பா.ம.க 33-ஆவது ஆண்டு விழா: இனி எல்லாம் நமக்கு வெற்றியே! - மருத்துவர் இராமதாசு அய்யா தொண்டர்களுக்கு வாழ்த்து. - Agnipuratchi

பா.ம.க 33-ஆவது ஆண்டு விழா: இனி எல்லாம் நமக்கு வெற்றியே! - மருத்துவர் இராமதாசு அய்யா தொண்டர்களுக்கு வாழ்த்து.

Share This

பா.ம.க 33-ஆவது ஆண்டு விழா:
இனி எல்லாம் நமக்கு வெற்றியே! - மருத்துவர் இராமதாசு அய்யா தொண்டர்களுக்கு வாழ்த்து.

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே...!

தமிழ்நாட்டில்  சமூக நீதிக்காகவும், மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, நாளை 32 ஆண்டுகளை நிறைவு செய்து 33&ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த தருணத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓர் அமைப்பு தொடங்கப்பட்டால், அது இயங்குகிறதோ.... இல்லையோ, ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டு விழா வந்தே தீரும். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியின் ஆண்டு விழாக்கள் எனப்படுபவை  அப்படிப்பட்டவை அல்ல. ஒவ்வொரு ஆண்டு விழாவுமே பாட்டாளி மக்கள் கட்சியின் கடந்த ஓராண்டு  கால செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து, தணிக்கை செய்யும் நிகழ்வாகவே அமைகின்றன. அவ்வாறு தணிக்கை செய்யும் போது ஒவ்வொரு ஆண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலையில் சூட்டப்படும்  மக்கள் பணி என்ற கிரீடத்தில், புதிய சாதனைகள் எனப்படும் வைரக்கற்கள் பதிக்கப்படுவது என்பது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. அது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர்ச்சியான வளர்ச்சியாகும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே கொரோனா வைரஸ் பரவலால் அனைத்துத் துறைகளையும் போலவே அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளும் முடங்கியுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலைத் தவிர  வேறு எந்த அரசியல் நிகழ்வுகளும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அனுமதிக்கப்படவில்லை. அதனால் சட்டப்பேரவைத் தேர்தலைத் தவிர வேறு தருணங்களில் உங்களையெல்லாம் சந்திக்க முடியவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட 32 ஆண்டுகளில் எனக்கு மிகவும் ஏமாற்றமளித்த தருணம் என்னவென்றால், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பாட்டாளி சொந்தங்களாகிய உங்களையெல்லாம் சந்திக்க முடியாத தருணம் தான்.  எப்போதும் பாட்டாளி சொந்தங்களால் நிரம்பி வழியும் தைலாபுரம்  தோட்டம் இப்போது மனித நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. மாதத்தில் பாதி நாட்கள் அரசியல் சார்ந்த சுற்றுப்பயணங்களிலும், தொண்டர்கள் சந்திப்பிலும் கழிக்கும் நான் இப்போது எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியவில்லையே  என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த நிலைகள் இன்னும் சில வாரங்களில் மாறும்; இயல்பு நிலை திரும்பும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.

இத்தகைய கடுமையான நெருக்கடியிலும் நாம் சமூகநீதி உரிமைகளை வென்றெடுப்பதில் போராடி வெற்றி பெற்றிருக்கிறோம். தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20%  தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். கடந்த ஆண்டு நமது சமூகநீதி நாளான செப்டம்பர் 17&ஆம் நாள் இட ஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்விலும்,  ஜூலை 16-ஆம் நாள் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்திலும் இந்தக் கோரிக்கையை மீண்டும்  எழுப்பினோம். தொடர்ந்து வன்னியர் சங்கம் & பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டுப் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி வன்னியர் 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டத்திற்கான உத்திகளை வகுத்தோம்.

திசம்பர் 1-ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு எதிரில் அனைத்து அடக்குமுறைகளையும் முறியடித்து, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் ஒரு லட்சம் பாட்டாளி சொந்தங்களைக் கூட்டி வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரும் முதல்கட்ட போராட்டத்தைத் தொடங்கினோம்.  சென்னையில் மொத்தம் 4 நாட்களுக்கு இப்போராட்டம் நீடித்தது.

இரண்டாம் கட்டமாக திசம்பர் 14ஆம் நாளன்று தமிழ்நாட்டில் உள்ள 12,621 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் பா.ம.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.  மூன்றாம் கட்டமாக திசம்பர் 23ஆம் நாளன்று பேரூராட்சி அலுவலகங்கள் முன் பா.ம.க. சார்பில் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்பட்டது. நான்காம் கட்டமாக திசம்பர் 30ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் வன்னியர் தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. ஐந்தாம் கட்டமாக 2021ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நகராட்சி அலுவலகங்கள் முன்பும், ஆறாம் கட்டமாக 2021ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் மாபெரும் மக்கள்திரள் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் நாம் நமது வலிமையை ஆட்சியாளர்களுக்கு புரிய வைத்தோம். இத்தகைய தொடர் போராட்டங்களின் பயனாக வன்னியர்களுக்கு 10.50% உள் ஒதுக்கீட்டை நாம் வெற்றிகரமாக வென்றெடுத்தோம். அது மாபெரும் சமூகநீதி வெற்றி. அந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பணிகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.

தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் 5 இடங்களில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு நமது பிரதிநிதிகளை அனுப்பினோம். மேலும் 6 தொகுதிகளில் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். ஒட்டுமொத்தமாக பார்த்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றியை பெற முடியாமல் போயிருக்கலாம். ஆனால், மக்கள் மனங்களை வென்றிருக்கிறோம். இனி வரும் காலங்களில் நமக்கு கிடைக்கப்போவது வெற்றி... வெற்றி... வெற்றி தான். வேறொன்றுமல்ல.

தமிழ்நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சியை விடவும் துடிப்பான, பொறுப்பான அரசியல் கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி தான். தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்களைக் கொண்ட இயக்கமும் பாட்டாளி மக்கள் கட்சி தான்.  அந்த பெருமைக்கு காரணம் சந்தேகமே இல்லாமல் நீங்கள் தான். பாட்டாளி மக்கள் கட்சியின் இதயமும் நீங்கள் தான்.... அதில் ஏற்படும் உயிர்த்துடிப்பும் நீங்கள் தான். இதயம் இல்லாமல் உடலின் இயக்கம் இருக்க முடியாது என்பதைப் போலவே, நீங்கள் இல்லாமல் பாட்டாளி மக்கள் கட்சியும் இல்லை. உங்களால் தான் பாட்டாளி மக்கள் கட்சி துடிப்பாக இயங்குகிறது

வழக்கமாக பாட்டாளி மக்கள் கட்சியின் ஆண்டு விழா நாளில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிகளும், பொதுக்கூட்டங்களும் அதிக அளவில் நடைபெறும். ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பில்லாத சூழலில், வாய்ப்புள்ள பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் கொரோனா நோய்ப்பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை கடைபிடித்து தங்களின் வீடுகளில் கொடியேற்றி 33&ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும்படி கேட்டுக் கொள்கிறேன். என் மனதில் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும் குரல், ‘‘ எப்போது பாட்டாளி சொந்தங்களைச் சந்திக்கப் போகிறேன்?’’ என்பது தான். மிக விரைவிலேயே அந்த நாள் வரும். அப்போது உங்களை சந்திக்க  ஆவலுடனும், எதிர்பார்ப்புகளுடனும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages