மகளிருக்கு அனைத்து உரிமைகளையும்வென்றெடுக்க உறுதியேற்க வேண்டும்! - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
பெண்களின் பெருமையையும், தியாகத்தையும் போற்றும் வகையில் உலக மகளிர் நாள் கொண்டாடப்படும் நிலையில், உலகெங்கும் வாழும் மகளிருக்கு உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் எங்குமே பெண்கள் பலவீனமானவர்கள் என்ற பொய்யான நம்பிக்கை நிலவி வருகிறது. ஆண்களைவிட பெண்களுக்குத் தான் போர்க்குணம் அதிகம் ஆகும். ஆண்கள் வென்று விட்டதாக பெருமிதப்பட்டுக் கொண்டாலும், அவர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பது பெண்கள் தான். சங்க காலத்திலிருந்து நிகழ்காலம் வரை இதற்கு ஏராளமான நாயகியரை உதாரணமாகக் கூற முடியும்.
உலகிலேயே மகளிருக்கு மிக அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். பெண்களை கடவுளுக்கும் மேலாக வைத்து வழிபடும் சமுதாயமும் தமிழ்ச் சமுதாயம் தான். மனித நாகரிகங்கள் வளரக் காரணமாகவும், வாழ்வாதாரம் மற்றும் பாசன ஆதாரமாகவும் திகழும் நதிகளுக்குக் கூட பெண்களின் பெயரை சூட்டியதிலிருந்தே மகளிரை தமிழ் சமுதாயம் எந்த அளவுக்கு மதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். இவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருக்கும் பெண்களை கல்வி, அரசியல், சமுதாயம், வேலை உள்ளிட்ட எல்லா நிலைகளிலும் உயர்த்த வேண்டியது அவசியமாகும்.
அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் பணி வழங்கப்பட வேண்டும். இதற்காக அனைத்து நிலைகளிலும் பாலின நீதியை நடைமுறைப்படுத்த வேண்டும். சமூக அடிப்படையிலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் முன்னேற்ற இடஒதுக்கீடு என்ற சமூக நீதி வழங்கப்படுவதைப் போல, பாலின அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மகளிரை முன்னேற்ற இட ஒதுக்கீடு என்ற பாலின நீதி வழங்கப்பட வேண்டும்.
மகளிருக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். மகளிருக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் பட்சத்தில் அவர்களின் முன்னேற்றத்தை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இதை உணர்ந்து மகளிருக்கு அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக உழைப்பதற்கு இந்நாளில் உறுதியேற்க வேண்டும்.
No comments:
Post a Comment