சுக்கா... மிளகா... சமூகநீதி?
17. அவானூர் என்கிற மண்டலின் முன்னோடி! - மருத்துவர் இராமதாசு அய்யா.
இட ஒதுக்கீடு, சமூக நீதி, வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை, பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் காண்பதற்கான காரணிகள் போன்றவை மிகவும் சிக்கலானவை ஆகும். சமூகநீதி களத்தில் தீவிரமாக பங்காற்றுபவர்களுக்கு மட்டுமே இவை குறித்த புரிதல் இருக்கும். அவை குறித்து முழுமையாக பேச வேண்டுமானால் குறைந்தபட்சம் 40 அல்லது 45 வயதைக் கடந்திருக்க வேண்டும். அதில் பெரும்பகுதியை சமூகநீதிக்கான களப்பணியில் கழித்திருக்க வேண்டும். அப்போது தான் அவர்களால் சமூக நீதி மற்றும் அவை சார்ந்த விஷயங்களை புரிந்து கொள்ளவும், அதற்காக போராடவும் முடியும்.
இந்த விஷயத்தில் தந்தைப் பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஜோதிராவ் புலே, சாகு மகராஜ், இராம் மனோகர் லோகியா போன்ற சில விதிவிலக்குகள் உண்டு.
அந்த வரிசையில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொருவர் தான் எல்.ஜி. அவானூர்(L.G. Havanur).
கர்நாடகத்தின் ஹாவேரி மாவட்டத்திலுள்ள ராணேபென்னூர் நகரத்தில் 1927-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்த அவானூர், தமது 29-ஆவது வயதில், 1956-ஆம் ஆண்டில் ரானேபென்னூர் நகராட்சியின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் பணியாற்றினார். அதற்கு முன் 1953-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு வரை பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1962-ஆம் ஆண்டில் பெங்களூர் வந்த அவர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கி புகழ் பெற்றார். தொடர்ந்து பெங்களூர் சட்டக் கல்லூரியில் 8 ஆண்டுகள் சட்டப் பேராசிரியராக பணியாற்றிய அவர், அந்தக் காலத்திலேயே பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். இளம் வயதிலேயே துடிப்புடன் செயல்பட்ட அவானூருக்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், பின்னாளில் கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்தவருமான தேவராஜ் அர்ஸ் அனைத்து வழிகளிலும் ஆதரவு அளித்தார்.
1960-ஆம் ஆண்டுகளில் இறுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலன் சார்ந்த விஷயங்களில் வல்லமை பெற்ற தலைவராக அவானூர் உருவெடுத்தார். 1963-ஆம் ஆண்டு நிஜலிங்கப்பாவின் ஆட்சியில் ஒக்கலிகர்கள், லிங்காயத்துகளுக்கு ஆதரவான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டதைக் கண்டு கொதித்தவர்களில் அவானூர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
1970-ஆம் ஆண்டு மன்னர் மானிய ஒழிப்புச் சட்டத்தில் கையெழுத்திட்டு விட்டு, அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி குடியரசுத் தலைவர் வி.வி. கிரி பெங்களூர் வந்த போது, அவரை அவானூர் தலைமையிலான குழு சந்தித்து 3 கோரிக்கைகள் கொண்ட மனுவை அளித்தது. முதலாவதாக சாதிகளை ஒழிக்க வேண்டும்; அது சாத்தியமில்லை என்றால் தேசிய அளவிலான காகா கலேல்கர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அதுவும் சாத்தியமில்லை என்றால், கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கிரி அவர்களிடம் அவானூரும், பிற காங்கிரஸ் தலைவர்களும் நேரில் வலியுறுத்தினார்கள்.
அது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் அவானூர் குழு அளித்த கோரிக்கை மனுவில் கடைசியாக இடம் பெற்று இருந்த வரிகள் தான் மிகவும் முக்கியமானவை ஆகும். ஆம்... ‘‘ஒருவேளை மாநில அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்கத் தவறினால், அதன் பின்னர், நீங்களே தலையிட்டு கர்நாடகத்தில் உங்களின் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய அளவுக்கு மிகவும் மோசமான நிலைமை கர்நாடகத்தில் ஏற்படும்’’ என்று குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்தது.
கர்நாடக அரசியலில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவானூர் என்ற பெயர் தான் எங்கும் எதிரொலித்தது. அப்போது அவானூருக்கு வயது 43. அதன்பிறகும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் மாநாடுகளை அவானூர் நடத்தினார். 1971-ஆம் ஆண்டு ஹூப்ளியில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சீர் மரபினர் மாநாட்டை நடத்தினார் அவானூர். அந்த மாநாட்டுக்கு தேவராஜ் அர்ஸ் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்த அவானூர், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசியதுடன், அதற்காக தேவராஜ் அர்ஸ் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
1972-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக தேவராஜ் அர்ஸ் அவர்கள் பொறுப்பேற்ற நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கூட்டத்தை 1972-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி, அதாவது அர்ஸ் முதலமைச்சரான சில நாட்களிலேயே கூட்டிய அவானூர், அந்தக் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வைத்தார். அதற்கு அடுத்த நாளே, அதாவது ஏப்ரல் 2-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களைத் திரட்டிக் கொண்டு முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ் அவர்களை சந்தித்த அவானூர், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று மனு அளித்தார். அதே மாதத்தின் 21-ஆவது நாளில் கர்நாடக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் டி.கே. நாயக்கரை சந்தித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்கும்படி கோரினார்.
மற்றொருபுறம் கர்நாடகத்திலிருந்து வெளியாகும் அனைத்து நாளிதழ்களிலும் ஆசிரியர் பக்கத்திற்கு எழுதப்படும் கடிதங்களில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் கடிதங்களே அதிக அளவில் இடம் பிடிக்கத் தொடங்கின. டெக்கான் ஹெரால்டு நாளிதழில் இத்தகைய கடிதங்கள் அதிக அளவில் வெளிவந்தன. அந்த தளத்தையும் அவானூர் விட்டு வைக்கவில்லை. 1963-ஆம் ஆண்டின் இட ஒதுக்கீட்டு ஆணை பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி விட்டதாகவும், அதை சரி செய்ய உடனடியாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி டெக்கான் ஹெரால்டு இதழுக்கும் அவர் கடிதம் எழுதினார்.
அந்த நேரத்தில் தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்க வேண்டும் என்று 1963-ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த நிஜலிங்கப்பாவும் விரும்பியது தெரியவந்தது. தேவராஜ் அர்ஸ் அவர்களால் அமைக்கப்பட்ட அமைச்சரவைத் துணைக்குழுவும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்து இருந்தது. அதன்படி 1972-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை தேவராஜ் அர்ஸ் அமைத்தார்.
அதன் தலைவராக நியமிக்கப்படுவதற்கு பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், அந்த பெயர்கள் எதையும் தேவராஜ் அர்ஸ் பரிசீலிக்கவில்லை. அவரது மனதில் ஏற்கனவே ஒரு பெயரை அவர் தீர்மானித்து வைத்திருந்தார். அவர் தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமான நபராக இருப்பார் என்று தேவராஜ் அர்ஸ் நினைத்தார். அதன்படியே அவரை கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக நியமித்தார். அவ்வாறு தலைவராக நியமிக்கப்பட்டவர் தான் அவானூர்.
ஆம்... கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக போராடிய அதே அவானூர் தான், அவ்வாறு அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 45 மட்டுமே.
கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க ஏற்கனவே பல ஆணையங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் கூட, அவானூர் ஆணையம் தான் முதலாவது பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் என்று அறிவிக்கப்பட்டது. அதில் அவானூர் தவிர 6 உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டனர்.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக அவானூர் நியமிக்கப்பட்டது கர்நாடக மாநிலத்தின் இரு பெரும்பான்மை சமுதாயங்களான லிங்காயத்துகளிடமும், ஒக்கலிகர்களிடமும் சொல்லிக் கொள்ளும்படியாக வரவேற்பை பெறவில்லை. 1963-ஆம் ஆண்டு நிர்வாக ஆணைப்படி வழங்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான 30% இட ஒதுக்கீட்டின்படி லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும் கொல்லைப் புறம் வழியாக இட ஒதுக்கீட்டை அனுபவித்தனர். அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காகத் தான் புதிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று அவானூர் துடித்தார். இப்போது அவரே பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், நிச்சயமாக அவர் நமக்கு சாதகமாக இருக்க மாட்டார் என்று இரு தரப்பினரும் கருதினார்கள். அதிலும் குறிப்பாக லிங்காயத்துகளிடம் இந்த எண்ணம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் அவானூர் ஆகிய இருவருமே தங்கள் சமுதாயத்திற்கு எதிரானவர்கள் என்றும், அரசியலில் இருந்தும், அதிகாரத்திலிருந்தும் லிங்காயத்துகளை ஒதுக்குவதற்காக அவர்கள் இருவரும் இணைந்து சதி செய்வதாக லிங்காயத்துகள் நினைத்தார்கள்.
அதனால், தங்களின் எதிர்ப்பைக் காட்டும் வகையில் அவானூர் ஆணையத்தின் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் கூட, லிங்காயத்துகளின் தலைமை பீடமாக கருதப்படும் அனைத்திந்திய வீர சைவ மகாசபையின் தலைவரும், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான ஜெ.பி. மல்லராதையா அவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. லிங்காயத்துகளின் மக்கள் தொகை, கல்வி மற்றும் பொருளாதார நிலை குறித்த எந்த விவரமும் வழங்கப்படவில்லை. மொத்தத்தில் லிங்காயத்து சமுதாயத்தினர் அறிவிக்கப்படாத ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினர்.
எனினும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்த அவானூர் அதற்காக கலங்கவில்லை. அவரே களத்தில் இறங்கி தகவல்களை திரட்டினார். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் ஒவ்வொரு சமுதாயத்தின் பிற்படுத்தப்பட்ட தன்மையை கண்டறிய மிகச்சிறப்பான உத்திகளை அவர் வகுத்து கடைபிடித்தார்.
உதாரணமாக கல்வியில் ஒவ்வொரு சமுதாயமும் எந்த நிலையில் உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக அளவீடாக 1972-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை எடுத்துக் கொண்டார். எந்தெந்த சமுதாயங்கள் மாநில சராசரியை விட குறைவாக, அதே நேரத்தில் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலான தேர்ச்சி விகிதத்தை பெற்றிருந்தனவோ, அவை பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் என்று வகைப்படுத்தப்பட்டன. இந்த பட்டியலில் மொத்தம் 15 சமுதாயங்கள் இடம் பெற்றிருந்தன. அடுத்து மாநில சராசரி தேர்ச்சி விகிதத்தில் 50 விழுக்காட்டுக்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்றிருந்த சமுதாயங்கள் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று வகைப்படுத்தப்பட்டன. இந்த பட்டியலில் மொத்தம் 128 சாதிகள் இடம் பெற்றி இருந்தன. அதற்கும் குறைவான கல்வி நிலையை பெற்றிருந்த 62 சமுதாயங்கள் பிற்படுத்தப்பட்ட பழங்குடிகள் என்று வகைப்படுத்தப்பட்டனர். இப்படியாக மொத்தம் 205 சமுதாயங்கள் மூன்று வகையான பிற்படுத்தப்பட்ட பிரிவுகளில் சேர்க்கப்பட்டனர்.
வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் பிரிவில் இடம் பெற்றிருந்த 15 சமுதாயங்களில், அரசு, பலிஜா, கேவடிகா, கனிகா, ராஜ்புத், சதானி ஆகிய ஆறு சாதியினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் போதிய அளவு பிரதிநிதித்துவம் பெற்று இருந்ததால் அந்த சாதிகள் மட்டும் நீக்கப்பட்டன. மீதமுள்ள 9 சாதிகளும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் பிரிவாக அறிவிக்கப்பட்டன. அதேபோல், பிற்படுத்தப்பட்ட சாதிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்த 128 சாதிகளில், போதிய புள்ளி விவரங்கள் இல்லாத 13 சாதிகள் நீக்கப்பட்டன. மீதமுள்ள 115 சாதிகள் மட்டும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் பிரிவாக அறிவிக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட பழங்குடிகள் பிரிவு எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே நீடித்தது.
பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் பிரிவு ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 19% முதல் 22% அளவுக்கு இருந்தது. அந்தப் பிரிவுக்கு மொத்தம் 16% இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பிற்படுத்தப் பட்ட சாதிகள் பிரிவின் மக்கள்தொகை 14.5% இருந்ததால் அப்பிரிவுக்கு 10 விழுக்காடும், 8 விழுக்காடு மக்கள்தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட பழங்குடிகள் பிரிவுக்கு 6 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
கர்நாடகத்தில் உள்ள பெரும்பான்மை சாதிகளில் ஒக்கலிகர்கள் மட்டும் தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் பிரிவில் சேர்க்கப்பட்டனர். லிங்காயத்துகளின் சில உட்பிரிவுகள் மட்டும் பிற்படுத்தப்பட்ட பிரிவாகவும், மீதமுள்ள பிரிவுகள் முற்படுத்தப்பட்ட பிரிவாகவும் பிரித்து வகைப்படுத்தப்பட்டன. ஒக்கலிகர்களும், லிங்காயத்துகளும் இப்படியாக பிரிக்கப்பட்டதால் அவர்கள் அரசியலிலும், அதிகாரத்திலும் கூட்டணி அமைக்க முடியாமல் போனது. இது தேவராஜ் அர்ஸ், அவானூர் கூட்டணியின் சமயோசித நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இவ்வாறு இரு தரப்பையும் பிரித்ததாலேயே 1980-ஆம் ஆண்டு வரை தேவராஜ் அர்சை கர்நாடக அரசியலில் எந்த கட்சியாலும், சமுதாயத்தாலும் அசைக்க முடியாமல் போனது.
மீண்டும் இட ஒதுக்கீட்டுக்கு வருவோம்....
லிங்காயத்துகள் மட்டுமின்றி, கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோரும் முற்பட்ட வகுப்பில் சேர்க்கப் பட்டனர். இத்தகைய பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அவானூர் ஆணையம் 1975&ஆம் ஆண்டு தேவராஜ் அர்ஸ் அரசிடம் தாக்கல் செய்தது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண அவானூர் ஆணையம் கடைபிடித்த அளவீடுகளைப் பார்த்த கர்நாடக முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ், அவானூர் அறிக்கையை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பைபிள் என்று பாராட்டினார்.
அவானூர் ஆணைய அறிக்கையை ஆய்வு செய்த தேவராஜ் அர்ஸ் தலைமையிலான அரசு, அரசியல் காரணங்களுக்காக அதில் சில மாற்றங்களைச் செய்தது. இள்லாமியர்கள் முழுவதும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பிரிவிலும், மதம் மாறிய கிறித்தவர்கள் பிற்படுத்தப்பட்ட சாதிகள் பிரிவிலும் சேர்க்கப்பட்டனர்.
அதுமட்டுமின்றி முற்பட்ட வகுப்பாக அறிவிக்கப்பட்ட லிங்காயத்துகள், பிராமணர்கள், அவானூர் ஆணையத்தால் நீக்கப்பட்ட சில உயர்சாதிகள் ஆகியோரை ஒரு பிரிவாக இணைத்து சிறப்புப்பிரிவு ஒன்றை கர்நாடக அரசு உருவாக்கியது. அந்தப் பிரிவுக்கு 5% இடங்களை ஒதுக்கிய அரசு, அந்த சமுதாயங்களில் ஆண்டுக்கு ரூ. 4800க்கும் குறைவாக வருமானம் ஈட்டுவோர் மட்டும் தான் இடஒதுக்கீடு பெற முடியும் என்றும் அறிவித்தது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பிரிவுக்கு 20%, பிற்படுத்தப்பட்ட சாதிகள் பிரிவுக்கு 10%, பிற்படுத்தப்பட்ட பழங்குடிகளுக்கு 5% என்று இட ஒதுக்கீட்டின் அளவை மாற்றி அமைத்தது. இந்த மூன்று பிரிவுகளைச் சேர்ந்த சமுதாயங்களில் யாரெல்லாம் ஆண்டுக்கு ரூ. 8 ஆயிரத்திற்கும் குறைவான வருவாய் ஈட்டுகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணைகளை முறையே 1977-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதியும், மார்ச் 4-ஆம் தேதியும் தேவராஜ் அர்ஸ் அரசு பிறப்பித்தது.
ஆனால், எதிர்பார்த்தபடியே இந்த இட ஒதுக்கீடுகளை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. மொத்தம் 252 பேரின் சார்பில் இந்த வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், 1979-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. அவானூர் ஆணையத்தின் பரிந்துரைப்படி இட ஒதுக்கீடு வழங்கி கர்நாடக அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதேநேரத்தில் அதில் சில அம்சங்கள் மட்டும் செல்லாது என்று நீதிபதிகள் ஆணையிட்டனர்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது செல்லும்; ஆனால், முஸ்லிம்கள் பிற்படுத்தப் பட்ட சமுதாயப் பிரிவிலும், மதம் மாறிய கிறித்தவர்கள் பிற்படுத்தப்பட்ட சாதிகள் பிரிவிலும் சேர்க்கப் பட்டது செல்லாது; அதேபோல், லிங்காயத்துகள் உள்ளிட்ட உயர்சாதியினரை இணைத்து சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டதும் செல்லாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறியிருந்தது. அதாவது அவானூர் ஆணையத்தில் என்னென்ன பரிந்துரைகள் இடம் பெற்று இருந்தனவோ, அவை அனைத்தும் செல்லும்; அரசியல் காரணங்களுக்காக என்னென்ன பிரிவுகளை கர்நாடக அரசு சேர்த்ததோ அவை அனைத்தும் செல்லாது என்பது தான் கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படை ஆகும்.
பின்னர் கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிலர் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கில் 1982-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்க இருந்தது. அதற்குள் கர்நாடகத்தில் தேவராஸ் அர்ஸ் தலைமையிலான அரசு 1980-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கவிழ்ந்தது. அவருக்கு பதில் அவரால் அரசியலில் அடையாளம் காணப்பட்டு, அமைச்சராக்கப்பட்ட குண்டுராவ் முதலமைச்சர் ஆனார். அடுத்த இரு ஆண்டுகளில், அதாவது 1982-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6-ஆம் தேதி காலமானார். அந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்பாக, குண்டுராவ் அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கர்நாடகத்தில் இன்னொரு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்து, புதிதாக இடஒதுக்கீட்டை தீர்மானித்துக் கொள்வதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் அந்த வழக்கை முடித்து வைத்தது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் காண்பதற்காக அவானூர் ஆணையம் கடைபிடித்த அறிவியல்பூர்வமான முறைகள் மிகச் சிறப்பானவை என்றும், அவானூர் ஆணையத்தின் பணிகள் பாராட்டப்பட வேண்டியவை என்றும் உச்சநீதிமன்றம் வெகுவாக பாராட்டியது.
பின்னாளில் மண்டல் ஆணையம் அமைக்கப்பட்ட போது மக்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையை அளவிடுவதற்கு என்னென்ன அளவீடுகளை கடைபிடிக்கலாம் என்பதற்கு அவானூர் அறிக்கை தான் வழிகாட்டியாக இருந்தது. மண்டல் ஆணையத்தின் பல பகுதிகளில் அவானூர் அறிக்கை குறித்து பாராட்டப்பட்டிருந்தது. அந்த அளவுக்கு அவானூர் ஆணையத்தின் பணிகள் சிறப்பாக அமைந்தன. அதுமட்டுமின்றி மண்டல் ஆணையத்தின் வல்லுனர் உறுப்பினராகவும் அவானூர் பணியாற்றினார். அதனால் தான் மண்டலின் வழிகாட்டி அவானூர் என்று இந்த அத்தியாயத்திற்கு தலைப்பிட்டேன்.
அடுத்தக்கட்டத்திற்கு நகர்வதற்கு முன்பாக, அவானூர் ஆணையத்தின் பணிகள் முடிவடைந்த பிறகு அவானூரின் அரசியல் பணிகள் எவ்வாறு அமைந்தன என்பது குறித்து பார்ப்போம்....
1975-ஆம் ஆண்டில் அவானூர் ஆணையத்தின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதை பிற்படுத்தப்பட்ட மக்களின் பைபிள் என்று பாராட்டிய தேவராஜ் அர்ஸ், அவானூரை 1977-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்தார். இரு ஆண்டுகள் கூட மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அவானூர் நிறைவு செய்யாத நிலையில் அவரை மீண்டும் கர்நாடக அரசியலுக்கு அழைத்து வந்த தேவராஜ் அர்ஸ், அம்மாநிலத்தின் சட்டம், சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆகிய துறைகளின் அமைச்சராக நியமித்தார். தேவராஜ் அர்ஸ் ஆட்சி முடியும் வரை அமைச்சர் பதவியில் அவானூர் நீடித்தார். 1982&ஆம் ஆண்டில் கர்நாடக சட்ட மேலவைக்கு இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் அரசியலில் இருந்து படிப்படியாக விலகிக் கொண்டார்.
1991-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அரிய பல ஆலோசனைகளை அவானூர் வழங்கினார். 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அவர் காலமானார். கர்நாடக அரசியலில் பிற்படுத்தப் பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த பலர் தலைவர்களாக உருவெடுத்ததற்கு தேவராஜ் அர்சும், அவானூரும் முக்கிய காரணங்கள் என்றால் அதை எவராலும் மறுக்க முடியாது.
சரி.... இப்போது மீண்டும் கர்நாடக இட ஒதுக்கீட்டு வரலாற்றுக்குள் செல்வோம்....
1982-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் குண்டுராவ் அரசு அளித்த வாக்குறுதியின்படி 1983-ஆம் ஆண்டில் வெங்கடசுவாமி ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் 1986-ஆம் ஆண்டில் அறிக்கை அளித்தது. ஆனால், வழக்கம் போலவே அந்த ஆணையத்தின் அறிக்கைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டதால் அதன் பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை. மாறாக புதிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்படும் வரை இடைக்கால ஏற்பாடாக புதிய இடஒதுக்கீட்டுக்கான ஆணை 1986-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறப்பிக்கப்பட்டது.
1988-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நீதிபதி ஓ.சின்னப்பரெட்டி தலைமையில் மூன்றாவது பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் 1990-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதன் அறிக்கையை தாக்கல் செய்தது. அதன்படி கர்நாடகத்தில் இட ஒதுக்கீட்டின் அளவு முதலில் 57% ஆகவும், பின்னர் 73% ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆனால், மண்டல் ஆணையம் & இந்திரா சகானி வழக்கில் இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால் அந்த மாநிலத்தில் இட ஒதுக்கீட்டின் அளவு 50% ஆக குறைக்கப்பட்டது. இப்போது கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32%, பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 3% என 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
நாளை....
கேரள இட ஒதுக்கீட்டு வரலாறு!
No comments:
Post a Comment