குடும்பங்களில் நடக்கும் தமிழ்க் கொலை - மருத்துவர் இராமதாசு அய்யா வேதனை.
உலகின் மூத்த மொழி தமிழ்... உலகின் மூத்த நாகரிகம் தமிழர் நாகரிகம்... கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி என்பார்கள், இவற்றையெல்லாம் கேட்கும் போதே நமது மனதிற்குள் ஓர் பரவசம் பரவும். ஆகா.... நாமெல்லாம் தமிழ்க்குடியில் பிறக்க என்ன தவம் செய்தோமோ? என்று நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம். தமிழர் என்ற பெருமையில் வானத்தில் பறப்போம்!
ஆனால், ஒரு தமிழ்க் குடும்பத்தில் நடக்கும் உரையாடல்களை ஒரு நாள் முழுவதும் பார்த்தால் நம்மை நாமே வெறுத்து விடுவோம். இதுவா தமிழ்க்குடி என்ற வெறுப்பு நமக்கு ஏற்படும். அந்த அளவுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான உரையாடல்களில் தமிழ்க்கொலை நடக்கும்.
என்னைப் பொறுத்தவரை உலகில் மிகவும் அழகான சொல் அம்மா என்பது தான். ஆனால், இப்போது பெரும்பான்மையான வீடுகளில் அம்மா என்ற வார்த்தையை கேட்கவே முடிவதில்லை. மம்மி என்ற வார்த்தை தான் அம்மாவுக்கு அலுவல்பூர்வ வார்த்தையாக மாறி விட்டது. மம்மி என்ற வார்த்தையைக் கேட்டாலே முன்பெல்லாம் கோபம் வரும். இப்போது கோபம் வருவதில்லை. எல்லாம் சிறிய கோடு, பெரிய கோடு தத்துவம் தான். ஆம்.... மம்மி என்ற வார்த்தை இப்போது ’மாம்’ ஆகி விட்டது. மாம் என்ற வார்த்தையுடன் ஒப்பிடும் போது மம்மி என்ற வார்த்தை பரவாயில்லை என்பதாகி விட்டது.
அம்மாவுக்கு அடுத்த அழகான வார்த்தை அப்பா. அந்த வார்த்தையும் சிதைக்கப்பட்டு விட்டது. அப்பா என்பது டாடி என்றாகி விட்டது.... பின்னாளில் அதுவும் சுருங்கி ’’டாட்” என்றாகி விட்டது. அண்ணனும் தம்பியும் பிரதர் ஆகி ’புரோ’ ஆகிவிட்டனர். அதைவிடக் கொடுமை அக்காவும், தங்கையும் சிஸ்டர்களாகி அதிலிருந்து சுருங்கி ’சிஸ்’ ஆகி விட்டனர்.
தமிழ்க்குடிகள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து பழகியவர்கள். கடந்த சில பத்தாண்டுகளாக கூட்டுக் குடும்ப முறை படிப்படியாக குறைந்து, தனிக் குடும்ப முறை அதிகரித்துவிட்டது. இதை நினைத்து நான் பல நேரங்களில் வேதனைபட்டிருக்கிறேன். ஆனால் இப்போது அதுவும் ஒரு வகையில் நல்லது தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை உறவுமுறைக்கான சொற்கள் எப்படி சிதைக்கப்பட்டுவிட்டனவோ, அதேபோல் தாத்தா, பாட்டி என்ற சொற்களும் சிதைக்கப்பட்டுவிட்டன. தாத்தா என்ற சொல் கிராண்ட் ஃபாதர் ஆகி, கிராண்ட்பா என்று சுருக்கப்பட்டுவிட்டது. பாட்டியும் கிராண்ட் மதராகி, கிராண்மா என்றாகிவிட்டார். கூட்டுக் குடும்ப முறை இருந்தால் ஒவ்வொரு வீட்டிலும் இந்த தமிழ்க் கொலை நடந்து கொண்டிருக்கும். ஆனால், இப்போது தனிக் குடும்ப முறை காரணமாக எங்கோ ஒரு சில வீடுகளில் மட்டும் தான் இந்தக் கொடுமை நடக்கிறது. அதுவரை நல்லது தானே!
நாளை...
உணவுகளில் தமிழ் படும் பாடு!
No comments:
Post a Comment