அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடனான உறவில் விரிசல் தனது நாட்டு தூதர்களை திரும்ப அழைத்தது ஃபிரான்ஸ் அரசு - Agnipuratchi

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடனான உறவில் விரிசல் தனது நாட்டு தூதர்களை திரும்ப அழைத்தது ஃபிரான்ஸ் அரசு

Share This

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடனான உறவில் விரிசல் தனது நாட்டு தூதர்களை திரும்ப அழைத்தது ஃபிரான்ஸ் அரசு

பிரான்சுடன் செய்து கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் ஒப்பந்தத்தை முறிப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா அறிவித்ததை அடுத்து முன் எப்போதும் இல்லாத வகையில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுடன் இருபுல (Diplomatic) உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

2016 இல் 40 பில்லியன் டாலர் மதிப்பில் (₹2.94 இலட்சம் கோடி) பிரெஞ்சு நிறுவனமான Naval's Group உடன் போடப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் கொள்முதல்  ஒப்பந்தத்தை முறிப்பதாகவும் அதற்கு பதிலாக அமெரிக்கா - இங்கிலாந்து நாடுகளிடம் ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மையின் (Trilateral Security Partnership) கீழ் எட்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு வியாழக்கிழமை அன்று தெரிவித்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட , ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை  இந்த கொள்முதல்  ஒப்பந்தத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர் என்றும் மேலும் கடந்த ஜூன் மாதத்தில் பிரெஞ்சு குடியரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன்  ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு விருந்தளித்தபோது இரு நாடுகளின் பல ஆண்டுகால நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து பாரட்டியதாகவும் , இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையிலான முடிவை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளதாக ஃபிரான்ஸ் தரப்பில் தெரிவித்துள்ளது.

இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவிக்கும் விதமாக புதிய ஒப்பந்தம் குறித்து முன் கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என ஃபிரான்ஸ் கூறுவது  தவறு என்றும்,  கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற  பிரெஞ்சு குடியரசுத் தலைவர் உடனான பேச்சுவார்த்தையில் கூட  ஆஸ்திரேலியா - Naval Group ஒப்பந்தத்தை முறிப்பது குறித்த  சாத்தியத்தை எழுப்பியதாக ஆஸ்திரேலிய பிரதமர் மறுப்பு தெரிவித்தார்.

எனினும் இந்தோ- பசிபிக் பெரும்பரப்பில் உள்ள முதன்மையான நாடுகளில் ஒன்றான   ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு ஃபிரான்ஸ் அரசை மிகவும் மிகுந்த  கோபமூட்டியிருக்கக்கூடும். அதன் காரணமாக தான் 'ஆஸ்திரேலிய அரசு எங்களை முதுகில் குத்தி விட்டதாக' ஃபிரான்ஸ் அரசு உடனடி எதிர் வினையாற்றி விட்டு தனது தூதர்களை திரும்ப அழைத்து மிகத் தீவிரமாக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

தூதர்களை திரும்ப அழைத்தது பற்றி "வேறு எந்தவொரு  வழியும் இல்லாமல் இந்த கடுமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக" பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் வஸ் லே ட்ரியன் தெரிவித்தார்.

ஃபிரான்ஸ் தனது நாட்டு தூதரை திரும்பப் பெற்றது வருத்தமளிக்கிறது. எங்களது ஒப்பந்த முறிவு குறித்த முடிவு ஃபிரான்ஸ் நாட்டுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் எங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு இந்த கடினமான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். இது தவிர்த்த இன்ன பிற பொருள்களில் (Matters) இரு நாட்டு உறவுகள் வளர்ச்சி வளர்ச்சி குறித்து ஆராய்வோம்  என ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் மரிஸ் பயினே தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், பிரான்ஸ் ஒரு 'முதன்மை நட்பு நாடு' என்றும், குறுகியகால  வேறுபாடுகளைத் தீர்க்க அமெரிக்கா வரும் நாட்களில் ஈடுபடும் என்றும் கூறினார்.

இந்த முத்தரப்பு கூட்டாண்மையில் எஞ்சியுள்ள இங்கிலாந்து தொடர்பாக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சக அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை.  சந்தர்ப்பவாத முறையில் பிரிட்டன் இந்த ஒப்பந்தத்தில் இணைந்ததாகக் கருதுவதாக மட்டும் வெளியுறவு வட்டாரத்  தகவல்கள்  தெரிவிக்கின்றன.

இந்தோ - பசிபிக் பெரும்பரப்பை முன்னிறுத்தி எதிர்வரும் 24 ஆம் தேதி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் பங்கு பெறும் நாற்- தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில் உலக அரசியலில் இந்தோ - பசிபிக்கை மையப்படுத்திய இந்த நாடுகளின் உறவுகள்  விரிசல் குறித்து உலக அரசியலில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நன்றி
(Inputs from Reuters)
~ கதிர்கோ
Politics Without Party

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages