் நீண்ட இழுபறிக்குப் பின் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, இப்போது செயல்பாட்டில் உள்ளது. இதனால், கடந்த 3 ஆண்டுகளாகக் காவிரிப் பிரச்சனை எழவில்லை.
2. அத்திக்கடவு - அவினாசித் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இத்திட்டம் உழவர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்படும்.
3. மேட்டூர் அணை உபரிநீர்த் திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
========================================
தமிழ்நாட்டில் பாசன வசதிகளையும், பாசனப் பரப்பையும் அதிகரிப்பதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் திட்டங்கள் வருமாறு:
காவிரி - கோதாவரி ஆறுகள் இணைப்புத் திட்டத்தை இறுதி செய்து, அதற்கான கட்டுமானப் பணிகளை அடுத்த ஓராண்டிற்குள் தொடங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்காகப் புதிய அரசு பதவியேற்றவுடன், தமிழக முதலமைச்சர் தில்லி சென்று பிரதமர் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார். அதேபோல், இத்திட்டத்தில் தொடர்புடைய மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்துப் பேசத் தமிழக அமைச்சர்கள் குழு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.
தமிழ்நாட்டில் ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 20க்கும் மேற்பட்ட பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நீர்ப்பாசனப் பெருந்திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தும்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டக் கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பா.ம.க. வலியுறுத்தும்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்த பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசும், காவிரியின் துணை ஆறுகளின் குறுக்கே கேரள அரசும் தடுப்பணைகள் கட்டுவதை மத்திய அரசின் மூலமாக பா.ம.க. தடுத்து நிறுத்தும்.
நீர்ப்பாசனத் திட்டங்கள்
கோவை, திருப்பூர் மாவட்டங்கள் பயன்பாட்டுக்கான பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறியப்படும்.
விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் நந்தன் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்படும். நந்தன் கால்வாயைத் தென்பெண்ணை ஆற்றுடன் இணைக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் என்னேகொல்புதூர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படேதலா கால்வாய்த் திட்டம், பாலே குழி பாசனத்திட்டம் செயல்படுத்தப்படும்.
சேலம் மாவட்டத்தில் தோனி மடுவு பாசனத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் பயனடையும் வகையில் வைகை ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்படும்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும்.
தமிழகத்தில் தூர்ந்து போன, ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள் கண்டறியப்பட்டுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.
வீராணம் ஏரி, பொன்னேரி, ஆர்.எஸ்.மங்கலம் ஏரி உள்ளிட்ட தமிழகத்தின் பெரிய ஏரிகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, அவற்றின் முழுக் கொள்ளளவு எட்டப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்து அந்தந்த மாவட்ட உழவர் சங்கங்களுடன் கலந்தாய்வு நடத்தி முடிவெடுக்கப்படும்.
தமிழகத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டம் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
No comments:
Post a Comment