கொண்டாட்டங்களின் நாளான சித்திரைத் திருநாள் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கட்டும்! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் வாழ்த்துச் செய்தி - Agnipuratchi

கொண்டாட்டங்களின் நாளான சித்திரைத் திருநாள் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கட்டும்! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் வாழ்த்துச் செய்தி

Share This

கொண்டாட்டங்களின் நாளான சித்திரைத் திருநாள் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கட்டும்! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் வாழ்த்துச் செய்தி

மக்களின் கொண்டாட்டங்களுக்கு வழிவகுக்கும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சித்திரை மாதம் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் மாதம் ஆகும். காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும்  என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை முழுநிலவு நாளில் தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவர். சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரைத் திருநாள் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாகும்.

சித்திரைத் திருநாள் என்றாலே மக்கள் பொது இடங்களில் கூடி மகிழ்வதும், கொண்டாடுவதும் தான்.  கோடை வெயிலின் கடுமையை மாலை வேளைகளில் கடற்கரைகள், ஆற்றங்கரைகள், பூங்காக்கள் போன்ற காற்றோட்டம் நிறைந்த இடங்களில் கூடுதல், அறுவடைக்குப் பிறகு மக்களின் கைகளில் பணம் இருக்கும்  என்பதால் அதை வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடுதல் ஆகியவை தான் சித்திரையின் அடையாளங்கள் ஆகும். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இரண்டாவது ஆண்டாக சித்திரைத் திருநாளை பொதுமக்கள் ஒன்று கூடி உற்சாகத்துடன் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் கடந்த ஆண்டில் நீர்வளம் நிறைந்து தமிழகத்தில் விவசாயம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. உள்ளூர் ஏரி, குளங்களில் தொடங்கி மேட்டூர் அணை வரை அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிவதால் இந்த ஆண்டும் உழவுத் தொழில் சிறப்பாகவே நடைபெறும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் நிலவுகிறது. அந்த நம்பிக்கை நிறைவேறும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நலமும், வளமும்  கிடைக்க வேண்டும். அனைத்து மக்களின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறைய வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க இந்த சித்திரைத் திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages