சமூக நீதி எவ்வாறு சமூக முன்னேற்றத்தை, அரசியல் அதிகாரத்தைக் கொடுக்கும்? ஓர் ஈழவ எடுத்துக்காட்டு! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சமூக நீதி எவ்வாறு சமூக முன்னேற்றத்தை, அரசியல் அதிகாரத்தைக் கொடுக்கும்? ஓர் ஈழவ எடுத்துக்காட்டு! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சமூக நீதி எவ்வாறு  சமூக முன்னேற்றத்தை, அரசியல் அதிகாரத்தைக் கொடுக்கும்?
ஓர் ஈழவ எடுத்துக்காட்டு! - மருத்துவர் இராமதாசு அய்யா

கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான வி.எஸ். அச்சுதானந்தன் அவர்கள்  கடந்த  அக்டோபர் 20-ஆம் தேதி தமது 98-ஆவது பிறந்தநாளை நிறைவு செய்து 99-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்தார். அவர் நூறாண்டு காண வேண்டும்.

அவரது பிறந்தநாள் குறித்த செய்தியைப் படிக்கும் போது, கேரளத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் குறித்த பல உண்மைகள் எனது மனதில் வந்து சென்றன.

நான் ஏற்கனவே ‘ சுக்கா... மிளகா... சமூகநீதி?’ நூலில் குறிப்பிட்டிருந்ததைப் போன்று கேரளத்தின் பூர்வகுடி மக்களான ஈழவர்கள் பார்த்தாலே தீட்டு எனும் அளவுக்கு மோசமான தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் நம்பூதிரிகளிடமிருந்து 36 அடி தூரத்திற்கு அப்பாலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திற்கு அப்பாலுமே நிற்க முடியும். அதற்கு குறைவான தொலைவில் ஈழவர் ஒருவரை ஒரு நம்பூதிரி பார்க்க நேரிட்டால் அவர் தீட்டுப்பட்டவராகக் கருதப்படுவார். அவ்வாறு தீட்டுப்பட்டவர் ஆற்றிலோ, குளத்திலோ மூழ்கி நீராடி தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் அளவுக்கு கேரளத்தில் தீண்டாமை தலைவிரித்தாடியது.

ஈழவர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிந்து மார்பை மறைத்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு தனியாக முலைக்கரம் என்ற பெயரில் வரி செலுத்த வேண்டும். அவ்வாறு வரி செலுத்துவதாலேயே அவர்கள் எல்லா நேரமும் மார்பை மறைத்துக் கொள்ள முடியாது. முலைக்கரம் வரி செலுத்தினாலும், பிராமண நம்பூதிரிகள் எதிரில் வந்தால் தோள் சீலையை விலக்கி மார்பை காட்டி தான் நிற்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.  19-ஆம் நூற்றாண்டில் கேரள மாநிலம் சேர்தலா என்ற சிற்றூரில் நன்கேலி என்ற ஈழவ பெண் வாழ்ந்து வந்தார். ஒருமுறை நாயர்கள் முலைக்கரம் வரி வசூலிக்க வந்தபோது, ‘‘சற்று பொறுங்கள்’’ என்று கூறி உள்ளே சென்ற அந்த பெண்மணி, ஒரு தலைவாழை இலையில் தமது இரு முலைகளையும் அறுத்து வைத்து கொண்டு வந்து, நாயர்களிடம் கொடுத்து விட்டு, அங்கேயே மயங்கி விழுந்து இறந்தார். அதைக் கண்டு அதிர்ந்து போன நாயர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர்.

கல்வி அவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. வேலைவாய்ப்பு அவர்களுக்கு தொடுவானமாக இருந்தது. இவையெல்லாம் கடந்த 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும்  நிலவிய நிலைமைகள்.

ஆனால், கடந்த ஒரு நூற்றாண்டில் நிலைமை தலைகீழாக மாறி விட்டது. சொந்த ஊரில் நிம்மதியாக நடமாட முடியாமல், கல்வி கற்க முடியாமல், வேலைக்கு செல்ல முடியாமல், தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட ஈழவர்கள், இன்று உலகில் எதையும் சுண்டு விரலால் சாதிக்க முடியும் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளனர். கேரள அரசின் அனைத்து உயர்பதவிகளிலும் அவர்கள் தான் வீற்றிருக்கின்றனர். மத்திய அரசின் முக்கிய பதவிகள் அனைத்தும் அவர்கள் வசமே உள்ளது. உலகின் பல நாடுகளில் குடியேறியுள்ள ஈழவர்கள் அங்கும் முக்கியப் பதவிகளை வகித்து வருகின்றனர். இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமனை 1980-களின் இறுதியில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து சந்தித்து பேசிய போது, ஈழவர்களின் வளர்ச்சி குறித்து பொறாமையுடன் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். ஒரு காலத்தில் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த ஈழவர்கள் அந்த அளவுக்கு உலக அளவில் உயர்ந்துள்ளனர்.

இந்த சாதனைகளுக்கு பின்னணியில் இருப்பது ஸ்ரீ நாராயணகுரு  வழங்கிய கல்வியும், கேரளத்தில் ஈழவ மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்ட 14%  இட ஒதுக்கீடும் தான்.

கேரளத்தில் வழங்கப்பட்ட  14% இட ஒதுக்கீடு ஈழவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூகத் தகுதியை மட்டும் பெற்றுத்தரவில்லை.  அதைக்கடந்து அரசியல் அதிகாரங்களையும் வென்றெடுத்துக் கொடுத்துள்ளது.

நாயர்களும், நம்பூதிரிகளும் மட்டும் ஆதிக்கம் செலுத்திய கேரளத்தில் இப்போது ஈழவர்களின் ஆதிக்கம் தான் நிலவுகிறது. 2006-ஆம் ஆண்டு  இடதுசாரி கூட்டணி ஆட்சியைப் பிடித்த போது ஈழவர் சமுதாயத்தைச் சேர்ந்த வி.எஸ்.அச்சுதானந்தன் தான் முதலமைச்சர் ஆனார். 2016-ஆம் ஆண்டு இடதுசாரி கூட்டணி ஆட்சியைப் பிடித்த போது ஈழவர் சமுதாயத்தைச் சேர்ந்த அச்சுதானந்தன் மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டது. 

ஆனால், உட்கட்சி மோதல் காரணமாக அந்த வாய்ப்பு அவரிடமிருந்து  பறிக்கப்பட்டது. அவருக்கு மாற்றாக அவரது எதிரணியைச் சேர்ந்த பினராயி விஜயன் முதலமைச்சராக்கப்பட்டார்.  அச்சுதானந்தனிடமிருந்து தான் முதல்வர் வாய்ப்பு பறிக்கப்பட்டதே தவிர,  ஈழவர்களிடமிருந்து அந்த வாய்ப்பு பறிக்கப்படவில்லை. எப்படி என்கிறீர்களா? ஆம்... முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பினராயி விஜயனும் ஈழவர் தான். 2016-ஆம் ஆண்டில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2021-ஆம் ஆண்டிலும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் தொடர்கிறார்.

அச்சுதானந்தனோ, பினராயி விஜயனோ  தாங்கள் சார்ந்த சாதிகளை தூக்கிப் பிடிப்பவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஈழவர்கள் சமுதாயம்  அவர்களை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் கேரள அரசியலில் ஈழவர்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது.

இவை அனைத்துக்கும் அடிப்படை  அரை நூற்றாண்டுக்கு முன் அவர்களுக்கு வழங்கப்பட்ட 14% இட ஒதுக்கீடு.

வாழ்க சமூக நீதி!   அனைவருக்கும் கிடைக்கட்டும் சமூக முன்னேற்றம்!!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages