பா.ம.க. தேர்தல் அறிக்கை
அனைவருக்கும் இலவசக் கல்வி....
அதுவும் உலகத்தரம் வாய்ந்த கல்வி! - மருத்துவர் இராமதாசு அய்யா.
உலகில் அழியாத செல்வம் கல்விதான் என்கிறார் திருவள்ளுவர். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யாவின் நிலைப்பாடும் அதுதான். ஒரு மனிதனுக்கு வழங்கப்படும் கல்விதான் அவனை வாழ்க்கையில் உயர்த்துகிறது; அதனால் கல்விக்காக மிகப்பெரிய அளவில் மத்திய - மாநில அரசுகள் முதலீடு செய்ய வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி எத்தகைய தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்; எந்த அளவுக்குத் தரம் உள்ளதாக இருக்கவேண்டும் என்பது குறித்த இலக்கணங்களையும் மருத்துவர் அய்யா அவர்கள் வகுத்திருக்கிறார். கல்வி என்பது சுகமானதாகவும், சுமையற்றதாகவும், கற்றல் மற்றும் அதைச் சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதாகவும், விளையாட்டு மற்றும் தொழிற்பயிற்சியை ஓர் அங்கமாகக் கொண்டதாகவும் அமைய வேண்டும் என்பது தான் அவரது விருப்பம் ஆகும். இது இலவசமாகவும், கட்டாயமாகவும் வழங்கப்படவேண்டும். அதுமட்டுமின்றி, ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவதற்கான கல்வி ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும் வகையில் இருக்கக்கூடாது. இதற்காகத் தான் அம்பானி போன்ற பணக்காரர்களின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் அதே தரத்திலான கல்வி அடித்தட்டுக் குடிமக்களின் குழந்தைகளுக்கும் இலவசமாகக் கிடைக்க வகை செய்ய வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், கல்வியில் போதிய முதலீடு செய்யப்படவில்லை என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை ஆ-கும். ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 6% கல்விக்குச் செலவிடப்பட வேண்டும். 2019 &20ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ.18.45 இலட்சம் கோடி ஆகும். 2021-22ஆம் ஆண்டில் இது ரூ.20 இலட்சம் கோடியாக உயர்ந்திருக்கக் கூடும். அப்படியானால், தமிழ்நாட்டில் கல்விக்காக நடப்பாண்டில் ரூ.1.2 இலட்சம் கோடி செலவிடப்பட வேண்டும். ஆனால், 2020-21ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக வழங்கப் போதுமானது அல்ல. இந்த நிலையை மாற்றிப் பள்ளிக்கல்விக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்.
==========================================
பாட்டாளி மக்கள் கட்சியால் நிறைவேறிய திட்டங்கள்
தமிழ்நாட்டில் கல்வித்தரத்தை வலுப்படுத்த பாட்டாளி மக்கள் கட்சி முன்மொழிந்த பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில முக்கிய திட்டங்கள் வருமாறு:
தமிழ்நாட்டில் கல்வித்தரத்தை வலுப்படுத்துவதற்காக வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, புதிய கல்வித் திட்டமும், பாடத்திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழகத்தில் கல்வித்தரம் உயர்ந்திருக்கிறது.
மாணவர்களின் புத்தகச் சுமை குறைக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு ஆகியவற்றுக்கான பயிற்சி வகுப்புகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழக அரசால் இலவசமாக நடத்தப்படுகின்றன.
===========================================
பள்ளிக் கல்வித் துறைக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்திட்டங்கள்
மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும். அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பையும், கல்வித் தரத்தையும் வலுப்படுத்துவதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளுக்கு மாறும் சூழலை உருவாக்க வேண்டும் என்பது தான் அரசின் இலக்கு ஆகும்.
தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு மாணவருக்கு, ஓராண்டுக்குக் கல்வி வழங்க ரூ.32,000 செலவிடப்படுகிறது. கல்வித் தரத்தை வலுப்படுத்தும் நோக்குடன் இத்தொகையை ரூ.40 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிக் கல்விக்கான தமிழக அரசின் செலவு மட்டும், மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 4 விழுக்காடாக, அதாவது ஆண்டுக்கு ரூ.80,000 கோடி என்ற அளவில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களுக்கு நிதியுதவி
இடைநிற்றலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாணவர்களுக்குச் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தும். அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.500 வீதமும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதமும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டு முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம், தேர்வுமுறை கடைப்பிடிக்கப்படும்.
தர இயக்குநர்கள் நியமனம்
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாகத் தமிழக அரசின் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். மாணவர்களுக்கான தனிநபர் கல்விச் செலவு உயர்த்தப்படும். பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளித் தர இயக்குநர் நியமிக்கப்படுவார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய தனித்தனி குழுக்கள் அமைக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீட்டைக் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ் வழிக் கல்வி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தவும், ஆங்கிலத்தில் பேசும் திறனை ஏற்படுத்தவும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும்.
ஆறாம் வகுப்பு முதல் மின்னணுப் புத்தகப்பை முறை அறிமுகப்படுத்தப்படும். அதன்படி, அனைத்து மாணவர்களுக்கும் கையடக்கக் கணினிகள் வழங்கப்பட்டு, அதில் ஒவ்வொரு வகுப்புக்குமான பாடங்கள் தொகுத்து வழங்கப்படும். வீட்டுப் பாடங்களையும் அதிலேயே செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம் ஆறாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் புத்தகம் சுமந்துசெல்லத் தேவையில்லை என்ற நிலை ஏற்படுத்தப்படும்.
மாணவர்கள் பள்ளிகளுக்கு எளிதாகச் சென்று வர வசதியாக, ‘மாணவர்கள் மட்டும்’ பேருந்துகள் இயக்கப்படும்.
தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக 9-ஆம் வகுப்பிலிருந்தே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
தொடக்கப்பள்ளிகளில் குறைந்தது 5 வகுப்பறைகளும், 5 ஆசிரியர்களும் இருக்கும் நிலை உருவாக்கப்படும். ஊரகப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தரமான ஆசிரியர்களே உலகத்தரமான கல்வியை வழங்குவர்
ஆசிரியர்களின் தேவை முன்கூட்டியே கணக்கிடப்பட்டு, காலியிடங்கள் ஏற்படுவதற்கு முன்பே அவற்றை நிரப்புவதற்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு விடுவார்கள்.
ஆசிரியர்கள் தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். உரிய சட்டத்திருத்தங்களின் மூலம் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தரமான ஆசிரியர்களால் தான் உலகத் தரம் வாய்ந்த கல்வி வழங்க முடியும் என்பதால் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்த அவர்களுக்குச் சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணியாற்றும் கணிணி ஆசிரியர்களும், பிற சிறப்பு ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்.
பள்ளிகளில் திறன் சார் கல்வி, அறிவுசார் கல்விமுறை, தொழில்கல்வி ஆகிய கல்வி முறைகள் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி 11 ஆம் ஆண்டில் வழக்கமான பாடங்களுடன் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிப் பாடம் கூடுதலாகச் சேர்க்கப்படும். அது மாணவர்கள் படிக்கும் விருப்பப்பாடம் சார்ந்ததாக இருக்கும்.
பள்ளிகளில் வாரப் பாட வேளைகளின் எண்ணிக்கை 35 ஆகக் குறைக்கப்படும்.
வாரத்திற்கு 5 பாட வேளைகள் விளையாட்டிற்கும், 3 பாட வேளைகள் தொழில் பயிற்சிக்கும், இரு பாட வேளைகள் நீதி போதனைக்கும் ஒதுக்கப்படுவது கட்டாயமாக்கப்படும். யோகா பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ ஆய்வு நடத்தப்படும். இதற்காக, மாணவர்களுக்கு மருத்துவ ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்களாக மாற்றப்படும். பள்ளியின் தேவைகள் தொடர்பான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்படும்.
கல்வி தொடர்பாக மாணவர்களுக்குத் தேவைப்படும் பேனா முதல் இலவசப் பேருந்து அட்டை, மிதிவண்டிகள் மற்றும் கையடக்கக் கணினி வரை அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும். கையடக்கக் கணினிக்கு இணைய இணைப்பும் இலவசமாக வழங்கப்படும்.
No comments:
Post a Comment