சுக்கா... மிளகா... சமூகநீதி?
15. 27% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு! - மருத்துவர் இராமதாசு அய்யா
27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு என்ற தலைப்பே சிலருக்கு வித்தியாசமாகப் படலாம். சமூகநீதி குறித்து புரிதலை ஏற்படுத்துவதற்காக எழுதப்பட்டு வரும் இந்தத் தொடரின் சில இடங்களில் இட ஒதுக்கீடு என்று அய்யா குறிப்பிடுகிறார்.... சில இடங்களில் இடப்பங்கீடு என்ற புதிய வார்த்தையைப் அவர் பயன்படுத்துகிறார்... இப்போது உள் ஒதுக்கீடு என்று கூறுகிறார் என்ற எண்ணம் இந்தத் தொடரைப் படிப்பவர்களுக்கு ஏற்படுவது இயல்பே.
அவை குறித்து சுருக்கமாக விளக்கி விட்டு அடுத்தக்கட்டத்திற்கு செல்கிறேன்.
இட ஒதுக்கீடு என்பது ஒரு வகுப்பின் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தால் வழங்கப்படுவது ஆகும். அத்தகைய இட ஒதுக்கீடு என்பது சம்பந்தப்பட்ட வகுப்பு நடத்திய போராட்டங்களின் பயனாக அரசால் வழங்கப்பட்டிருக்கலாம். அது அப்போதைக்கு அந்த வகுப்பு மக்களை சமாதானப்படுத்தும் நோக்குடன் செய்யப்பட்ட ஏற்பாடாக இருக்குமே தவிர முழுமையான சாதிவாரி பிரதிநிதித்துவமாக இருக்காது. அந்த இட ஒதுக்கீட்டின் அளவை மக்களோ, மக்கள்தொகையில் ஒரு சமூகத்திற்குரிய பிரதிநிதித்துவமோ தீர்மானிப்பதில்லை. மாறாக, அரசே அதன் விருப்பத்திற்கு ஏற்பவும், அரசியல் கணக்குகளுக்காகவும் தீர்மானிக்கிறது. ஏதோ ஒரு வகையில் ஒரு சமூகத்திற்கு அல்லது ஒரு வகுப்புக்கு சிறிய அளவில் இடங்களை அரசாங்கம் ஒதுக்கித் தருவதால் அது இட ஒதுக்கீடு ஆகும். இந்திய அளவில் இப்போது உள்ள 49.5% இட ஒதுக்கீடு, தமிழக அளவில் தற்போதுள்ள 69% இட ஒதுக்கீடு ஆகியவை இட ஒதுக்கீடுகள் ஆகும்.
இடப்பங்கீடு என்பது தான் முழுமையான வகுப்புவாரி/சாதிவாரி பிரதிநிதித்துவம் ஆகும். 100 விழுக்காடு இடங்களை ஒவ்வொரு சமூகத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப, விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்து கொள்வது தான் இடப்பங்கீடு ஆகும். இந்தியா விடுதலை அடைவதற்கு முன் நீதிக்கட்சி ஆட்சியில் 1921-ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டு, 1927-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட கம்யூனல் ஜி.ஓ. அடிப்படையில் வழங்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தான் இடப்பங்கீடு ஆகும். அப்போது 100% இடங்களும் 5 பிரிவுகளாக பிரித்து வழங்கப்பட்டன. பின்னாளில் ஓமந்தூரார் ஆட்சியில் இது 6 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. இது ஒவ்வொரு சமூகத்திற்கும் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்து அளிக்கப்படவில்லை என்றாலும் கூட, அனைத்து இடங்களும் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டதால் இதுவும் இடப்பங்கீடு தான்.
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் மக்கள்தொகையில் ஒவ்வொரு சமுதாயமும் எத்தனை விழுக்காடு உள்ளனவோ, அத்தனைக் விழுக்காடு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். அது தான் முழுமையான இடப்பங்கீடாக அமையும்.
அடுத்து உள் ஒதுக்கீட்டுக்கு வருவோம்....
இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால் உள் ஒதுக்கீடு என்ற கோட்பாட்டிற்கு தேவை இருக்காது.
ஆனால், இந்தியாவில் பெரும்பாலும் இடஒதுக்கீடு கோட்பாடு தான் நடைமுறையில் உள்ளது என்பதால் உள் ஒதுக்கீடு தேவைப்படுகிறது.
ஒரு முகாமில் 50 மனிதர்களை தங்க வைத்திருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு தட்டு உணவு என்று கணக்கிட்டு, 50 தட்டு உணவை மொத்தமாக அந்த முகாமுக்குள் அனுப்பும் போது, அங்குள்ள 50 பேரில் வலிமை படைத்த பலர் தங்களுக்கு 2 தட்டு உணவையோ, 3 தட்டு உணவையோ எடுத்துக் கொள்ளக் கூடும். அவ்வாறு எடுத்துக் கொள்ளும் போது வலிமையில்லாத மனிதர்களுக்கு உணவு கிடைக்காது. அதே நிலை நீடித்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வலிமையில்லாத அந்த மனிதர்கள் பட்டினியில் வாடி உயிரிழக்க நேரிடும். அது மிகவும் சோகமானதாகும்.
மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசு, முகாமில் உள்ள 50 பேருக்கும் 50 தட்டுகள் உணவு வழங்கி விட்டோம் என்பதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைத்து கண்களை மூடிக் கொள்ளக் கூடாது. மாறாக, அவ்வப்போது ஆய்வுகளை நடத்தி, அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நலிவடைந்த நிலையில் உணவு கிடைப்பதற்கே வழியில்லாத நிலையில் 5 பேர் இருப்பதாகக் கொண்டால், அவர்கள் ஐவரையும் தனியாக பிரித்து, இன்னொரு அறையில் தங்க வைத்து அவர்களுக்கு 5 தட்டுகள் உணவை தனியாக வழங்க வேண்டும். அதற்கான ஏற்பாட்டைத் தான் உள் ஒதுக்கீடு என்று கூறுகிறோம்.
1921-ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்டு, 1927-ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப் பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவ இடப்பங்கீடு விகிதாச்சார அடிப்படையிலான அல்ல என்று முந்தைய பத்திகளில் நான் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதை 1925-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதியே தந்தை பெரியாரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதை முழுமையான விகிதாச்சார பிரதிநிதித்துவமாக மாற்ற வேண்டும் என்றால் உள் ஒதுக்கீடு தான் தீர்வு என்கிறார் தந்தை பெரியார்....
‘‘ இந்தப் பிற்பட்ட வகுப்பார் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இல்லாமல் வேறு எந்த வழியில் முற்பட்டவர்கள் ஆகக் கூடும்? இப்போது அவர்களுக்கு புத்தியில்லையா? சக்தியில்லையா? கல்வியில்லையா?
ஏன் தங்கள் தொகைக்குத் தகுந்த உரிமை அடையாதிருக்கிறார்கள்?
இந்தியர்கள் அநேக சாதியார்கள்; நாள் போகப் போக உரிமை வளர்ந்து கொண்டே போகும்; பிறகு எத்தனை பேருக்குக் கொடுப்பது? என்று சிலர் பேசுவார்கள்.
ஆனால், தற்காலம் அரசாங்கத்தில் தென்னாட்டில் அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், கிறித்தவர், முகமதியர், பிராமணர், பிராமணர் அல்லாதார், தீண்டாதார் என 7 வகையாகத் தான் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், கிறித்தவர், முகமதியர் இவர்களுக்கு பிரித்துக் கொடுத்தாய் விட்டது. இவர் நீங்கிய மற்றவர்களான பிராமணர், பிராமணர் அல்லாதார், தீண்டாதார் என 3 வகுப்பாரையும் முகமதியர் அல்லாதார் என்னும் பெயரால் அழைக்கப்பட்டு அவர்களுக்கு மாத்திரம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் இருக்கிறது. இம்மூன்று வகுப்பாருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்ட பிறகு மறுபடியும் உள்வகுப்புகள் ஏற்படுமே என்ற பயமிருக்குமானால் அதற்கும் நாம் தயாராய் இருக்க வேண்டியது தான்’’
என்று தந்தை பெரியார் 95 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார். ( ஆதாரம்: பெரியார் ஈவெரா சிந்தனைகள், தொகுதி 3, பகுதி 1, பக்கம் 1382-1383)
மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகளும், நடைமுறைக்கு வந்து 27 ஆண்டுகளும் நிறைவடைந்து விட்ட நிலையில், மத்திய அரசுப் பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் இன்னும் 21 விழுக்காட்டை தாண்டவில்லை என்ற குறை நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. அது ஒருபுறம் இருக்க பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு, அந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ள அனைத்து சமுதாயங்களுக்கும் கிடைக்கவில்லை; ஒரு சில சமுதாயங்கள் மட்டும் தான் அந்த இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றன என்ற விமர்சனங்களும் இன்னொருபுறம் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
இந்த விமர்சனங்களில் உண்மை இருப்பதை உணர்ந்த நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசு, இது குறித்து ஆய்வு செய்யவும் தேவைப்பட்டால் 27% இட ஒதுக்கீட்டை ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளாக பிரித்து உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்கவும் தில்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரோகினி அவர்கள் தலைமையிலான ஆணையம் ஒன்றை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340-ஆவது பிரிவின்படி கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி அமைத்தது. அந்த ஆணையத்தின் முழு நேர உறுப்பினராக தில்லியிலுள்ள கொள்கை ஆய்வு மையத்தின் இயக்குனர் டாக்டர் ஜே.கே.பஜாஜ், அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக கொல்கத்தாவில் உள்ள இந்திய மானுடவியல் ஆய்வு மையத்தின் இயக்குனர், இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு அந்தப் பிரிவில் இடம் பெற்றுள்ள சமூகப் பிரிவினரிடையே எந்த அளவுக்கு சமத்துவமற்ற வகையில் பகிரப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்தல், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடம்பெற்றுள்ள சமுதாயத்தினரை தனித்தனி துணைக் குழுக்களாக பிரிப்பதற்கான அறிவியல்பூர்வ அணுகுமுறைக்கு தேவைப்படும் பொறிமுறைகள், அளவீடுகள், காரணிகள், விதிகள் ஆகியவற்றை உருவாக்கித் தருதல், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான மத்தியப் பட்டியலில் உள்ள சாதிகளை அடையாளம் கண்டு, அவற்றை உள் ஒதுக்கீடு பெறுவதற்கான துணைக்குழுக்களாக வகைப்படுத்தித் தருதல் ஆகியவை தான் நீதிபதி ரோகினி ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட பணிகள் ஆகும்.
ஆணையம் அமைக்கப்பட்ட 12 வாரங்களுக்குள் அதன் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அதன்பின் 33 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், ஆணையத்தின் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.
அதேநேரத்தில் நீதிபதி ரோகிணி ஆணையம் பல்வேறு நிலைகளில் ஆய்வுகளை நடத்தி முதற்கட்ட கலந்தாய்வு அறிக்கை ஒன்றை 2018-ஆம் ஆண்டின் இறுதியில் தயாரித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பியுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சி அளிப்பவை ஆகும்.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மொத்தம் 2,633 சாதிகள் உள்ளன. இவற்றில் வெறும் 10 சமுதாயங்கள் மட்டுமே, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 24.95 விழுக்காட்டை கைப்பற்றுகின்றன என்பது தான் முதலாவது அதிர்ச்சித் தகவல் ஆகும். மேலும் ஒரு 38 சமுதாயங்கள் 25.04 விழுக்காடு மாணவர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்புகளை கைப்பற்றிக் கொள்கின்றன. 102 சமுதாயங்கள் இன்னொரு 25 விழுக்காட்டையும், 506 சமுதாயங்கள் 22.32 விழுக்காட்டையும் பெறுகின்றன. இவர்கள் தவிர பிற சமுதாயங்களுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக கல்வியிலோ, வேலைவாய்ப்பிலோ எந்த பயனும் கிடைப்பதில்லை.
இதை இன்னும் புரியும் வகையில் விளக்குகிறேன்....-
மத்திய அரசில் ஓராண்டில் 10,000 வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். அதில் 27% வேலைவாய்ப்புகள், அதாவது 2700 வேலைவாய்ப்புகள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடம் பெற்றுள்ள 2633 சாதிகளுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில், ரோஸ்டர் முறையில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு கிடைக்கவில்லை. மாறாக, இவற்றில் 674 வேலைவாய்ப்புகளை 10 சாதிகள் மட்டும் கைப்பற்றிக் கொள்கின்றன. 676 வேலைவாய்ப்புகளை 38 சாதிகளும், 675 வேலைகளை 102 சாதிகளும் கைப்பற்றுகின்றன. மீதமுள்ளவற்றில் 506 சாதிகளுக்கு 602 வேலைகள் மட்டும் தான் கிடைக்கின்றன. அவையும் போக மீதமுள்ள 72 வேலைகள் தான் 994 சமுதாயங்களுக்கு கிடைக்கின்றன. அவர்களின் நிலையை விட மோசமாக 983 சமுதாயங்களுக்கு இதுவரை எந்தவொரு வேலைவாய்ப்போ, மாணவர் சேர்க்கை இடமோ கிடைக்கவில்லை. இது எவ்வளவு பெரிய சமூக அநீதி?
வட இந்தியாவில் அதிக அளவில் உள்ள யாதவர்கள், குர்மிக்கள், ஜாட்கள், சைனிகள், தேவர்கள், ஈழவர்கள், ஒக்கலிகர்கள் ஆகிய சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் பயன்களை அதிக அளவில் அனுபவிப்பவர்கள் என்று ரோகிணி ஆணையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒரு சமுதாயம் ஒரு கட்டத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்படும் நிலையில், இட ஒதுக்கீட்டின் பயன்கள் முறையாக கிடைக்கும் பட்சத்தில் தான் அந்த சமுதாயம் முன்னேற முடியும். மாறாக, இட ஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்காத பட்சத்தில், அந்த சமுதாயத்தின் தொழில் சார்ந்த, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்ளும் திறன் சார்ந்த பாதகமான அம்சங்களால் அந்த சமுதாயத்தின் நிலை மேலும் பின்னடைவை சந்திக்கும். அத்தகைய சூழலில் அந்த சமுதாயங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து அவர்களின் நிலையை முன்னேற்ற வேண்டும். அத்தகைய சிறப்பு ஏற்பாடுகளில் ஒன்று தான் உள் ஒதுக்கீடு ஆகும்.
உள் ஒதுக்கீடு வழங்குவதற்கென சில காரணிகள் உள்ளன. ஒவ்வொரு சமுதாயத்திற்குமான பிற்படுத்தப்பட்ட தன்மையின் விழுக்காடு அளவிடப்பட வேண்டும். அடுத்ததாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஒவ்வொரு சமுதாயமும் எந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன என்பதை கணக்கிட வேண்டும்.
அவற்றின் அடிப்படையில் அதிக பிரதிநிதித்துவம் பெற்ற சாதிகள் (Over Representation), குறைந்த பிரதிநிதித்துவம் பெற்ற சாதிகள் (Under Representation), பிரதிநிதித்துவம் பெறாத சாதிகள் (Un Representation) ஆகியவற்றின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் தான் உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
இந்த கோட்பாடுகளின் அடிப்படையில் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் பயன்களை இன்னும் அனுபவிக்காத 983 சமூகங்களை தனி பிரிவாக பிரித்து அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து நீதிபதி ரோகிணி ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. இட ஒதுக்கீட்டின் பயன்களை அதிகமாக அனுபவிக்காத மற்ற சமூகங்களை ஒருங்கிணைந்த்து அவர்களுக்கு 10 விழுக்காடும், இட ஒதுக்கீட்டை அதிகமாக அனுபவித்த சமுதாயங்களுக்கு 7 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பது தான் நீதிபதி ரோகிணி ஆணையத்தின் ஆய்வில் உள்ள இன்னொரு பரிந்துரை ஆகும். இந்த பரிந்துரைகள் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் போது, அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு மூன்று அடுக்காக பிரிக்கப்பட்டு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டால் கூட, அது துல்லியமானதாக இருக்காது. ஏனெனில் இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் சாதிகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டவை தானே தவிர, ஒவ்வொரு சாதியிலும் உள்ள மக்கள்தொகை அடிப்படையில் கணக்கிடப்பட்டவை அல்ல. இந்தியா முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் மட்டும் தான் அது துல்லியமானதாக இருக்கும். அதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பெரிய பணியல்ல. ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை மக்கள்தொகை கனக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதில் மதம் அடிப்படையிலும், பட்டியலினம், பழங்குடியினம் ஆகியவற்றின் அடிப்படையிலும் கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுடன் ‘சாதி’ என்ற இன்னொரு பகுதியை சேர்த்து சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அது சமூகநீதி சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து விடும்.
நாளை....
கர்நாடக இட ஒதுக்கீட்டு வரலாறு!
No comments:
Post a Comment