தமிழறிஞர் இளங்குமரனார் மறைவுக்கு மருத்துவர்
ச. இராமதாசு இரங்கல்
தமிழறிஞரும், தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவருமான தமிழ்க்கடல் புலவர் இரா. இளங்குமரனார் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தமிழாசிரியராக பணியைத் தொடங்கிய இரா. இளங்குமரனார் அவர்கள் 500க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். செந்தமிழ்ச்சொற்பொருட்களஞ்சியம் (14தொகுதிகள்) தேவநேயப்பாவாணரின் ஆய்வுப்பிழிவான 'தேவநேயம்' (10தொகுதிகள்) முதலான அரிய நூல்களை படைத்தவர் இவர். தனித் தமிழ் பயன்பாட்டை வலியுறுத்தி பல இயக்கங்களை நடத்தியவர்; அதற்காக பெரும் பங்களித்தவர்.
எனக்கு மிகவும் நெருக்கமான தமிழறிஞர்களில் புலவர் இரா. இளங்குமரனாரும் ஒருவர். பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை, தமிழ் ஓசை, மக்கள் தொலைக்காட்சி, தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார். தனித்தமிழ் பயன்பாட்டை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய பல்வேறு பணிகளுக்கு துணை நின்றவர்.
தமிழறிஞர் இளங்குமரனாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment