கொரோனா வைரசுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான ஆபத்தான பந்தயத்தில் மனிதர்கள் வெற்றி பெற வேண்டும். எப்படி? - மருத்துவர் இராமதாசு அய்யா
கொரோனா தொற்றை தடுக்கும் மனிதர்களின் வேகமும் கொரோனா வைரசின் உருமாற்ற வேகமும் ஒன்றுக்கொன்று ஓட்டப்பந்தயமாக தொடர்கிறது. இந்த பந்தயத்தில் மனிதர்கள் தோற்றுவிடக் கூடாது.
கொரோனா வைரஸ் மிக வேகமாக உருமாற்றம் பெருகிறது. அதிவேகமாக பரவும் ஆற்றல், குழந்தைகளை அதிகமாக பாதித்தல், தடுப்பூசியால் உருவாகும் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றுதல் ஆகிய தன்மைகளுடன் புதிய திரிபுகள் உருவானால், கற்பனைக் கெட்டாத கேடுகள் நிகழக் கூடும்.
கொரோனா வைரஸ் தொற்றும் ஒரு மனிதரிடமிருந்து, இன்னொரு மனிதருக்கு பரவாமல் தடுப்பது ஒன்றுதான் புதிய திரிபு உருவாகாமல் தடுப்பதற்கான வழி ஆகும். அதற்கான முதல் தேவை எல்லோருக்கும் தடுப்பூசி போடுவது தான். இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஒவ்வொருவரும், கொரோனா புதிய உருமாற்றம் அடைவதை தடுக்கும் ஒரு போர் வீரர் ஆகிறார்.
தடுப்பூசிக்கு அடுத்ததாக, பொது முடக்கத்தை தீவிரமாக நடைமுறை படுத்துதல், முகக்கவசத்தை முழு அளவில் கட்டாயப்படுத்துதல், கொரோனா பரிசோதனைகளை அதிகமாக்குதல், கொரோனா தொற்றியவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டறிதல், தவிர்க்க இயலாமல் வெளியிடங்களுக்கு செல்வோர் சமூக இடைவெளியை முழுமையாக பின்பற்றுதல் ஆகிய நடைமுறைகள் மிக மிக அவசியமாகும்.
மேலும், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் அரசாங்கம் ஓரளவுக்கேனும் நிதி உதவி அளிக்க வேண்டும்.
மூன்றாம் அலை உருவாகாமல் தடுக்க, கொரோனா வைரஸ் மரபணுவில் திரிபு ஏற்படுவதை தீவிரமாக கண்காணிப்பது மிகவும் முக்கியமானதாகும். மொத்த கொரோனா தொற்றாளர் மாதிரிகளில், 5% மாதிரிகளை மரபணு தொடரை வரிசைப்படுத்துதலுக்கு (genome sequencing) உட்படுத்த வேண்டும் என்கிறது உலக சுகாதார அமைப்பு. ஆனால், இந்தியாவில் இது 0.05% அளவுதான் நடப்பதாக கூறப்படுகிறது. இப்பணிகளை மத்திய அரசு பன்மடங்கு அதிகமாக்க வேண்டும்.
மொத்தத்தில், கொரோனா வைரஸ் மீண்டும் புதிய வடிவம் எடுத்து, தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கக் கூடிய நிலை வந்துவிடக் கூடாது என்கிற அவசர நிலையில் நாம் இருக்கிறோம். இந்த பேராபத்தை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். எல்லோரும் ஒரு திசையில் செயல்பட்டு கொரோனா வைரசுக்கும் மனிதர்களுக்குமான பந்தயத்தில், மனிதர்கள் வெற்றி அடைய வேண்டும்.
No comments:
Post a Comment