பாகிஸ்தானுடன் இந்தியா சமரசம்? - என்ன நடக்கிறது எல்லையில்!?
தற்போது மாநில பகுதிகளாக இருக்கும் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு மீண்டும் மாநில தகுதி அளிப்பது தொடர்பாக, ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் மேகபூபா, அப்துல்லா உள்ளிட்ட 14 பிற கட்சித் தலைவர்களை அழைத்து வரும் 24 ஆம் தேதி நடுவண் அரசு கலந்தாய்வு மேற்கொள்ள விருப்பதாக அண்மையில் செய்தி வெளியானது. கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இதுவரை எந்தவொரு பிடியும் கொடுக்காமல் திராணியுடன் செயல்பட்டு வந்த நடுவண் அரசின் இந்த திடீர் அறிவிப்பு குறித்து பல்வேறு ஐயங்கள் பஞ்சாய் பறந்தன.
இந்நிலையில் ஸ்டான்லி ஜானி என்ற ஊடகவியலாளர் இது குறித்து சில தகவல்களை உதிர்த்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் எல்லைப்பகுதியில் இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக பாகிஸ்தான் மட்டுமே இருந்து வந்த நிலையில் சீனாவும் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது.
தற்போது ஒரே நேரத்தில் இரண்டு எல்லை அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
அதில் LAC பகுதியில் கவனம் செலுத்தும் வண்ணம் சீனாவுடன் இணங்கி செல்ல இந்தியா விரும்பாத நிலையில், தொடர்ந்து தீயாய் எரிந்து கொண்டிருக்கும் ஜம்மு காஷ்மீரின் மாநில தகுதி பறிப்பு விவகாரத்தை சற்று தணிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் ஆப்கனிஸ்தானில் இருந்து தனது படைகளை எதிர்வரும் செப்டெம்பர் 11 ஆம் தேதிக்குள் விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. இதனால், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மற்றும் தாலிபானின் நடவடிக்கைகள் மேலும் வலு பெறக்கூடும். இதை கருத்தில் கொண்டு கடந்த சனவரி மாதத்தில் அமீரகத்தில் இந்தியா
பாகிஸ்தான் இடையே இரகசிய சந்திப்பு நடைபெற்றதாகவும் இதனை தொடர்ந்து பிப்ரவரி 25 முதல் எல்லையில் சண்டை நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கத்தார் தலைநகரம் தோகாவில் தாலிபன் - இந்தியா "அமைதி சந்திப்பு" நடத்தியதாக கத்தார் அரசின் மூத்த அலுவலர் மஜெத் அல் கத்தானி இணைய மாநாடு ஒன்றில் போட்டு உடைத்தார். இது குறித்து வெளியுறவுத் துறையிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அதை மறுக்காமலும், அது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமலும் இருக்கும் நடுவண் அரசின் நடவடிக்கைகள் பலரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது. இந்த சந்திப்பு ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்தது என கத்தார் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தாலும் காஷ்மீர் தொடர்பாக தாலிபனின் தாக்கத்தை குறைப்பதற்காக என்றே தெரிகிறது.
அடுத்த கட்டமாக, கடந்த 5 ஆண்டுகளாக இந்திய - பாகிஸ்தான் உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய நடுவண் அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆயத்தப்படுத்தி வருகிறது. காஷ்மீர் மாநில (இந்திய பகுதி) விவகாரத்தில் எடுத்த இந்திய அரசின் முடிவுகளை திரும்பப் பெற்றால் மட்டுமே இந்தியாவுடன் மீண்டும் பேச முடியும் என கடந்த மாதம் பாகிஸ்தான் முதன்மை அமைச்சர் இம்ரான் கான் தெரிவித்த நிலையில் ஜூன் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளதாக நடுவண் அரசு அறிவித்துள்ளது.
எதிர்வரும் வாரங்களில் பல அதிரடியான மாற்றங்கள் மற்றும் அறிவிப்புகள் வரக் கூடும். அதையடுத்து பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் இந்திய அரசின் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் தொடர்பு விவகாரங்களை கடுமையாக கையாண்ட நிலையில் நடுவண் அரசு நினைத்ததன் நோக்கம் நிறைவேறவில்லை. மாறாக சீன இந்த இக்கட்டான சூழ்நிலையை தனக்கு சாதகமாக நன்கு பயன்படுத்தி கொண்டுள்ளது. தற்போது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பார்க்கும் போது தனது தவறுகளை மீளாய்வு செய்து திருத்தம் மேற்கொண்டு வருவதாக புரிந்து கொள்ளலாம். எனினும் இவை அனைத்தும் நமது நாட்டுக்கு பலன் கொடுக்குமா என்பதை வெகு விரைவில் அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment