பட்சி ஜாதி நீங்க.... எங்க
பகுத்தறிவாளரை பார்க்காதீங்க! - மருத்துவர் இராமதாசு அய்யா
கொரோனா காலம் நமது செயல்பாடுகளை முடக்கி வைத்திருக்கிறது. இலக்கியங்களைப் படித்தல், பாடல்களைக் கேட்டல் ஆகியவை தான் எனக்கு இப்போது இருக்கும் பொழுதுபோக்கு ஆகும். அப்படித் தான் நேற்று பராசக்தி படத்தில் வரும் கா கா கா என்ற பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த பாடல் வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டன.
‘‘பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சமா இருங்க பகுந்துண்டு வாழுங்க
பழக்கத்த மாத்தாதீங்க - எங்கே பாடுங்க
கா கா கா..
கா.கா.கா..’’ என்பன தான் உடுமலை நாராயணகவி எழுதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த அந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ஆகும்.
இந்த வரிகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் உண்மை. உணவுக்காக எந்த பறவைகளும் அடித்துக் கொள்வதில்லை. மனிதர்கள் தான் அடித்துக் கொள்கிறார்கள். அத்தகைய மனிதர்களைப் பார்த்து கெட்டுவிடாமல் பகுத்துண்டு வாழும் பழக்கத்தைத் தொடருங்கள் என்று காக்கைகளுக்கு அறிவுரை வழங்குகிறார் உடுமலை நாராயணகவி.
இந்த வரிகளுக்கான எடுத்துக்காட்டை நான் தைலாபுரம் தோட்டத்தில் தினசரி காண்கிறேன்.
தைலாபுரம் தோட்டம் பறவைகள் சரணாலயமாக மாறி விட்டது குறித்து கடந்த ஆண்டே முகநூலில் பதிவு செய்திருக்கிறேன். மயில்கள், குயில்கள், கிளிகள், மைனாக்கள், சிட்டுக்குருவிகள், கவுதாரிகள் ஆகியவையும் தைலாபுரம் தோட்டத்தின் விருந்தினர்களாக வந்து செல்வதை குறிப்பிட்டு இருந்தேன்.
பறவைகளில் காக்கைகள் மிகவும் முக்கியமானவை. தைலாபுரம் தோட்டத்தில் காக்கைகளுக்கு காலை உணவு இட்லி தான். தட்டுகள் நிறைய இட்லியை எனது துணைவியார் சரஸ்வதி அம்மையார் காக்கைகளுக்கு படைப்பார்கள். அவற்றை பொறுமையாக உண்டு களையும் காக்கைகள், அதன்பின் மதிய உணவு நேரத்திற்கு சரியாக வந்து விடும். ஒவ்வொரு நாளும் 50&க்கும் கூடுதலான காக்கைகள் உணவு சாப்பிட வந்து விடும். மதியம் சோறு படைக்கும் போது அவற்றை காக்கைகள் ருசித்து உட்கொள்ளும். மத்திய உணவு கோழிக்கறி, ஆட்டுக்கறி, மீன் போன்ற அசைவ உணவாக இருந்து விட்டால் காக்கைகளுக்கு கொண்டாட்டம் தான். வழக்கத்தை விட ஒரு பிடி அதிகமாகவே காக்கைகள் சாப்பிடும். அசைவம் படைக்கும் நாளில் சாப்பிட வரும் காக்கைகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும்.
மதிய உணவு நேரத்திற்கு சரியாக வந்து விடும் காக்கைகள் மொத்தமாக குரல் எழுப்பி மதிய உணவு கோருகின்றன. உணவு படைக்கும் வரை அவை நகருவதில்லை. உணவு படைத்தவுடன் உண்டு களித்த பிறகு தான் அவை நகருகின்றன. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், காக்கைகள் உணவுக்காக அடித்துக் கொள்வதில்லை. மனிதர்களைப் போல உணவுக்காக சண்டை போடுவதில்லை. அனைத்தும் பகுத்துண்டு தான் வாழ்கின்றன. இந்த வழக்கத்தை காக்கைகளிடமிருந்து மனிதர்களும் கற்றுக் கொள்ள வேண்டும்.-
************
No comments:
Post a Comment