அதிர்ச்சியூட்டும் நாக்பூர் NEET தேர்வு- ஆள்மாறாட்ட முறைகேடு : விரிவான தகவல்கள்.
கடந்த 12.09.2021 அன்று நடைபெற்ற NEET தேர்வில் தில்லி மற்றும் ராஞ்சியில் உள்ள 5 தேர்வுக்கூடங்களில் நாக்பூரை சேர்ந்த NEET பயிற்சி மையம் மற்றும் பலர் ஆள்மாறாட்ட முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடுவண் புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த 2007 முதல் தில்லி மற்றும் நாக்பூரில் செயல்பட்டு வரும் RK Education Career Guidance என்கிற கல்வி தகவுரைஞர் மையத்தினை (Consultancy) பரிமல் கோட்பள்ளிவார் என்பவர் நடத்தி வருகிறார். இந்த மையம் NEET எழுதவுள்ள தேர்வர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு அதற்கு ஈடாக ₹50 லட்சம் வரை கட்டணம் பேசப்பட்டிருப்பதாகவும் CBI யின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு உடன்பட்ட பெற்றோரிடமிருந்து பின்-தேதியிட்ட காசோலைகள், தேர்வர்களின் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை உத்திரவாதமாக பெற்றுக் கொண்டு பேசப்பட்ட பணம் செலுத்திய பின்னர் திருப்பி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார் பரிமல் கோட்பள்ளிவார். மேலும், தேர்வின் போது ஆள்மாறாட்டம் ஏதுவாக அடையாள அட்டைகளில் புகைப்படங்களை உருமாற்றம் (Morphing) செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வர்களின் விண்ணப்ப Username மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை பெற்று முறைக்கேடு நடத்துவதற்கு ஏதுவாக தேர்வு மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. புகைப்படங்களை உருமாற்றம் செய்வதற்காக தேர்வர்களின் இ-ஆதார் நகல்கள் எடுக்கப்பட்டன. தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, ராஞ்சியில் ஒரு மையத்திலும், தில்லியில் நான்கு மையங்களிலும், திவாகர் மற்றும் முன்னா ஆகிய இரண்டு நபர்களின் உதவியுடன், ஐந்து மாணவர்களுக்காக இந்த ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 ன் விதிமுறைகளின் படி மோசடி, போலி மற்றும் பிற குற்றங்கள் கீழ் வழக்குப்பதியப்பட்டு CBI விசாரணையை தொடங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து நாக்பூர் பயிற்சி மையத்தை சேர்ந்த 5 பேர் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், தேர்வு நடைபெற்ற நாளன்று குற்றச்சாட்டுக்கு உள்ளான தேர்வர்கள் மற்றும் அவருக்கு பதில் போலியாக தேர்வு எழுத திட்டமிடப்பட்ட நபர்கள் தேர்வுக் கூடத்திற்கு வருகை தரவில்லை எனவும் வருகைப் பதிவேட்டில் "Absent" என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் CBI sources என குறிப்பிட்டு "தி இந்து" நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. எனவே எவ்விதமாக முறைகேட்டில் ஏற்பட இந்த ₹50 இலட்சம் தொகை ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணையின் அடிப்படையில் உண்மைகள் வெளி வரக் கூடும்.
தோண்ட தோண்ட கிளம்பும் பூதம் போல 12.09.2021 இல் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் NEET சார்ந்த முறைகேட்டுச் செய்திகள் மருத்துவப் படிப்புகள் குறித்த கனவோடு NEET தேர்வு எழுதி காத்திருக்கும் இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு பேரதிர்ச்சி அளித்து வருகின்றன.
நன்றி: ~ கதிர் கோ
No comments:
Post a Comment