சொல்வது ஒன்று செய்வது ஒன்று!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று இரண்டாவது அலை எப்போது முடிவுக்கு வரும் என்று இன்னும் தெரியவில்லை. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் சில நாட்களாக குறைந்து வருகிறது. ஆனாலும் ஒரு நாள் உயிரிழப்பு சராசரியாக 350 என்ற அளவில் இருக்கிறது. தொற்று எண்ணிக்கையும் 16ஆயிரம் என்ற அளவில் உள்ளன. இந்த நிலையில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அனுமதித்திருப்பது சரியான நடவடிக்கை அல்ல. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் திறக்கப்படாவிட்டாலும் மற்ற 27 மாவட்டங்களில் மதுக் கடைகள் திறக்கப்படுகிறது. இதன் மூலம் தொற்று பரவாது என்பது என்ன நிச்சயம்.?
புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் அதை ஒட்டிய தமிழக மாவட்ட மக்கள் அங்கு சென்று வாங்கி வருவதையும், நீண்ட வரிசையில் நிற்பதையும் பார்க்கிறோம். தற்போது இங்கேயே திறக்கப்படுவதால் சொல்ல வேண்டியதில்லை. இது தொற்று பரவலுக்கு வழிவகுக்கும். மக்களை இன்னும் சிரமத்திற்கு உள்ளாக்கும். கடந்த ஆட்சியில் இதுபோன்ற நடவடிக்கையை தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் "ஊரடங்கு காலத்தில் மதுக்கடை எதற்கு?" என்று விமர்சித்தார்.
"யார் பாதிக்கப்பட்டாலும் வருமானம் வந்தால் சரி நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்" என்று எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு மட்டுமன்றி கருப்புச் சின்னம் அணிந்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டமும் நடத்தி, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இது மக்களுக்காக நடத்தப்பட்ட போராட்டம் என்றால், தற்போது மதுக் கடைகளை திறப்பதை ஏற்றுக் கொள்ள இயலுமா? இல்லையென்றால் அத்தகையை எதிர்ப்பை தேர்தல் கால நடிப்பாகவே எண்ண நேரிடும்.
மக்களை பற்றி சிந்திக்காமல் மதுக்கடைகளை திறப்பது எந்த வகையிலும் நியாமல்ல. மூடியது மூடியதாகவே இருக்கட்டும். கொரோனா காலத்தை பயன்படுத்தி ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு மூடுவிழா நடத்துங்கள். அதுதான் ஒரு நல்ல அரசாங்கம் 'குடிமகன்களுக்கு' தரும் மரியாதையாக இருக்கும். அதைவிடுத்து மதுக்கடைகளை திறந்து கொரோனாவையும் பரவவிட்டு, நடுத்தர மக்களின் மீது பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்திட வேண்டாம். இதுவே மக்களின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு செய்திக்கதிர் முன்வைக்கும் வேண்டுகோள். ஊரடங்கு காலத்தில் மதுக்கடை எதற்கு?
No comments:
Post a Comment